ஸ்தம்பித்த தாம்பரம்.. சென்னையை விட்டு ரயிலில் கூட்டமாக வெளியேறிய வடமாநில தொழிலாளர்கள்! காரணம் இதோ
சென்னை: சென்னையில் இருந்து இன்று கூட்டம் கூட்டமாக வடமாநில தொழிலாளர்கள் மூட்டை முடிச்சுகளுடன் தங்களின் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர். இதனால் தாம்பரம் ரயில் நிலையம் ஸ்தம்பித்து போன நிலையில் பின்னணி குறித்த விபரம் வெளியாகி உள்ளது.
வடமாநிலங்களை சேர்ந்த ஏராளாமனவர்கள் தமிழ்நாட்டுக்கு வந்து தங்கி வேலை செய்து வருகின்றனர். கட்டடம், பாலம் கட்டுதல், ஓட்டல், கடைகளில் வேலை செய்வதோடு, பண்ணை தொழில், செங்கல் சூளை, சிறுவர்களுக்கான விளையாட்டு பொருட்கள், பானிபூரி விற்பனை செய்வது உள்பட பல பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தொழிற்சாலைகளிலும் ஏராளமானவர்கள் வேலை செய்து வருகின்றனர்.

இதற்கு முக்கிய காரணம் என்பது வடமாநிலங்களில் போதிய வேலைவாய்ப்பு இல்லாததும், அவர்களுக்கு உரிய சம்பளம் கிடைக்காததும் தான். ஆனால் தமிழ்நாட்டை பொறுத்தமட்டில் வடமாநில தொழிலாளர்களுக்கு ஏராளமான வேலைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதனால் அவர்கள் தமிழ்நாட்டுக்கு வந்து பணியாற்றி வருகின்றனர்.
இன்னும் சொல்லப்போனால் தமிழ்நாட்டில் சென்னை முதல் கன்னியாகுமரி வரை ஏறக்குறைய அனைத்து மாவட்டங்களிலும் வடமாநில தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இளைஞர்கள் தனியாகவும், திருமணம் ஆனவர்கள் குடும்பத்துடன் வந்து தொழிலாளர்களாக வேலை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தான் இன்று திடீரென சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் தங்கி வேலை செய்து வரும் வடமாநில தொழிலாளர்கள் தங்களின் உடைமைகள் அடங்கிய மூட்டை முடிச்சுகளுடன் கூட்டம் கூட்டமாக வெளியேறினார்கள். இதனால் பல ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதியது.
குறிப்பாக சென்னை தாம்பரம் ரயில் நிலையங்களில் ஒரே நேரத்தில் 4 ஆயிரத்துக்கும் அதிகமான வடமாநில தொழிலாளர்கள் கூடினர். இதனால் அந்த ரயில் நிலையம் ஸ்தம்பித்து போனது. இதுபற்றி விசாரித்தபோது தான் முக்கிய தகவல் வெளியானது. அதாவது நாளை மறுநாள் நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. தமிழ்நாட்டை விட வடமாநிலங்களில் விநாயகர் சதுர்த்தி என்பது மிகவும் பிரமாண்டமாக கொண்டாடப்படும்.

இந்நிலையில் தான் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை கொண்டாடும் நோக்கத்தில் அவர்கள் சென்னையில் இருந்து கூட்டம் கூட்டமாக ரயில்களில் சொந்த ஊருக்கு செல்வதும் தெரியவந்தது. மேலும் இன்று சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து மேற்கு வங்க மாநிலத்துக்கு மதியம் 2 மணிக்கு சிறப்பு ரயில் ஒன்று இயக்கப்பட்டது. இந்த ரயிலில் பயணிப்பதற்காக தான் ஒரே நேரத்தில் 4 ஆயிரத்துக்கும் அதிகமான வடமாநில தொழிலாளர்கள் தாம்பரத்தில் கூடிய நிலையில் சிறப்பு ரயிலுக்கு சென்றது தெரியவந்தது.
அதோடு தற்போது சென்னையில் இருந்து வெளியேறிய வடமாநில தொழிலாளர்களில் பெரும்பாலானவர்கள் மேற்கு வங்க மாநிலம், பீகார் மற்றும் ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது. மேலும் ஒரே நேரத்தில் ஏராளமான வெளிமாநில தொழிலாளர்கள் தாம்பரம் ரயில் நிலையத்தில் கூடியதால் அந்த இடம் ஸ்தம்பித்து போனது.












Click it and Unblock the Notifications