ஒரு பக்கம் அதிமுக; மறுபக்கம் திமுக! உருளும் அண்ணாமலை தலை! தாக்குப் பிடிப்பாரா?
சென்னை: அண்ணாமலையை விமர்சிப்பதில் அதிமுகவும் திமுகவும் ஒத்த அலைவரிசையில் செயல்படத் தொடங்கி உள்ளன.
பாஜகவின் தேர்தல் வியூகம் என்னவென்றே புரிந்து கொள்ள முடியவில்லை. ஒரே நேரத்தில் பாஜக தமிழ்நாட்டில் அதிமுகவையும் திமுகவையும் பகைத்துக் கொண்டிருக்கிறது.

ஒரு பக்கம் எம்.ஜி.ஆரை ஜெயலலிதாவைப் பிரதமர் மோடி புகழ்கிறார். இன்னொரு பக்கம் ஜெயலலிதாவையும் அதிமுக முன்னாள் அமைச்சர்களையும் மிகக் கடுமையாக அண்ணாமலை விமர்சிக்கிறார்.
மத்தளத்திற்கு இரண்டு பக்கம் இடி என்பதுபோல் உள்ளது அண்ணாமலையின் நிலைமை. அதிமுகவினர் அவரைக் கடுமையாகச் சாடி வருகிறார்கள். இன்னொரு பக்கம் அண்ணாமலையையும் மோடியையும் சேர்த்து திமுகவினர் வெச்சு செய்து வருகிறார்கள்.
தமிழ்நாட்டைப் பொறுத்தளவில் பாஜக இப்படி ஒரே சமயத்தில் இரண்டு மிகப்பெரிய கட்சிகளைப் பகையாளியாக்கிக் கொண்டுள்ளது.

கடந்த 06.05.216 அன்று தமிழ்நாட்டுக்குப் பிரச்சாரத்திற்கு வந்த மோடி, "தமிழ்நாட்டில் லஞ்ச லாவண்யம் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கிறது. லஞ்சம், ஊழலால் தமிழ்நாடு முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
ஆகவே தமிழ்நாட்டைக் காப்பாற்ற வேண்டி உள்ளது. தமிழ்நாட்டையும் இளைஞர்களின் எதிர்காலத்தையும் காப்பாற்ற வேண்டும் என்றால் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.

இந்தியாவே இன்று லஞ்ச, ஊழலுக்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டிலும் லஞ்ச, ஊழலை நாம் அனுமதிக்கக் கூடாது" என்று பேசி இருந்தார்.
அப்போது ஜெயலலிதா உயிருடன் இருந்தார். மோடியின் பேச்சுக்கு எதிர்வினையாக, 'நல்லாட்சி கொடுப்பது குஜராத்தில் உள்ள மோடியா? இல்லை தமிழ்நாட்டில் உள்ள இந்த லேடியா?' என்று சவால் விட்டு அதில் சாதித்தும் காட்டினார்.

அவர் இறந்த பிறகு, அதிமுக சசிகலாவின் கைக்குப் போக இருந்தது. அதைப் போகவிடாமல் தடுத்தது மோடிதான் என்று ஒரு பேச்சு அப்போது அடிப்பட்டது. அதன்பின்னர் சசிகலா சிறைக்குச் சென்றார். கட்சி முழுமையாக எடப்பாடி பழனிசாமி கட்டுப்பாட்டுக்கு வந்தது.
இப்போது மோடியின் பேச்சு அப்படியே தலைகீழாக மாறி இருக்கிறது. 27.02.2024 அன்று தமிழ்நாட்டிற்கு வந்த மோடி அப்படியே பழைய பிளேட்டை மாற்றிப் போட்டுப் பேசி இருக்கிறார். பல்லடத்தில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில் பேசிய மோடி, " எம்.ஜி,ஆருக்குப் பிறகு, அந்த இடத்திற்கு ஜெயலலிதா வந்தார். மக்களுடைய நலனுக்காகவே ஜெயலலிதா வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டார்.

சமீபத்தில் தான் ஜெயலலிதாவின் பிறந்தநாள் வந்தது. தமிழ்நாட்டுக்கு ஜெயலலிதா அதிக அளவிற்கு உழைத்திருக்கிறார். ஜெயலலிதாவுடன் பணிபுரிய வாய்ப்பு கிடைத்ததை நான் பாக்கியமாகக் கருதுகிறேன். மக்களின் மனதில் ஜெயலலிதா எந்தளவுக்கு இடம்பிடித்துள்ளார் என்பது எனக்குத் தெரியும்" என்று பேசி இருக்கிறார்.
'எம்.ஜி,ஆர்., ஜெயலலிதா பேரைச் சொல்லி தமிழ்நாட்டிற்குள் நுழையலாம் என மோடி கனவு காண்கிறார். அது நடக்காது' என்று அதிமுகவினர் கருத்துச் சொல்லி வருகிறார்கள்.
முன்பு அண்ணாமலையை மட்டுமே பகைத்துக் கொண்ட அதிமுகவினர் இப்போது தேர்தல் நெருங்க நெருங்க மோடியையே விமர்சிக்கத் தொடங்கி உள்ளனர்.

மோடியின் பேச்சுக்கு மறுப்பு தெரிவித்துள்ள செல்லூர் ராஜு, 'எங்ககிட்டயேவா' என்று சவால் விடுத்துள்ளார்.
அவர், "மோடிஜியே நம்மை ஏமாற்றப் பார்க்கிறார். நாங்கள் எத்தனுக்கு எத்தன். நாங்க வில்லாதி வில்லன்..! பாஜக ஒரு மதவாத இயக்கம். மதத்தைச் சொல்லி, சாதியைச் சொல்லி மக்களைப் பிரித்து வருகிறது. ஆகவே அந்தக் கட்சியைத் தமிழ்நாட்டில் நுழையவே விடக்கூடாது" என்று ஆவேசமாகப் பதிலளித்திருக்கிறார்.
முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவோ, பிச்சைக்காரர்களை உதாரணம் காட்டி விமர்சித்துள்ளார். "அதிமுகவில் நாங்கள் ராஜா, ராணி போல் இருக்கிறோம். நாங்கள் ஏன் பாஜகவில் இணைந்து பிச்சை எடுக்க வேண்டும்? நாங்கள் சாகும்வரை அதிமுகவில்தான் இருப்போம். எங்கள் பூத உடலில் அதிமுக கொடிதான் போர்த்தப்படும்.
அரசியலில் கத்துக்குட்டி அண்ணாமலை. அவர் அண்ணா மற்றும் ஜெயலலிதாவைத் தரக்குறைவாக விமர்சித்ததே பாஜக - அதிமுக கூட்டணி முறிந்ததற்குக் காரணம். இரண்டரைக் கோடி தொண்டர்கள் உள்ள அதிமுகவைத் தாம்பூலத்தில் வைத்து பாஜகவுக்குத் தாரை வார்க்க மாட்டோம்" என்று எகிறி அடித்துள்ளார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமார்,"அண்ணாமலை கப் வாங்கி விட்டோம் என்று சொல்கிறார். அது மேடையில் வாங்கியதா? அல்லது கடையில் வாங்கியதா என்று பெரிய விவாதம் எழுந்துள்ளது. கடையில் கப் வாங்கினாலும் மேடையில் கப் வாங்கினாலும் இரண்டிற்கும் வாங்குவதாகவே பொருள்.
ஆனால், கடையில் கப் வாங்கிக் கொண்டு தமிழ்நாட்டு மக்களிடம் பாராட்டை எதிர்பார்க்கக் கூடாது" என்று விமர்சித்திருக்கிறார். இவர் முன்பு அண்ணாமலை லேகியம் விற்பவர் போலப் பேசிவருகிறார் என்று மிக மோசமாகக் கலாய்த்திருந்தார் என்பது நிச்சயம் நினைவில் வைக்க வேண்டிய செய்தி.

கடம்பூர் ராஜு, "பாஜக டெல்லிக்கு ராஜாவாக இருக்கலாம். தமிழ்நாட்டில் நாங்கள்தான் ராஜா" என்று கூறி இருக்கிறார்
அதிமுகவின் பதிலடிக்கும் திமுகவினரின் பதிலடிக்கும் அசராமல் பதில் சொல்லி வருகிறார் அண்ணாமலை. இந்தச் சண்டை எங்கே போய் முடியுமோ? எப்போது முடியுமோ?












Click it and Unblock the Notifications