கருத்துக்கணிப்புகளை நம்பாதீங்க.. நம்மை ஏமாத்துறாங்க - தொண்டர்களுக்கு அதிமுக 'பூஸ்ட்'
சென்னை: 'தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை தொண்டர்கள் நம்ப வேண்டாம்' என்று அதிமுக தலைமை அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள், நேற்று இரவு வெளியாகின. இதில், பெரும்பாலான முடிவுகளில், திமுக தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
பத்தாண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் திமுக ஆட்சி ஏற்படும் என்றும், மு.க.ஸ்டாலின் முதல்வராவார் என்றும் கருத்துக்கணிப்புகள் வெளியாகின. இதில், அறிவாலயம் கொண்டாட்டத்தில் மிதக்க, ராயப்பேட்டை அலுவலகம் கப்சிப் மோடில் இருந்தது.

பெருமிதம் அடைகிறோம்
இந்நிலையில், துவண்டு கிடந்த தொண்டர்களை உசுப்பேற்றும் விதமாக அதிமுக தலைமை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தல் முடிவுகள் இன்னும் ஒரு நாள் இடைவெளிக்கு பின்னர் ஞாயிற்றுக்கிழமை அன்று வெளியாகவிருக்கும் சூழலில் வாக்குக் கணிப்பு என்ற பெயரில் தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகளில் வெளிய வெளியாகியிருக்கும் செய்தி தொகுப்புகள் கழக உடன்பிறப்புகள் யாருக்கும் எந்தவித மனசஞ்சலத்தையும் தரவில்லை என்பதை கேட்டு பெருமிதம் கொள்கிறோம். அதிமுக என்னும் ஆலமரம் எந்த சலசலப்புக்கு அசைந்துவிடாமல் அண்டி வந்தோர் அனைவருக்கும் வாழ்வளிக்கும் கற்பக விருட்சம் என்பதே உண்மை. தமிழ்நாடு முழுவதிலும் இருந்து வருகின்ற தேர்தல் பணிகள் குறித்த தகவல்கள் அதிமுக வரலாறு வியக்கும் வகையில் இந்த தேர்தலிலும் தொடர் வெற்றி பெற்று அம்மாவின் அரசை அமைக்கும் என்று உறுதிபட தெரிவிக்கின்றன.

ஆட்சி அமைத்தோம்
கடந்த 2016ஆம் ஆண்டு சட்டமன்ற பொதுத்தேர்தல் முடிவுகள் வெளியிடப்படுவதற்கு முன் வந்த அனைத்து கருத்துக் கணிப்புகளும் கழகத்தின் வெற்றியை குறிப்பிடவே இல்லை. மாற்று அணியே ஆட்சி அமைக்கும் என்று தேர்தல் முடிவுகள் வெளிவருவதற்கு முதல் நாள் வரை சொல்லிக் கொண்டிருந்தன. ஆனால் வாக்கு எண்ணிக்கை தொடங்கிய சில மணிநேரத்திலேயே 2016இல் கழகத்தின் வெற்றியை உறுதி செய்யும் வகையில் கழக வேட்பாளர்கள் முன்னிலை வகித்து வந்ததையும், பிறகு கழகம் அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்ததையும் நாம் பார்த்தோம்.

ஒரு வாக்கு கூட
இப்போது வெளியிடப்பட்டு வரும் முடிவுகள் கழக உடன் பிறப்புகளை சோர்வடையச் செய்து வாக்கு எண்ணிக்கையின் போது நமது செயல்பாடுகளை முடக்கி நம்மை ஜனநாயக கடமையாற்ற விடாமல் செய்வதற்கான முயற்சிகளை தவிர வேறல்ல. நம்மை சோர்வடையச் செய்வதற்கான முயற்சிகள் எதையும் நம்ப விடாமல் அவற்றை துணிவுடன் எதிர்கொண்டு செயல்பட வேண்டும் என்பதை உங்களுக்கு நினைவூட்டுகிறோம். கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் வாக்கு எண்ணிக்கையின் போது ஆரம்பம் முதலே கவனமாக இருந்து விழிப்புவுணர்வுடன் பணியாற்றுங்கள். ஒரு வாக்கு கூட நம்மிடமிருந்து பறிக்கப்படாத வண்ணம் தீவிரமாக பணியாற்றுங்கள்.

வெற்றி மாலை ரெடி
புரட்சித் தலைவர் ஆட்சி அமைக்க முடியாது என்றும் புரட்சித்தலைவியின் தோல்வி உறுதி என்றும் பகிரங்கமாக சத்தியம் செய்தவர்கள் வெட்கித் தலைகுனியும் வகையில் மக்கள் நம் இயக்கத்தை இமயத்தின் உச்சியில் வீற்றிருக்க வைத்தனர். அந்த நிலையே இப்போதும் தொடரப் போகிறது. களங்கள் அனைத்திலும் கழகம் வெல்லும். வெற்றி மாலை சூட தயாராகுங்கள் " என்று குறிப்பிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications