பாஜக பக்கம் டிடிவி தினகரன் வந்ததுமே, அதிமுகவில் நடந்த முதல் மாற்றம்.. யாரந்த "மூன்றாவது கண்".. நிஜமா
சென்னை: தமிழக அரசியலில் சமீப காலமாக சில மாற்றங்களை கண்டுள்ளது... இதில் பிரதானமாக பார்க்கப்படுவது டிடிவி. தினகரன் தன்னுடைய அமமுகவை, அதிமுக பாஜக கூட்டணியில் இணைத்ததுதான்.. இது முக்கியமான பரிணாமமாகும்... தினகரன் வந்ததையடுத்து சில சாதகமான ரிசல்ட் கூட்டணிக்குள் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. அதேசமயம், அதிமுகவில் ஒரு முக்கிய மாற்றம் நடப்பதாகவும் கூறப்படுகிறது.. அது என்ன?
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, தினகரன் சில தென் தமிழக மாவட்டங்களில் தனித்துவமான அரசியல் அடையாளமாக இருந்தார். குறிப்பாக முக்குலத்தோர் சமூகத்தில் அவருக்கு உணர்ச்சிப்பூர்வ ஆதரவு உண்டு. பெரிய அளவில் இல்லாவிட்டாலும், சில தொகுதிகளில் அவரது வாக்குகள் தேர்தல் முடிவை மாற்றக்கூடியவை...

அமமுக வேட்பாளர்கள்
கடந்த சில தேர்தல்களில், அதிமுக மற்றும் அமமுக வேட்பாளர்கள் ஒரே சமூக வாக்குகளைப் பங்கிடுவதால் வாக்கு பிளவு ஏற்பட்டது. இந்த பிளவு பல இடங்களில் திமுகவுக்கு சாதகமாக இருந்தது...
தினகரன் கூட்டணியில் சேருவதன் மூலம், இந்த வாக்கு பிளவு குறையும் வாய்ப்பு அதிகரிக்கிறது. அதனால் அதிமுக, பாஜக கூட்டணி ஒரே சமூக வாக்குகளை ஒருங்கிணைத்து வெற்றிக்கு முன்னிலை பெறக்கூடும்..
அவ்வளவு ஏன்? சில தொகுதிகளில், தினகரனின் குறைந்த அளவிலான வாக்குகளும் முடிவை மாற்றக்கூடியதாகவும் இருக்கும்... அதனால்,டிடிவி தினகரன் கூட்டணிக்கு மிகப்பெரிய வாக்குகள் அளிக்காதவராயினும், சில முக்கிய தொகுதிகளில், அவரது வாக்குகள் முடிவுகளை மாற வைக்கக்கூடிய அளவில் தாக்கம் உண்டு...
அதே சமயம், அதிமுகவின் உள்நிலை மாற்றங்களையும் சற்று உற்று நோக்க வேண்டியிருக்கிறது.. தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுக இணைந்த பிறகு, தினகரனுடன் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து பரிமாற்றம் செய்தார்.. இது சாதாரண அரசியல் மரியாதையாக இருந்தாலும்கூட, கட்சி உள்நிலையில் லேசான அதிர்ச்சியையே தந்துள்ளதாம்..
எடப்பாடி ரகசிய உத்தரவு?
அதுமட்டுமல்ல, முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள், தினகரனுடன் நெருக்கத்தில் இருப்பதாகவும் தெரிகிறது.. இந்த விஷயம் எடப்பாடி பழனிசாமியின் காதுகளுக்கும் எட்டியதாம்.. அதனால்தான், மறைமுகமான உத்தரவினை தன்னுடைய நிர்வாகிகளுக்கு பிறப்பித்துள்ளாராம்..
அதன்படி டிடிவி. தினகரனோடு முன்னாள் அமைச்சர்கள் தொடர்பில் இருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளாராம்..
இதற்காக ரகசிய கண்காணிப்பு குழுவும் அமைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த குழு, முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளை தீவிரமாக கண்காணிப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன..
ரகசிய கண்காணிப்பு
குறிப்பாக, அமமுக நிர்வாகிகளுடன் எந்தவித தொடர்பையும் வைத்துக்கொள்ளக் கூடாது என்று சொல்லி உள்ளாராம்.. இதற்கு காரணம், கடந்த காலத்தில் தினகரன், தனது நெருக்கத்தை பயன்படுத்தி, அதிமுகவில் முக்கிய பிரமுகர்களை பக்கத்தில் ஈர்த்து கட்சி கட்டுப்பாட்டை மாற்ற முயன்ற நிகழ்வுகள் நடந்துள்ளன..
இதற்காகவே ரகசிய கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு, முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் தீவிரமாக கண்காணிக்கப்படுவதாக தகவல்கள் கூறுகின்றன, .
ஆனாலும் முன்னாள் முக்கிய பிரமுகர்கள், தினகரனுடனான நெருக்கத்தை இழக்க விரும்பவில்லை என்றே தெரிகிறது..
தாக்கமும், வருகையும்
ஆக, தினகரன் கூட்டணியில் சேருவதால் அதிமுக, பாஜக கூட்டணிக்கு வாக்கு பிளவு குறையும், குறைந்த சதவீத வாக்குகளும் முடிவுகளை மாற்றும் தாக்கம் ஏற்படும், சமூக ஆதரவு ஒருங்கிணையும், மாநில அளவில் கூட்டணியின் வலிமை அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை..
அதேசமயம், தினகரனின் வருகையானது, அதிமுகவுக்குள் லேசான அதிர்வலையை உண்டுபண்ணியிருப்பதாகவே அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.. பொறுத்திருந்து பார்ப்போம்.












Click it and Unblock the Notifications