ஐயர் ஆதிக்கத்துக்கு மத்தியில்.. பெரியாரே A2B ஹோட்டல் வளர காரணம்! ஓனர் பேச்சால் கொதித்த இந்துத்துவா
சென்னை: A2B எனப்படும் அடையார் ஆனந்தபவன் உணவகம் மற்றும் அதன் உரிமையாளருக்கு எதிராக ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகிறார்கள் இந்துத்துவாவினர். என்ன காரணம்? விரிவாக பார்ப்போம்.
தலைசிறந்த தமிழ் சைவ உணவகம் என்று கேட்டால் பலரும் கைகாட்டும் இடம் அடையார் ஆனந்த பவன். A2B என்ற இந்த தலைமுறை அழைத்தாலும் காலங்காலமாக நிலைத்திருக்கும் ஆனந்த பவன் என்ற பெயரே இன்று வரை 90ஸ் கிட்ஸ்கள் மற்றும் அதற்கு முந்தைய தலைமுறையினரால் உச்சரிக்கப்படுகிறது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த திருப்பதி ராஜாவின் குலத் தொழில் விவசாயமாக இருந்தாலும் இவருக்கு சமையலில் கொள்ளை பிரியம். எனவே ராஜபாளையத்தில் இனிப்பு பலகார கடையை தொடங்கிய இவரது பயணம் அடையார் ஆனந்த பவனாக இன்று வளர்ந்து நிற்கிறது.

இந்த சாதியினர் இந்த தொழில்தான் செய்ய வேண்டும் என்ற குலத் தொழில் முறை உச்சத்தில் இருந்த 1950 - 60களில் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ச்சியடைய தொடங்கி 1979 ம் ஆண்டு சென்னை வண்ணாரப்பேட்டையில் முதலில் ஸ்ரீ ஆனந்தா என்ற பெயரில் இயங்கத் தொடங்கி இன்று தமிழ்நாடு, வெளி மாநிலங்கள், வெளிநாடுகள் என 150 அடையார் ஆனந்த பவன் கிளைகள் இயங்கி வருகின்றன. 12 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இந்த உணவகங்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இப்படி உச்சத்தில் இருக்கும் A2B க்கு எதிராக இந்துத்துவா ஆதரவாளர்கள் ட்விட்டரில் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளார்கள். Boycott A2B என்ற ஹேஷ்டேக்கை ஆயிரக்கணக்கானோர் பகிர்ந்து வருகின்றனர். இதற்கு காரணம், அதன் உரிமையாளர் ஸ்ரீநிவாச ராஜா அண்மையில் நடிகர் சித்ரா லட்சுமணனின் யூடியூப் சேனலில் அளித்த பேட்டிதான். நடிகர் சித்ரா லட்சுமணன், "ஒரு காலத்தில் இந்த சைவ உணவக தொழில் பெரும்பாலும் ஐயர்கள் கையில்தான் இருந்தது. அதற்கு பிறகுதான் மெல்ல மெல்ல மாறுதலுக்கு வந்தது. இந்த மாற்றம் எப்படி நிகழ்ந்தது?" என்று கேள்வி எழுப்பினார்.
சைவ ஓட்டல்கள் பிராமணர்கள் வசமிருந்த நிலைல எப்டி இந்த மாற்றம் வந்தது னு அடையார் ஆனந்தபவன் நிறுவனர் கிட்ட கேட்டதுக்கு..
— Dr.Aravind Raja (@AravindRajaOff) October 19, 2023
"பெரியார்" தான் காரணம் னு சொல்லிருக்கார்..🔥 pic.twitter.com/rGfFd53noR
இதற்கு பதிலளித்த A2B உரிமையாளர் ஸ்ரீநிவாச ராஜா, "யார் வேண்டுமானாலும் இதை செய்யலாம் என்ற நிலை வருவதற்கு முக்கிய காரணமாக தந்தை பெரியாரை சொல்ல வேண்டும். குலத் தொழில் முறையை மாற்றிக் காட்டியவர் தந்தை பெரியார்தான். யார் வேண்டுமானாலும் எந்த தொழிலை வேண்டுமானாலும் செய்யலாம் என்று சொன்னார். காலம் மாறுகிறது. அரசின் ஆதரவு கிடைக்கிறது. வங்கிகள் லோன் கொடுக்கின்றன. ஒரு குறுப்பிட்ட சமுதாயம் மட்டுமே செய்து கொண்டு இருந்த தொழிலை யார் வேண்டுமானாலும் செய்யலாம். கடலில் யார் வேண்டுமானாலும் போய் மீன் பிடிக்கலாம் என்பதை போல் எல்லோரும் செய்கிறார்கள்." என்றார்.
ஸ்ரீநிவாச ராஜாவின் இந்த வீடியோவை பெரியாரிஸ்டுகள், திராவிட, சமூக நீதி சிந்தனையாளர்கள் பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து பெரியாரை சிலாகித்து வந்தனர். மறுபக்கம் இந்துத்துவா ஆதரவாளர்கள் பெரியாரை ஆதரித்ததற்காக A2B உணவகத்தை புறக்கணிக்க வேண்டும் என வலியுறுத்தி எக்ஸ் சமூக வலைதளத்தில் #BoycottA2B ஹாஷ்டேக்கை ஆயிரக்கணக்கில் டிரெண்ட் செய்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications