அகமதாபாத் விமான விபத்து.. பாலிசி உரிமைத்தொகையை எளிதாக பெற நிபந்தனைகள் தளர்வு.. எல்ஐசி அறிவிப்பு
சென்னை: அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினர் பாலிசி உரிமைத்தொகையை எளிதாக பெற நிபந்தனைகளை தளர்த்தி எல்.ஐ.சி. நிர்வாகம் உத்தரவிட்டிருக்கிறது. விபத்தில் இறந்தவர்கள் எல்.ஐ.சி. பாலிசிதாரர்களாக இருந்தால் அவர்களது குடும்பத்தினர் பாலிசி உரிமத்தொகையை பெறுவதற்கு இறப்பு சான்றிதழுக்கு பதிலாக அரசு ஆவணங்களில் பாலிசிதாரர் விமான விபத்தில் இறந்தது குறித்து ஆதாரம் வழங்கலாம் என்று எல்ஐசி நிர்வாகம் அறிவிப்பில் கூறியுள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான விபத்தில் 241 பயணிகள் நேற்று பலியாகினார்கள். விபத்தில் சிக்கிய ஏர் இந்தியா விமானம் டாடா நிறுவனத்துக்கு சொந்தமானது ஆகும். எனவே அந்த நிறுவனம் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்குவதாக அறிவித்திருக்கிறது. இதுதவிர காப்பீடு நிறுவனங்களும், அகமதாபாத் விபத்தில் இறந்தவர்களுக்கு உடனே காப்பீடு கிடைப்பதற்கான செயல்முறைகளை அறிவித்து வருகின்றன.

அந்த வகையில் விபத்தில் பலியானவர்கள், எல்.ஐ.சி. பாலிசிதாரர்களாக இருந்தால் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய பாலிசி உரிமைத்தொகையை குடும்பத்தினர் பெறுவதற்கு ஏற்கனவே அமலில் இருந்து வரும் சில நிபந்தனைகளை எல்.ஐ.சி. தளர்த்தி இருக்கிறது.
இதுதொடர்பாக எல்.ஐ.சி. நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறுகையில், "விமான விபத்தில் பலியானவர்களுக்கு எல்.ஐ.சி. ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. விபத்தில் இறந்தவர்கள் எல்.ஐ.சி. பாலிசிதாரர்களாக இருந்தால் அவர்களது குடும்பத்தினர் பாலிசி உரிமைத்தொகையை பெறுவதற்கு இறப்பு சான்றிதழுக்கு பதிலாக அரசு ஆவணங்களில் பாலிசிதாரர் விமான விபத்தில் இறந்தது குறித்து ஆதாரம் அல்லது மத்திய, மாநில அரசு, விமான போக்குவரத்து ஆணையம் இழப்பீடு வழங்கிய ஆதாரம் இருப்பின் அதை இறப்புக்கான ஆதாரமாக எடுத்துக்கொண்டு உரிமைத்தொகை வழங்கப்படும்.
உரிமைத்தொகை கோருபவர்களை எல்.ஐ.சி. நிர்வாகம் நேரடியாக அணுகி அவர்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைத்தொகையை விரைந்து வழங்குவதற்கு அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். உரிமத்தொகை கோருபவர்கள் அருகில் உள்ள கிளை, கோட்ட அலுவலகங்களையோ, வாடிக்கையாளர் சேவை மையங்களையோ அல்லது 022-68276827 என்ற தொலைபேசியில் உதவி மையத்தையோ அணுகலாம்" இவ்வாறு எல்ஐசி வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications