Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சரமாரி கேள்வி எழுப்பிய பசுமை தீர்ப்பாயம்! கச்சா எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணியில் தமிழக அரசு தீவிரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மிக்ஜாம் புயல் மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் கச்சா எண்ணெய் கலந்திருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், கடலில் கலந்த எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கடந்த 4ம் தேதி மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழை, ஒட்டு மொத்த சென்னையையும் புரட்டி போட்டுவிட்டது. 2015ம் ஆண்டு ஏற்பட்ட பெரும் வெள்ளம் சென்னைக்கு முக்கிய பாடமாக இருந்த போதும், அந்த அனுபவத்தை கொண்டு இந்த புயல் மழையை எதிர்கொள்ள முடியவில்லை. மழை நின்று 8 நாட்கள் ஆகியுள்ள நிலையில் தற்போதுதான் சென்னை இயல்பு நிலைக்கு திரும்ப தொடங்கியுள்ளது.

After the order of the Green Tribunal, the work of disposal of crude oil waste in Ennoor is intensified

ஆனால் வட சென்னையின் எண்ணூர், எர்ணாவூர் பகுதிகள் இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. காரணம் வெள்ளம் வந்தபோது அத்துடன் கலந்து வந்த கச்சா எண்ணெய் கழிவுகள்தான். மழை வெள்ளம் வீடுகளை சூழ்ந்த நிலையில், கச்சா எண்ணெய் கழிவுகளும் வீடுகளை சூழ்ந்தன. இதன் காரணமாக மூச்சுத்திணறல், தோல் அரிப்பு, கண் எரிச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டன. இது குறித்து புகார் அளிக்கப்பட்டதையடுத்து இந்த விவகாரம் வெளியில் தெரிந்திருக்கிறது.

இது தொடர்பாக கொடுங்கையூரில் ஆய்வு மேற்கொண்ட மாசு கட்டுப்பாட்டு வாரியம், மணலி சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன்(சிபிசிஎல்) நிறுவனத்திலிருந்து மழை நீர் வெளியேற்றப்பட்டபோது அதன் மூலம் கச்சா எண்ணெய் வெளியேறியுள்ளது என்று விளக்கமளித்துள்ளது. இந்த விவகாரம் பெரியதாக வெடித்ததையடுத்து, தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் தானாக முன் வந்து வழக்குப்பதிவு செய்திருந்தது. இந்த வழக்கு கடந்த 9ம் தேதி தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தின், நீதித்துறை உறுப்பினர் நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா மற்றும் நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபால் கொண்ட அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

விசாரணையில் மாசு கட்டுப்பாடு வாரியத்திடம் நீதிபதிகள் சரமாரியான கேள்விகளை எழுப்பினர். அதாவது மாசு கட்டுப்பாடு வாரியம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சாய் சத்யஜித், "இது எண்ணெய் கசிவு கிடையாது. எண்ணெய் தடயங்கள்தான் (Traces Of Oil)" என்று கூறியிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நீதிபதிகள், "நீர்வளத்துறை அறிக்கை, 5 கிலோமீட்டருக்கு பெரும் அளவில் எண்ணெய் கழிவுகள் காணப்பட்டதாக தெரிவிக்கிறது. 5 கிமீ பரவியுள்ள எண்ணெய் கழிவை எப்படி Trace of Oil என மாசு கட்டுப்பாடு வாரியம் கூற முடியும்" என்று கேள்வியெழுப்பினர்.

இந்த விவகாரம் தொடர்பாக ஆய்வு செய்ய வருவாய் நிர்வாக ஆணையர் தலைமையில் 9 பேர் கொண்ட உயர் மட்ட குழுவை அமைத்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. மறுபுறம் இந்திய கடற்படை ஹெலிகாப்டர் மூலம் நடத்திய ஆய்வில், எண்ணூரை ஒட்டிய கடல் பகுதியில் சுமார் 20 ச.கி.மீ பரப்பளவுக்கு எண்ணெய் கழிவுகள் கலந்திருப்பதை கண்டுபிடித்தது. இது இந்த விவகாரம் தொடர்பான தீவிரத்தன்மையை மேலும் அதிகரித்திருக்கிறது.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், எண்ணெய் பரவலை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் திருப்திகரமாக இல்லை என பசுமை தீர்ப்பாயம் அதிருப்தி தெரிவித்திருக்கிறது. அதாவது தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், "கடந்த 9ஆம் தேதி ஆய்வு செய்தபோது சிபிசிஎல் ஆலையிலிருந்து வடிகால் வழியாக வெளியேறிய எண்ணெய், பக்கிங்காம் கால்வாய் முதல் கழிமுகம் வரை 11கிமீ தூரத்திற்கு பரவியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது" என்று கூறினார்.

இதில் குறுக்கிட்ட நீதிபதிகள், "7ஆம் தேதி சமர்ப்பித்த அறிக்கையில் சிபிசிஎல் ஆலையின் தெற்கு வாசலில் மட்டுமே எண்ணெய் காணப்பட்டதாக கூறினீர்கள். அன்று ஆய்வு செய்யும்போது குழாய்கள், எண்ணெய் கலன்களில் கசிவு இருக்கிறதா என்று பார்க்கவில்லையா? எண்ணெய் கசிவு நடந்து 5 நாள் ஆன பின்னரும்கூட எண்ணெய் தடுப்பு மிதவைகள் அமைக்கப்படவில்லை என அரசு கூறும் பதில் திருப்தி அளிக்கவில்லை. இது ஒரு நெருக்கடி நிலை என்பது தெரியவில்லையா?" என்று கேள்வியெழுப்பினர்.

மேலும், கடலில் கலக்கப்பட்டிருக்கும் எண்ணெய் கழிவுகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். இதனையடுத்து தமிழக அரசு கழிவுகளை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இது குறித்து தமிழக சுற்றுசூழல்துறை கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாகு கூறுகையில், "எண்ணூர் கிரீக் பகுதியில் கடலில் கலந்த எண்ணெய் கழிவை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கழிவுகள் அதிகமாக தேங்கியுள்ள குறிப்பிட்ட இடங்களில் இதனை அகற்ற 'பூம்ஸ்' எனப்படும் சிறப்பு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன" என்று விளக்கமளித்திருக்கிறார்.

கழிவுகள் அகற்றிய பின்னர் பல்லுயிர் இழப்புகள் குறித்து விரைவாக மதிப்பிடப்படும் என்று தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், சுற்றுசூழல், காலநிலை மாற்றம், வனத்துறை, கால்நடை, மீன் வளத்துறை, மீனவர் நலத்துறை உள்ளிட்ட அதிகாரிகளுடன் இணைந்து, எண்ணெய் கழிவுகளிலிருந்து மக்களை மீட்கும் பணி தொடர்வதாகவும், இவ்வாறு அகற்றப்படும் எண்ணெய், கழிவுகள் உரிமம் பெற்று குமிடிப்பூண்டியில் பாதுகாப்பாக வைக்கப்படும் என்றும் தமிழக அரசு கூறியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+