வெளிநாட்டு போட்டோஷூட்..ஆடம்பர பகட்டு கார் ரேஸ்! சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு..எடப்பாடி அட்டாக்
சென்னை: தமிழகத்தில் போதைப் பொருள் கடத்தல் சம்பவங்களும், புழக்கமும் அதிகரித்திருக்கும் நிலையில், அடுத்து என்ன விளம்பரம் என்பதில் மட்டுமே இருக்கும் கவனத்தை, மாநிலத்தின் அடிப்படை பிரச்சனைகளான சட்டம் ஒழுங்கை சீர்படுத்துவதிலும், போதைப்பொருள் புழக்கத்தை ஒழிப்பதிலும் கவனம் செலுத்துமாறு திமுக முதல்வரை வலியுறுத்துவதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கஞ்சா, மெத்தம்பெட்டமைன் உள்ளிட்ட போதைப் பெருட்களின் புழக்கம் அதிகரித்திருப்பதாகவும், இதன் காரணமாக மாநிலத்தில் சட்ட விரோத சம்பவங்களும், கொலை, கொள்ளை உள்ளிட்டவையும் அதிகரித்து வருவதாகவும் எதிர்க் கட்சிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்நிலையில் கடந்த 29.08.2024 மற்றும் 30.08.2024 ஆகிய தேதிகளில், சென்னையில் உள்ள வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர்.
அந்த சோதனையில் சுமார் 50 கோடியே 65 லட்சம் ரூபாய் மதிப்பிலான 10 கிலோ 130 கிராம் எடையுள்ள மெத்தம்பெட்டமைன் என்ற போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், போதைப்பொருளை சென்னையில் இருந்து இராமநாதபுரம் கொண்டு சென்று அங்கிருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 6 பேரை கைது செய்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் ரூ.1.30 கோடி பணமும் மூன்று வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு, தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த சில மாதங்களில் மட்டும் சுமார் 130 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் தமிழகத்தில் மட்டும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதேபோல், சென்னை பொத்தேரி பகுதியில் உள்ள கல்லூரி மாணவர்களிடையே கஞ்சா புழக்கம் இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து போலீசார் நடத்திய சோதனையில் கஞ்சா, கஞ்சா சாக்லேட், கஞ்சா எண்ணெய் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்த இரு சம்பவங்களும் தமிழகத்தில் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், மாநிலத்தின் அடிப்படை பிரச்சனைகளான சட்டம் ஒழுங்கை சீர்படுத்துவதிலும், போதைப்பொருள் புழக்கத்தை ஒழிப்பதிலும் கவனம் செலுத்துமாறு திமுக முதல்வரை வலியுறுத்துவதாக அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக எதிர்க் கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,”விடியா திமுக அரசின் விளம்பரங்களுக்கு அப்பால் செய்திகளைப் பார்த்தால், வழக்கம் போல சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளும் போதைப்பொருள் புழக்கமுமே விடியா அரசின் உண்மை அடையாளங்களாக நாளிதழ்களை அலங்கரிக்கின்றன.
வாரக் கொலைப் பட்டியல்கள் தொடர்கின்றன. போதைப்பொருள் புழக்கமும் கடுகளவு குறைந்த பாடில்லை. விடியா திமுக ஆட்சியில் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பில் தமிழ்நாடு முக்கிய இடம் வகிக்கிறது என்றாலும் மிகையாகாது. இளைஞர்கள், குறிப்பாக கல்லூரி மாணவர்கள் இடையே இந்த போதைப்பொருட்கள் சர்வசாதாரணமாக புழங்குவதை சமீபத்திய செய்திகள் உணர்த்துகின்றன. இது மிகுந்த கவலையளிக்கிறது.
வெளிநாட்டு போட்டோஷூட்டிலும், ஆடம்பரப் பகட்டு கார் ரேஸிலும் மட்டுமே கவனம் செலுத்தி, அதன் வர்ணஜாலங்களுக்கு இடையே தமிழ்நாட்டின் உண்மை அவல நிலையை மறைக்க முயற்சிக்கும் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம். அடுத்து என்ன விளம்பரம் என்பதில் மட்டுமே இருக்கும் கவனத்தை, மாநிலத்தின் அடிப்படை பிரச்சனைகளான சட்டம் ஒழுங்கை சீர்படுத்துவதிலும், போதைப்பொருள் புழக்கத்தை ஒழிப்பதிலும் கவனம் செலுத்துமாறு விடியா திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன்.” என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications