செங்கோட்டையன் நீக்கப்பட்ட நிலையில் 5ஆம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.. எடப்பாடி அறிவிப்பு
சென்னை: வரும் நவம்பர் 5 ஆம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் நடைபெறும் என அக்கட்சித் தலைமை அறிவித்துள்ளது. அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நீக்கப்பட்ட நிலையில் மா.செக்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 5ல் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது. சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் நவம்பர் 5ஆம் தேதி காலை 10.30 மணிக்கு மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுகவில் இருந்து மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் நீக்கப்பட்ட நிலையில், உட்கட்சிக் குழப்பங்கள் அதிகரித்துள்ள நிலையில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்ட அறிவிப்பில், அனைத்து மாவட்டச் செயலாளர்களும் நவம்பர் 5ஆம் தேதி காலை 10.30 மணிக்கு சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த கூட்டம் கட்சியின் தற்போதைய அரசியல் நிலைமையில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. முக்கிய தீர்மானங்கள், வரவிருக்கும் தேர்தலுக்கான வியூகங்கள், மாவட்ட மட்ட அமைப்புகளில் மாற்றங்கள் உள்ளிட்ட விவாதங்கள் நடைபெறும் எனக் கூறப்படுகிறது.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் எனக் கூறி, பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கெடு விதித்திருந்தார். இதனால், அவரது கட்சி பதவிகள் அதிரடியாக பறிக்கப்பட்ட நிலையில், உறுப்பினராக தொடர்ந்தார். இதனிடையே, பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் குரு பூஜை அன்று, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுடன் இணைந்து கூட்டாக மரியாதை செலுத்தினார்.
மேலும், சசிகலாவையும் சந்தித்து பேசினார்.
இதன் தொடர்ச்சியாக, செங்கோட்டையனை அதிமுகவில் இருந்து எடப்பாடி பழனிசாமி நேற்று அதிரடியாக நீக்கினார். இந்நிலையில் ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன், அதிமுகவில் இருந்து தன்னை நீக்கியது வேதனை அளிப்பதாக தெரிவித்தார். முத்துராமலிங்கத் தேவர் குரு பூஜையில் பங்கேற்றதற்கு கிடைத்த பரிசு தான் கட்சியில் இருந்து நீக்கம் என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
துரோகத்திற்கான நோபல் பரிசு கொடுத்தால் எடப்பாடி பழனிசாமிக்குதான் தர வேண்டும் என்றும் செங்கோட்டையன் சாடினார். செங்கோட்டையன் எடப்பாடி பழனிசாமி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்த நிலையில் சேலத்தில் செய்தியாளர்களை எடப்பாடி பழனிசாமி சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் புகைப்படங்கள் இல்லாத காரணத்தை சொல்லி கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்காமல் புறக்கணித்தார். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அதற்கான காரணத்தை சொல்லியும் அவர் அதனை ஏற்கவில்லை. ஆனால் செங்கோட்டையன் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் புகைப்படங்கள் இல்லாமல் கருணாநிதி, மு.க.ஸ்டாலின் படங்கள் இருந்தன. அப்போதே அவர் திமுகவின் பி டீமாக செயல்பட தொடங்கிவிட்டார்.
செங்கோட்டையன் கடந்த 6 மாதங்களாக கட்சிக்கு எதிராக தான் செயல்பட்டு வந்தார். செங்கோட்டையன் குறிப்பிடுபவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள், பிரிந்து சென்றவர்கள் அல்ல. கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் இணைந்து செயல்பட்டதால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கட்சிக்கு துரோகம் செய்தால் இதுதான் நிலைமை. பொதுக்குழு தீர்மானம் நிறைவேற்றி கட்சியை விட்டு நீக்கியவர்களோடு தொடர்பு வைத்திருந்தால், நீக்காமல் என்ன செய்வார்கள்? என்றார்.












Click it and Unblock the Notifications