புயலை கிளப்பப்போகும் திமுக எம்பிக்கள்.. நாடாளுமன்றத்தில் கீழடி பற்றி கேள்வி எழுப்ப ஸ்டாலின் அறிவுரை
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று முதல்வர் ஸ்டாலின் திமுகவின் நாடாளுமன்ற எம்பிக்களுடன் முக்கிய மீட்டிங் நடத்தினார்.வரும் 21ம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில் எம்பிக்கள் எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்த அறிவுரைகளை வழங்கினார். அதன்படி கீழடி அகழ்வாராய்ச்சிக்கு அங்கீகாரம் கொடுப்பது தொடர்பாக விவாதிக்க திமுக எம்பிக்களுக்கு ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
ஆண்டுக்கு மூன்று முறை நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடந்து வருகிறது. ஆண்டின் தொடக்கத்தில் ஜனாதிபதி உரையுடன் பட்ஜெட் கூட்டத்தொடர், அதன்பிறகு மழைக்கால கூட்டத்தொடர், பிறகு குளிர்கால கூட்டத்தொடர் நடப்பது வழக்கம்.

அந்த வகையில் இந்த ஆண்டு தொடக்கத்தில் ஜனாதிபதி திரெளபதி முர்மு உரையுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து முடிந்தது. இதையடுத்து தற்போது மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற உள்ளது.
அதன்படி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் 21ம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தொடர் அடுத்த மாதம் 21ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தொடரையொட்டி அனைத்து கட்சி கூட்டம் நடந்து முடிந்தது. அதில் எதிர்க்கட்சி எம்பிக்கள் மத்திய அரசுக்கு ஆதரவு அளித்த நாடாளுமன்ற கூட்டத்தொடரை சுமூகமாக நடத்தி முடிக்க உதவ வேண்டும் என்று மத்திய அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்நிலையில் தான் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரையொட்டி திமுக எம்பிக்களின் கூட்டம் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. திமுக தலைவரும், முதல்வருமான முக ஸ்டாலின் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்க நாடாளுமன்ற திமுக லோக்சபா எம்பிக்கள், ராஜ்யசபா எம்பிக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. திமுக எம்பிக்கள் அனைவரும் இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.
இந்த மழைக்கால கூட்டத்தொடரில் மத்திய அரசு முக்கிய சட்ட மசோதாக்களை கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இந்த கூட்டத்தொடரில் திமுக எம்பிக்கள் எப்படி செயல்ட வேண்டும் என்பது பற்றி முதல்வர் ஸ்டாலின் அறிவுரைகளை வழங்கினார். மேலும் எந்த விதமான விவாதங்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பது பற்றி ஆலோசிக்கப்பட்டது.
குறிப்பாக சிவகங்கை மாவட்டம் கீழடி அகழ்வாராய்ச்சிக்கு அங்கீகாரம் கொடுக்காதது பற்றி கேள்வி எழுப்பவும், விவாதம் செய்யவும் முதல்வர் ஸ்டாலின் அறிவுரைகளை வழங்கி உள்ளார். கீழடி விஷயத்தில் மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் இடையே கருத்து மோதல்கள் நடந்து வரும் நிலையில் வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரிலும் இது எதிரொலிக்க உள்ளது.
இதுதவிர பீகார் சட்டசபை தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் திருத்தம் பெரும் விவாதமாகி உள்ளது. இதுதொடர்பான சந்தேகங்களை எழுப்பி மத்திய அரசிடம் விளக்கம் பெற வேண்டும் என்பது உள்பட பல்வேறு முக்கிய அறிவுரைகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.












Click it and Unblock the Notifications