"எங்களை பாஜக மிரட்டல.. மகிழ்ச்சியாக கூட்டணி வைத்துள்ளோம்.. உங்களுக்கு ஏன் எரிச்சல்?” எடப்பாடி ரிப்ளை

Subscribe to Oneindia Tamil

சென்னை: எங்களுக்கு எந்த மிரட்டலும் இல்லை என்றும் மிகுந்த மகிழ்ச்சியோடு உருவானதுதான் அதிமுக - பாஜக கூட்டணி என்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அதிமுகவை பாஜக மிரட்டி பணிய வைத்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் விமர்சித்து வருகிறார். இந்நிலையில், சென்னையில் திமுக அரசைக் கண்டித்து அதிமுக சார்பில் நேற்று பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலினுக்கு பதில் கொடுத்துள்ளார்.

AIADMK-BJP Alliance Formed Happily No Threat to Us Says Edappadi Palaniswami

அதிமுக - பாஜக கூட்டணி

பாஜகவுடன் கூட்டணி கிடையாது என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடர்ச்சியாக கூறி வந்தார். இந்த நிலையில் ஏப்ரல் 11ஆம் தேதி சென்னையில் அதிமுக - பாஜக கூட்டணியை எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்தார்.

முரண்டு பிடித்து வந்த எடப்பாடி பழனிசாமி திடீரென பாஜக உடன் கைகோர்த்தது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், அதிமுகவை மிரட்டி பாஜக கூட்டணி வைத்துள்ளதாக திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

ஸ்டாலின் தாக்கு

திமுக தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின், அதிமுக - பாஜக கூட்டணியை கடுமையாக விமர்சித்து வருகிறார். பாஜக இங்கு யாருடன் கூட்டு சேர்ந்து கொண்டு வந்தாலும் திமுக கூட்டணியை வெல்ல முடியாது என சவால் விட்டு வருகிறார்.

இந்த நிலையில் நேற்று சென்னையில் நடைபெற்ற திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், "தமிழகத்தில் எப்படியாவது காலூன்ற நினைக்கும் பாஜக, அனைத்து விதமான அச்சுறுத்தல்களையும் செய்து அதிமுகவை அடக்கிவிட்டது. எடப்பாடி பழனிசாமிக்கும் வேறு வழியில்லை. பாஜக கூட்டணியை ஏற்றுக்கொள்ளா விட்டால் சொந்தக் கட்சியில் தனது தலைமை பதவிக்கே சிக்கல் வந்துவிடும் என்று பயப்படுகிறார்" என விமர்சித்து இருந்தார்.

எடப்பாடி பழனிசாமி பதில்

இந்த நிலையில் சென்னை தியாகராய நகரில் திமுக அரசைக் கண்டித்து நேற்று நடந்த அதிமுக பொதுக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார். இந்தக் கூட்டத்தில் பேசிய அவர், "முதல்வர் மு.க.ஸ்டாலின் சாதனை என்று சொல்கிறார். திமுக ஆட்சிக்கு வந்த நான்கு ஆண்டுகளில் ஸ்டாலின் என்ன பெரிய திட்டத்தை கொண்டு வந்துள்ளார்? உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக்கியதுதான் சாதனை.

தங்கள் குடும்ப உறுப்பினர்கள் ஆட்சி அதிகாரத்தில் தொடர வேண்டும் என்பதே ஸ்டாலினின் நோக்கம். 2026 சட்டமன்றத் தேர்தல் என்பது குடும்ப ஆட்சி, வாரிசு அரசியல், மன்னர் ஆட்சிக்கு முடிவு கட்டும் தேர்தல். இந்த ஆட்சி எப்போது முடிவுக்கு வரும் என மக்கள் காத்துக்கொண்டுள்ளனர்" என்று பேசினார்.

எங்களை பாஜக மிரட்டவில்லை

மேலும், "அதிமுகவை பாஜக மிரட்டிப் பணிய வைத்துள்ளது என்று ஸ்டாலின் கூறுகிறார். எங்களுக்கு எந்த மிரட்டலும் இல்லை. மகிழ்ச்சியோடு உருவானது எங்கள் கூட்டணி. எனக்கு மடியில் கனமில்லை, அதனால் வழியில் பயம் இல்லை. இது எங்கள் கட்சி. நாங்கள் பாஜகவுடன் கூட்டணி வைத்தால் உங்களுக்கு ஏன் கோபமும் எரிச்சலும் வருகிறது?

பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைக்காது என்ற ஸ்டாலினின் கனவு, கானல் நீராகிவிட்டது. கூட்டணி வைத்தவுடன் ஸ்டாலின் பதறுகிறார். ஸ்டாலினுக்கு தேர்தல் ஜுரம் வந்துவிட்டது. அதிமுக கூட்டணி வெற்றி கூட்டணி. எங்கள் கூட்டணியில் பல கட்சிகள் வந்து சேர இருக்கின்றன. அப்போது இந்தக் கூட்டணி எவ்வளவு பலம் வாய்ந்தது என்பதை உணர்வீர்கள். எதிரியை வீழ்த்த, வாக்குகள் சிதறாமல் வெற்றி பெற, இந்த அரசியல் வியூகத்தை அமைத்திருக்கிறோம்.

பச்சோந்தி திமுக

கடந்த 4 ஆண்டுகளில் ஊழல் செய்து சம்பாதித்த பணத்தை என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கும் கட்சிதான் திமுக. அதனால் தான் அமலாக்கத்துறை, வருமான வரித் துறையைக் கண்டு திமுக அஞ்சிக் கொண்டிருக்கிறது. அமைச்சர்களும் அஞ்சி நடுங்கிக் கொண்டிருக்கின்றனர்.

அதிமுக ஆட்சிக்கு வர வேண்டும் என்று நினைக்கிற கட்சி பாஜக. 1998 பாஜகவோடு கூட்டணி, 2004 காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்ததுதான் திமுக. பச்சோந்தி போல் கூட்டணி மாறும் கட்சி திமுக. அவர்கள் கூட்டணி வைத்தால் பாஜக நல்ல கட்சி, நாங்கள் கூட்டணி வைத்தால் பதறிக்கொண்டு விமர்சிப்பார்கள்" என்று காட்டமாகப் பேசியுள்ளார் எடப்பாடி பழனிசாமி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+