பெரிய பின்னடைவு ஏற்படும்.. கவனமாக இருங்க.. டெல்லிக்கு போன ரெட் நோட்.. அதிமுக, பாஜகவிற்கு சிக்கல்!
சென்னை: தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மாநிலத்தில் பாஜக - அதிமுக முகாமில் பெரும் குழப்பங்கள் நிலவி வருகின்றன. முக்கிய தலைவர்களின் வெளியேற்றம், நீக்கம், உட்கட்சிப் பூசல்கள், கூட்டணி குழப்பங்கள், வாக்குகள் சிதறுவது ஆளும் திமுகவிற்கு சாதகமான சூழலை ஏற்படுத்தி உள்ளது. இந்த சூழல் தொடர்பாக பாஜக டெல்லி தலைமைக்கு முக்கிய ரெட் நோட் ஒன்று சென்றுள்ளதாம்.

உடைந்த என்டிஏ கூட்டணி
பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் அடுத்தடுத்து அறிவிப்பு வெளியிட்டு உள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் தமிழ்நாடு வந்தபோது, அவரைச் சந்திக்க ஓ. பன்னீர்செல்வம் அனுமதி கேட்டிருந்தார். ஆனால், பிரதமரைச் சந்திக்க அவருக்கு அனுமதி கிடைக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. இதன் காரணமாக, பல வகையான யூகங்கள் கிளம்பின. இப்படிப்பட்ட நிலையில்தான் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக ஓ.பன்னீர்செல்வம் அணி அறிவிப்பு வெளியிட்டது.
பாஜக கூட்டணி ஓ பன்னீர்செல்வம் வெளியேற்றம்
ஒரு காலத்தில் அதிமுகவில் சசிகலா ஆட்சிக்கு வருவதற்கு எதிராக தர்மயுத்தம் செய்தவர் ஓ பன்னீர்செல்வம். அப்போதில் இருந்தே ஓ பன்னீர்செல்வம் பாஜக உடன் நெருக்கமாக இருந்ததாக செய்திகள் வந்தன. பாஜக தலைவர்களையும் அவ்வப்போது ஓ பன்னீர்செல்வம் சந்தித்து வந்தார். அதன்பின் அதிமுக உடைந்து மீண்டும் ஓ பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி கரம் கோர்க்க பாஜக முக்கியமான காரணமாக இருந்தது. ஓ பன்னீர்செல்வம் அப்போது பாஜக உடன் மேலும் நெருக்கம் ஆனார்.
ஓ பன்னீர்செல்வம் மகன் ஓ பி ரவீந்திரநாத் நாடாளுமன்றத்திலேயே பாஜகவை, மோடியை அவ்வப்போது பெரிய அளவில் புகழ்ந்தும் பேசி வந்தார். நாடாளுமன்றத்தின் பாஜகவின் மசோதாக்களுக்கும் தொடர்ந்து ஆதரவு அளித்தார். அதோடு நிற்காமல் மோடி தமிழ்நாடு வரும்போதெல்லாம் ஓ பன்னீர்செல்வம் காத்திருந்து வரவேற்றார். அதன்பின் அதிமுகவில் மீண்டும் பிளவு ஏற்பட்ட பின் எடப்பாடி பழனிசாமி - ஓ பன்னீர்செல்வம் இடையே நீண்ட சட்ட போராட்டம் நடந்தது. இருவருக்கும் இடையே மிக நீண்ட சட்ட போராட்டத்தில் ஓ பன்னீர்செல்வம் தொடர்ந்து டெல்லி ஆதரவு தனக்கு கிடைக்கும் என்று நம்பினார். டெல்லி பாஜக ஆதரவு கிடைத்தால் .. வழக்கில் வெல்ல முடியும் என்றும் ஓ பன்னீர்செல்வம் நம்பினார். ஆனால் அதிமுக தொடர்பான அனைத்து வழக்கிலும் ஓ பன்னீர்செல்வம் தோல்வியையே தழுவினார். இப்படி ஓ பன்னீர்செல்வம் தொடர்ச்சியாக பாஜகவையும், மோடியையும் நம்பியே இருந்தார்.
இப்படிப்பட்ட நிலையில்தான் அதே பாஜகவுடன் ஓ பன்னீர்செல்வம் கூட்டணியை முறித்துள்ளார். இதற்கு இடையே பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். டிடிவி தினகரன் வெளியிட்ட அறிவிப்பில், இனியும் காத்திருப்பது சரி அல்ல. சிலரின் துரோகத்தால் தான் கட்சி ஆரம்பித்தோம். துரோகம் செய்தவர்கள் திருந்துவார்கள் என்று எதிர்பார்த்தோம், ஆனால் திருந்தவில்லை . அம்மாவின் தொண்டர்கள் ஒன்றிணைவார்கள் என்று எதிர்பார்த்தோம், ஆனால் அதற்கு சாத்தியம் இல்லை என்று தெரிந்துவிட்டது. இனியும் காத்திருப்பது சரி அல்ல, எங்களின் வழியில் செல்கிறோம் .ஆணவம், அகங்காரம் பிடித்து சவுண்ட் பார்ட்டி போல் செயல்படுகிறார் (இபிஎஸ்) . டிசம்பரில் யாருடன் கூட்டணி என்று சொல்கிறோம். திருந்துவார்கள் அல்லது திருத்துவார்கள் என எண்ணினோம், அதற்கு வாய்ப்பில்லை, நாங்கள் எங்கள் வழியில் செல்கிறோம், என்று கூறி உள்ளார்.
செங்கோட்டையன் புரட்சி
சமீபத்தில் கோபிச்செட்டிபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக மாஜி அமைச்சர் செங்கோட்டையன் எடப்பாடி பழனிச்சாமியை கடுமையாக விமர்சனம் செய்தார். கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களை, உடனே சேர்க்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு செங்கோட்டையன் காலக்கெடு விதித்தார். அதோடு, கட்சிக்கு எதிராக செயல்படுபவர்களை தான் நீக்குவதாக எடப்பாடி பழனிச்சாமி சொல்கிறாரே என கேட்டபோது 2009 ஆம் ஆண்டு ஜெயலலிதா அவர்களால் அதிமுகவிலிருந்து எடப்பாடி பழனிச்சாமி நீக்கப்பட்டு இருக்கிறார் என நேரடியாக விமர்சனம் முன் வைத்தார் செங்கோட்டையன். கிட்டத்தட்ட கோபமாக அவர் இந்த பதிலை அளித்தார்.
கோபிச்செட்டிபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன், பத்து நாட்களில் கழகத்திலிருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் சேர்க்கப்படவில்லை என்றால் அவர்களுடன் சேர்ந்து கட்சியை ஒருங்கிணைக்கும் வேலைகளில் ஈடுபடுவேன் என செங்கோட்டையன் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். தனது கோரிக்கைகளை பரிசீலித்தால் மட்டும்தான் இனி எடப்பாடி பழனிச்சாமி உடன் பரப்புரைகளின் பங்கேற்பேன் என கட்சியின் மூத்த தலைவர் செங்கோட்டையன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அனைவரையும் ஒன்று சேர்த்தால் மட்டும்தான் தேர்தலில் நாம் வெற்றி பெற முடியும். அதை கழகத்தின் பொதுச்செயலாளர் உணர்ந்து கொள்ள வேண்டும், என்று கூறினார்.
செங்கோட்டையனின் செயல் எடப்பாடி பழனிசாமிக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. அதிமுக உள்ளேயும் கடுமையான பிளவை ஏற்படுத்தி உள்ளது.
பாமக அன்புமணி நீக்கம்
திமுகவை எதிர்க்கும் இன்னொரு முக்கிய கட்சியான பாமகவில் குழப்பம் ஏற்பட்டு உள்ளது. பாமகவில் ராமதாஸுக்கும், அன்புமணிக்கும் இடையே அதிகாரப் போட்டி அதிகரித்துள்ளது. ராமதாஸ் தனது பேரன் முகுந்தனை இளைஞரணித் தலைவராக நியமிக்க எடுத்த முடிவு, இந்த மோதலை மேலும் தீவிரப்படுத்தி இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அன்புமணியை பாமகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தே நீக்கி உத்தரவிட்டுள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ்.
விஜய்யின் தமிழக வெற்றி கழகம் புதிய உத்வேகம் அளிக்கிறது
நடிகர்-அரசியல்வாதியான விஜய் தமிழக வெற்றி கழகம் மூலம் அரசியலில் நுழைந்து, எதிர்க்கட்சிகள் வாக்குகளை பிரிக்க தொடங்கி உள்ளார். எதிர்க்கட்சிகள் வாக்குகள் பிரிந்தால் அது ஆளும் கட்சிக்கே சாதகமாக மாறும். குறிப்பாக நகர்ப்புற இளைஞர்களிடையே தனது பிரம்மாண்டமான ரசிகர் பட்டாளத்தைப் பயன்படுத்தி, தமிழக வெற்றி கழகம் கணிசமான வாக்குகளைப் பெற உள்ளது. இது ஏற்கனவே உள்ள எதிர்க்கட்சிகளின் ஆதரவைப் பிரிக்கும். தமிழக வெற்றி கழகத்தின் எழுச்சி, தி.மு.க.வுக்கு எதிரான வாக்குகளை ஒருங்கிணைப்பதை மேலும் கடினமாக்கும் என்று அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
அதாவது திமுக எதிர்ப்பு வாக்குகள் அதிமுக கூட்டணிக்கு செல்லாமல் விஜய், சீமான், எடப்பாடி என்று பிரிந்து செல்லும். இப்படி தமிழகச் சட்டமன்றத் தேர்தல்கள் நெருங்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் முக்கிய தலைவர்களின் வெளியேற்றம், நீக்கம் மற்றும் உட்கட்சிப் பூசல்களால் பிளவுபட்டுள்ளன. நயினார் நாகேந்திரன் அண்ணாமலைக்கு பதிலாக நியமிக்கப்பட்டது, ஓ. பன்னீர்செல்வம் டி.டி.வி. தினகரன் என்.டி.ஏ.வில் இருந்து வெளியேற்றம், பாமகவில் இருந்து அன்புமணி ராமதாஸ் நீக்கம் போன்ற முக்கிய நிகழ்வுகள் நடந்துள்ளன. நடிகர் விஜய் அரசியலில் நுழைந்திருப்பது இந்த சூழலை மேலும் சிக்கலாக்கியுள்ளது.
டெல்லிக்கு போன ரெட் நோட்
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மாநிலத்தில் பாஜக - அதிமுக முகாமில் பெரும் குழப்பங்கள் நிலவி வருகின்றன. ஒரு பக்கம் கூட்டணியில் சிக்கல், இன்னொரு பக்கம் அதிமுக உள்ளேயே கட்சிக்குள் மோதல், பாஜக உள்ளேயும் பூசல் நிலவுகிறது.
முக்கிய தலைவர்களின் வெளியேற்றம், நீக்கம், உட்கட்சிப் பூசல்கள், கூட்டணி குழப்பங்கள், வாக்குகள் சிதறுவது ஆளும் திமுகவிற்கு சாதகமான சூழலை ஏற்படுத்தி உள்ளது. இந்த சூழல் தொடர்பாக பாஜக டெல்லி தலைமைக்கு முக்கிய ரெட் நோட் ஒன்று சென்றுள்ளதாம். அதாவது அமித் ஷாவிற்கு சில புகார்கள் சென்றுள்ளதாம்.
தமிழ்நாடு கூட்டணி , கட்சிக்குள் நிலைமை சரி இல்லை. உடனே சரி செய்யுங்கள். இல்லையென்றால் 2026 சட்டசபை தேர்தலில் கடுமையான பின்னடைவை சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கை சென்றுள்ளதாம்.












Click it and Unblock the Notifications