கூட்டுறவு சங்கங்கள் கலைப்பு..? வெளியாகிறதா முக்கிய அறிவிப்பு..? பின்னணி இது தான்..!
சென்னை: கூட்டுறவு சங்கங்கள் மீதான நகைக்கடன் மோசடி புகார் எதிரொலியாக அதனை கூண்டோடு கலைத்துவிட்டு புதிதாக தேர்தல் நடத்துவது குறித்து ஆட்சி மேலிடம் ஆலோசித்து வருகிறது.
இது தொடர்பாக முக்கிய அறிவிப்பு 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கு பிறகு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கூட்டுறவு சங்கங்களில் நகையை அடமானத்திற்கு வாங்காமலேயே கடன் கொடுத்திருப்பதும், போலி நகைகளுக்கு கடன் வழங்கியிருப்பதும், ஒரே நபர் பல கூட்டுறவு சங்கங்களில் கடன் வாங்கியிருப்பதும் பல இடங்களில் நடந்துள்ளது. இது தொடர்பான விவரங்கள் தோண்ட தோண்ட வெளிச்சத்திற்கு வரத் தொடங்கியுள்ளன.
குறிப்பாக, திருப்பத்தூரில் ஒரே ஆதார் எண்ணை பயன்படுத்தி 3.5 கிலோ தங்க நகைகளை அடமானம் வைத்ததாக ரூ.74 லட்சம் கடன் பெற்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் அந்தியோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டை களை பயன்படுத்தி ரூ.70 லட்சம் நகை மோசடி நடந்துள்ளது.
இந்நிலையில் கூட்டுறவு சங்கங்களை முழுமையாக கலைத்துவிட்டு புதிதாக தேர்தல் நடத்த வேண்டும் அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இதனிடையே இது குறித்து ஆலோசித்துள்ள ஆட்சி மேலிடம் புதிதாக கூட்டுறவு சங்கத் தேர்தலை நடத்துவது பற்றி சிந்தித்து வருகிறது.
மேலும் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் ஒன்றியம், பேரூர், என பல உள்ளாட்சி அமைப்பு பதவிகளுக்கு போட்டியிட சீட் கிடைக்காதவர்கள் அதிருப்தியில் இருப்பதால், அவர்களுக்கு கூட்டுறவு சங்கங்களில் புதிதாக நடத்தும் தேர்தல் மூலம் பதவி வழங்க முடியும் என திமுக தலைமை நினைக்கிறது.
அண்மையில் திருப்பத்தூரில் திமுக முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், கூட்டுறவு சங்கங்களை கலைப்பது தொடர்பாக விரிவாக ஆலோசித்திருக்கிறார். இதனிடையே 4 மாதங்களுக்குள் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையும் நடத்த வேண்டும் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், அந்த தேர்தலுக்கு பிறகு கூட்டுறவு சங்கத் தேர்தல் நடத்தப்பட வாய்ப்புள்ளது.
இதற்கிடையே உள்ள இடைப்பட்ட காலத்தில் அலுவலர்களை கொண்டு கூட்டுறவு சங்கங்கள் கண்காணிக்கப்படும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications