ஆட்டத்தை தொடங்கிய பாஜக.. 5 நாட்களில் சென்னை வரும் பியூஷ் கோயல்.. எடப்பாடியுடன் சந்திப்பு?
சென்னை: தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் டிசம்பர் 22ஆம் தேதி சென்னை வர உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இவர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் தொகுதி பங்கீடு மற்றும் கூட்டணி கட்சிகளை இணைப்பது தொடர்பாக ஆலோசிக்கப்படலாம் என்று கருதப்படுகிறது. தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், பியூஷ் கோயலின் வருகை முக்கியத்துவம் பெற்றுள்ளது.

தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கின்றன. இந்த நிலையில் தமிழக தேர்தல் பணிகளை பாஜக முடுக்கிவிட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதத்தில் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக பைஜெயந்த் பாண்டா நியமனம் செய்யப்பட்டார். ஆனால் அமித்ஷாவை சந்திக்க நயினார் நாகேந்திரன் டெல்லி சென்றிருந்த போது, திடீரென ஒரு அறிவிப்பு வெளியாகியது.
அதன்படி தமிழக பாஜகவின் தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நியமனம் செய்யப்பட்டார். அதேபோல் 3 பேர் கொண்ட குழுவில் மத்திய இணையமைச்சர்கள் அர்ஜுன் ராம் மேக்வால் மற்றும் முரளிதர் மொஹோல் ஆகியோரும் இடம்பெற்றனர். 2019 மற்றும் 2021 ஆகிய தேர்தல்களில் எடப்பாடி பழனிசாமியுடன் பியூஷ் கோயல் தான் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்தி முடித்திருந்தார்.
இந்த முறை எடப்பாடி பழனிசாமியுடன் பாஜக தரப்பில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில், அமித்ஷா எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. இதன் காரணமாகவே பேச்சுவார்த்தை நடத்த பியூஷ் கோயல் நியமனம் செய்யப்பட்டதாக தெரிகிறது. பியூஷ் கோயலுக்கு அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி, எஸ்பி வேலுமணி உள்ளிட்டோருடன் நல்ல நட்பு இருக்கிறது.
இந்த நிலையில் தமிழக பாஜகவின் நிர்வாகிகள் கூட்டம் கிண்டியில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்று வருகிறது. நயினார் நாகேந்திரன், அண்ணாமலை, பாஜக தேசிய பொறுப்பாளர்கள் பங்கேற்று தேர்தல் தொடர்பாக ஆலோசித்து வருகின்றனர். இந்த நிலையில் டிசம்பர் 22ஆம் தேதி மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சென்னை வர உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
சென்னை வரும் பியூஷ் கோயல், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் கூட்டணி கட்சிகளை இணைப்பது மற்றும் தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தமிழக பாஜக தரப்பில் அடுத்தடுத்த இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதும் தெரிய வந்துள்ளது.












Click it and Unblock the Notifications