பதம் பார்த்த பாஜக.. அடங்கி போன அதிமுக? லட்டு மாதிரி சூப்பர் சான்ஸ்! கெட்டியாய் பிடிப்பாரா எடப்பாடி?
சென்னை: கூட்டணியில் இருந்தாலும் அதிமுக பாஜக இடையே பனிப்போர் நிலவுவது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது. கூட்டணி ஆட்சியென பாஜக அழுத்திச் சொல்ல.. வாய்ப்பில்ல ராஜா என்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. இந்த நிலையில் பாஜக மட்டும் தான் அதிமுகவுக்கு கூட்டணி வாய்ப்பா? வேறு எந்த கட்சியும் அதிமுகவுடன் கூட்டணிக்கு வராதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
2026 சட்டமன்ற தேர்தலுக்கு தமிழ்நாடு தயாராகி வருகிறது. 10 மாதங்கள் இருந்தாலும் பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருக்கின்றனர் அரசியல் தலைவர்கள். ஆளுங்கட்சியான திமுக, எதிர்க்கட்சியான அதிமுக மற்றும் இதர கட்சிகள் தற்போது இருந்தே தேர்தலுக்கு தயாராகி வருகின்றன.
பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டங்கள், வேட்பாளர் தேர்வு என தற்போது தேர்தல் வேலைகள் தொடங்கி விட்டன. தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அரசு முறை பயணமாக தமிழ்நாடு முழுவதும் சுற்றி வருகிறார். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியும் தேர்தல் பிரச்சாரத்தையே துவங்கி விட்டார். கோவை, விழுப்புரம், கடலூர் என பல தொகுதிகளில் பிரச்சாரம் நிறைவடைந்து இருக்கிறது.

இது ஒரு புறம் இருக்க தமிழ்நாட்டில் தேர்தலை பொருத்தவரை கூட்டணி தான் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் என்ற நிலை ஏற்பட்டு இருக்கிறது. 2016 சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட அதிமுக ஆட்சியைப் பிடித்தது. அதற்கு முன்னும் பின்னும் கூட்டணிகள் தான் வெற்றி தோல்வியை தீர்மானித்திருக்கின்றன. தற்போதைய சூழலில் திமுக கூட்டணி கிட்டத்தட்ட இறுதி செய்யப்பட்டு விட்டது. அந்த கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் சிறிய கட்சிகள் இருக்கின்றன.
அதிமுக கூட்டணியை பொறுத்தவரை பாஜக மட்டுமே அதிகாரப்பூர்வமாக இணைந்து இருக்கிறது. அந்த கட்சியுடன் ஏற்கனவே கூட்டணியில் இருந்த ஜிகே வாசன், ஏசி சண்முகம், பாரிவேந்தர் ஆகியோரது கட்சிகள் அதிகாரப்பூர்வமாக இணைந்து இருக்கலாம். மற்றபடி தேமுதிக, பாமக போன்ற பெயர் சொல்லிக் கொள்ளும் கட்சிகள் இல்லை. மாநிலங்களவை சீட்டு விவகாரத்தில் அதிருப்தியில் இருப்பதால் தேமுதிக இன்னும் கூட்டணி குறித்த முடிவை அறிவிக்கவில்லை. பாமகவின் உட்கட்சி விவகாரம் கூட்டணியை இது செய்ய முடியாமல் செய்துவிட்டது.
இப்படி இருக்க கூட்டணியில் சேர்ந்தாலும் பாஜக அதிமுகவுக்கு மறைமுகமாக நெருக்கடி கொடுத்து வருகிறது. ஆட்சி அதிகாரத்தில் பங்கு, கூட்டணி ஆட்சி, அமைச்சரவையில் இடம் என உள்ளூர் பாஜக தலைவர்கள் குமுறிக் கொண்டிருந்த நிலையில் அதனை டெல்லி தலைமையும் உறுதி செய்வது போல பேசி இருக்கிறது. நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான், பாஜக அதில் பங்கேற்கும் எனக் கூறியிருக்கிறார்.
அடுத்த நாளே தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பு இல்லை, அதிமுக தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. இப்படி அதிமுக பாஜக கூட்டணி பொருந்தாக் கூட்டணியாகவே இருக்கிறது. 2016 தேர்தலுக்குப் பிறகு ஜெயலலிதா மறைந்த நிலையில் அப்போதிலிருந்து அதிமுக விவகாரங்களை பாஜக மூக்கை நுழைத்து வருகிறது. டிடிவி தினகரன் பிரிந்தது என பல விவகாரங்களில் பாஜகவின் தலையீடு இருந்தது. இந்த நிலையில் அதிமுக தலைமையிலான கூட்டணியை என்டிஏ கூட்டணியாக மாற்ற பாஜக தலைமை விரும்புகிறது.
அப்படி மாறினால் அதில் ஓபிஎஸ், டிடிவி தினகரன் இணைய வேண்டி இருக்கும். ஆனால் எடப்பாடி பழனிச்சாமியும் அதற்கு மறுப்பு தெரிவித்து வருகிறார். இதனால் கூட்டணி தேர்தல் வரை தொடருமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. அதிமுக தயவில் தான் பாஜக இருக்கிறது என்றாலும் கட்சி தலைமை ஏன் அந்த கட்சிக்கு அடிபணிந்து போகிறது என்ற கேள்வி தொண்டர்களிடையே எழுந்திருக்கிறது. ஒருவேளை பாஜகவை கூட்டணியில் இருந்து கழற்றி விட்டால் பாமக, தேமுதிக தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட கட்சிகளை இணைத்து மெகா கூட்டணியை உருவாக்கலாம்.
பாஜக பிரிந்தாலும் அந்தக் கட்சியும் தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகளை கூட்டணிக்கு வர அழைப்பு விடுக்கும். விஜயை பொறுத்தவரை அதிமுக திமுகவுடன் கூட்டணி இல்லை என அறிவித்திருக்கிறார். இதனால் ஆந்திர மாடலில் எடப்பாடி பழனிச்சாமியும் தமிழக வெற்றிக்கழகமும் கைகோர்த்தால் உடன் சீமானும் இணைந்தால் எடப்பாடிக்கு வெற்றி உறுதி என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications