மிரட்டலுக்கு பணிந்து பாஜகவுடன் கூட்டணி வைத்த அதிமுக? பின்னணியில் இருந்தது அந்த தலைவரா! என்ன நடந்தது?
சென்னை: தமிழ்நாட்டில் மீண்டும் அதிமுக - பாஜக கூட்டணி அமைந்துள்ளது. இதனை எடப்பாடி பழனிச்சாமியை பக்கத்தில் வைத்து கொண்டு இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இந்நிலையில் தான் எடப்பாடி பழனிச்சாமி, பாஜகவின் மிரட்டலுக்கு பயந்து கூட்டணி வைத்துள்ளாரா? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் அதுபற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
2021 சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் பாஜக இருந்தது. இந்த கூட்டணி அதன்பிறகு முறிந்தது. 2022ல் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் பாஜக, அதிமுக தனித்து களமிறங்கின. அதன்பிறகு கடந்த ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தனியாகவும், பாஜக தனியாகவும் கூட்டணி அமைத்து களமிறங்கியது. இந்த தேர்தலில் எல்லாம் அதிமுக, பாஜகவுக்கு தோல்வி தான் கிடைத்தது. திமுக கூட்டணி தான் அமோக வெற்றி பெற்றது.

மேலும் தமிழகத்தில் பாஜக, அதிமுக தலைவர்கள் ஒருவரையொருவர் தாக்கி பேசி வந்தனர். இது திமுகவுக்கு சாதகமாக அமைந்தது. அதிமுக, பாஜக இனியும் கூட்டணி சேராது. சீமான் தனித்து போட்டியிடுவது, விஜயின் அரசியல் வருகை உள்ளிட்டவற்றால் ஓட்டுகள் பிரியும். இதன்மூலம் 2026 சட்டசபை தேர்தலிலும் எளிதாக வெற்றி பெறலாம் என்று திமுக கணக்கு போட்டது.
ஆனால் திடீர் ட்விஸ்ட்டாக தற்போது அதிமுகவும், பாஜகவும் கூட்டணி அமைத்துள்ளன. கடந்த மாதம் டெல்லியில் அமித்ஷா வீட்டில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அதிமுக தலைவர்கள் சந்தித்து பேசினர். இந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து நேற்று சென்னை வந்த அமித்ஷா இன்று அதிமுக பாஜக கூட்டணியை உறுதி செய்தார். சென்னையில் இன்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், ‛‛2026 சட்டசபை தேர்தலை தமிழகத்தில் அதிமுக தலைமையில் பாஜக எதிர்கொள்ள உள்ளது. எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நாங்கள் தேர்தலை சந்திக்க உள்ளோம்'' என்றார். இந்த பத்திரிகையாளர் சந்திப்பின்பாது அமித்ஷா அருகில் எடப்பாடி பழனிச்சாமி, அண்ணாமலை உள்ளிட்டவர்கள் இருந்தனர்.
இதனால் வரும் 2026 சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் பாஜக - அதிமுக கூட்டணி என்பது உறுதியாகி உள்ளது. மேலும் இந்த பேட்டியில் பாஜகவுடன் கூட்டணி அமைக்க அதிமுக ஏதேனும் நிபந்தனை வைத்ததா?என்று அமித்ஷாவிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அமித்ஷா, ‛‛அதிமுக எந்த டிமாண்டும் வைக்கவில்லை. எங்கள் கூட்டணியில் எந்த தாமதமும் ஏற்படவில்லை. இனி எந்த மாறுபாடும், குழப்பமும் இருக்காது. தேர்தலை இணைந்து சந்திப்போம். அதிமுகவுடன் அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி காமன் மினிமல் புரோகிராம் உருவாகி தேர்தலை எதிர்கொள்வோம். அதிமுக கூட்டணியில் என்டிஏ வருவதும், என்டிஏ கூட்டணிக்குள் அதிமுக வருவதும் இருவருக்கும் பலன் அளிக்கும்'' என்றார்.
இப்படி அமித்ஷா - எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் எந்த நிபந்தனையும் இன்றி இந்த கூட்டணி அமைந்துள்ளதாக தெரிவித்தாலும் கூட சில கேள்விகளை அரசியல் நோக்கர்களும், எதிர்க்கட்சிகளும் எழுப்ப தொடங்கி உள்ளன. அதாவது செங்கோட்டையனை வைத்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை பாஜக மிரட்டி கூட்டணி அமைத்து விட்டதாக அவர்கள் கூறுகின்றனர். செங்கோட்டையன் சமீபகாலமாக அதிமுகவின் எடப்பாடி பழனிச்சாமியுடன் நெருக்கம் காட்டாமல் உள்ளது. மேலும் அவர் பாஜக தலைவர்களுடன் நெருங்கி பழகி வருகிறார். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை அவர் சந்தித்து பேசினார். டெல்லிக்கு அடிக்கடி விசிட் அடித்தார்.
இதனால் தங்களுடன் கூட்டணி வைக்காவிட்டால் செங்கோட்டையனை வைத்து கட்சியை உடைத்து விடுவதாக பாஜக மிரட்டி இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இதனை இருகட்சியினரும் மறுத்துள்ளனர். அதேவேளையில் ஆளும் திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் அதிமுக - பாஜக கூட்டணி கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ‛‛அதிமுக - பாஜக கூட்டணி தான் அமையும் என்பது எல்லோரும் யூகித்த ஒன்று தான். அது இன்று நிறைவேறி உள்ளது. விஜய் போன்ற புதிய அரசியல் கட்சி மற்றும் மற்ற அமைப்புகளுடன் இணைந்து அதிமுக கூட்டணி அமைக்க கூடாது என்பதில் ஆர்எஸ்எஸ் மிக கவனமாக இருந்தது. இன்று ஒரு அழுத்தம். நெருக்கடியின் அடிப்படையில் தான் அதிமுக, பாஜகவுடன் இணையும் நிலை ஏற்பட்டுள்ளது'' என்று கூறியுள்ளார். இதனால் பாஜகவின் மிரட்டல், நெருக்கடியால் அதிமுக அந்த கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications