காமராஜரை பேசிய ராஜீவ் காந்தி! சாரி கேட்க வேண்டியது ஸ்டாலின்.. பிரியாணி கடை மேட்டரை இழுத்த இன்பதுரை
சென்னை: தமிழக முன்னாள் முதல்வர் காமராசர் குறித்து அவதூறாக பேசியதாக திமுக மாணவரணி நிர்வாகி ராஜிவ்காந்திக்கு பல தரப்பில் இருந்தும் கண்டனம் எழுந்து வருகிறது. இந்நிலையில், பிரியாணி கடை தாக்குதலுக்கு தன் கட்சிக்காரன் சார்பில் மன்னிப்பு கேட்ட முதல்வர் ஸ்டாலின், பிரியாணிக்கு காட்டும் மரியாதையை பெருந்தலைவருக்கு காட்ட மாட்டாரா என அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்புதி.மு.க. இளைஞரணி அலுவலகமான அன்பகத்தில் நடைபெற்ற ஒரு நூல் வெளியீட்டு விழா ஒன்றில் பேசிய திமுக மாணவர் அணி நிர்வாகியான ராஜீவ் காந்தி முன்னாள் முதலமைச்சரும் காங்கிரஸ் தலைவர்மான காமராஜர் குறித்து பேசியது பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

நிகழ்ச்சியில் பேசிய அவர்,” கள்ளுக் கடைகளை திறந்த ராஜாஜி பள்ளிக்கூடங்களை மூடினார். கள்ளு கடை தரும் போதையை விட பள்ளிக் கூடங்கள் தரும் போதை அதிகம். தங்களை விட படித்து விடக்கூடாது என்பதற்காக பள்ளிகளை மூடினார்.
அதே நேரத்தில் காமராஜர் ஒன்றும் தனது கை காசை போட்டு பள்ளிக்கூடங்களை திறக்கவில்லை. ராஜாஜி மூடிய பள்ளிக்கூடங்களை தான் திறந்தார். இதனால் தான் கல்வி கண் திறந்த காமராஜர் என கூறுகின்றனர். இன்று கல்வி என்ற ஒன்று இருப்பதற்கு பெரியார் தான் காரணம்” என பேசி இருந்தார். ராஜீவ் காந்தியின் இந்த பேச்சு கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியினரிடையே கடுமையான கொந்தளிப்பை ஏற்படுத்தி வைத்திருக்கிறது.
இது தொடர்பாக பேசிய தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் தலைவர் சின்னத்தம்பி,” ஆளுங்கட்சியை சேர்ந்தவர் என்ற பாதுகாப்பில் ஆணவத்தோடு கூட்டணி கட்சியான காங்கிரஸின் மனம் புண்படும் வகையில் ராஜீவ் காந்தியை பேசுவதை வன்மையாக கண்டிக்கிறேன். அவருக்கு காமராஜரை பற்றி பேச எந்த அருகதையும் இல்லை” எனக் கூறியிருந்தார்.
இந்த நிலையில் காமராஜர் குறித்து பேசிய ராஜீவ் காந்தியை கண்டிக்கவேண்டும் என பாஜகவின் தமிழிசை உள்ளிட்ட தலைவர்கள், மற்றும் நாடார் சமுதாய அமைப்புகள் கண்டனம் தெரிவித்திருந்தனர். இதற்கிடையே, காமராஜர் குறித்த பேச்சுக்கு வருத்தம் தெரிவித்திருந்தார் ராஜீவ் காந்தி. இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் காமராஜர் குறித்து தாம் பேசியது காங்கிரஸ் தோழர்களால் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு, அவர்களுக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளதாக அறிந்தேன்.
காமராஜர் மீது பற்று கொண்ட தலைவர்களும் நாடார் சமூக அமைப்பினை சேர்ந்த தலைவர்களும் தன்னிடம் வருத்தம் தெரிவித்தனர். பெருந்தலைவர் காமராஜரை சிறுமைப்படுத்தவோ, குறைத்து பேசவோ தனிப்பட முறையில் தனக்கு எவ்வித தவறான நோக்கமும் இல்லை. தாம் பேசியதன் மூலம் மனம் வருந்திய காங்கிரஸ் தொண்டர்களுக்கும் பெரும் தலைவர் காமராஜரை நேசிக்கும் உறவுகளுக்கும் தனது வருத்தத்தை மனதார தெரிவித்துக்கொள்கிறேன்” என கூறியிருந்தார்.
இந்நிலையில் பிரியாணிக்கு காட்டும் மரியாதையை பெருந்தலைவருக்கு காட்ட மாட்டாரா என அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,”பெருந்தலைவர் காமராஜரை இழிவு படுத்திய திமுக ராஜீவ்காந்திக்கு கடும் எதிர்ப்பு கிளம்ப அவர் வருத்தம் தெரிவித்துள்ளார். மன்னிப்பு கேட்க வேண்டியவர் ஸ்டாலின்.பிரியாணி கடை தாக்குதலுக்கு தன் கட்சிக்காரன் சார்பில் மன்னிப்பு கேட்டாரே? பிரியாணிக்கு காட்டும் மரியாதை பெருந்தலைவருக்கு கிடையாதா?” என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications