அதிமுக+ தவெக + தேமுதிக + பாமக.. பக்காவாய் காய் நகர்த்தும் எடப்பாடி! சைலண்டாய் பாஜக பார்க்கும் வேலை!
சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டு முழுமையாக இருக்கும் நிலையில் தற்போதே கூட்டணி குறித்த பேச்சுகள் முளைத்திருக்கிறது. அதிமுகவும் திமுகவும் தேர்தலுக்கு தயாராகி வரும் நிலையில் அதிமுக ஆட்சியை மீண்டும் அமைத்து ஜெயலலிதாவுக்கு பிறகு தன்னை வலிமையான தலைவராக நிலை நிறுத்த எடப்பாடி பழனிச்சாமி முயன்று வருகிறார். இந்த நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் தமிழக வெற்றிக் கழகம், பாட்டாளி மக்கள் கட்சி, தேசிய முற்போக்கு திராவிட கழகம், ஏன் நாம் தமிழர் கட்சியை கூட சேர்க்கலாம் என எடப்பாடி பழனிச்சாமி திட்டமிட்டு வருகிறாராம்.
2026 சட்டமன்றத் தேர்தல் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு மிகப்பெரிய தேர்வு என்று தான் சொல்ல வேண்டும். 2016 இல் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு முதல்வராகவும் கட்சியின் பொதுச் செயலாளராகவும் எடப்பாடி பழனிச்சாமி பதவி ஏற்றார்.

ஆனால் அதற்குப் பிறகு நடந்த அனைத்து தேர்தல்களிலும் அதிமுக படுதோல்வியை சந்தித்தது. பத்து தோல்வியில் பழனிச்சாமி என திமுகவும் அவரை கடுமையாக விமர்சித்தது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே கட்சியில் இருந்து சசிகலா, டிடிவி தினகரன், ஆகியோர் சென்று விட்ட நிலையில், ஓ.பன்னீர்செல்வமும் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். தற்போது செங்கோட்டையனும் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக திரும்பி இருக்கிறார்.
இந்த நிலையில் 2026 சட்டமன்றத் தேர்தலை எடப்பாடி பழனிச்சாமி மிகுந்த ஆர்வத்தோடு எதிர்நோக்கி காத்திருக்கிறார். திமுக மீதான அதிருப்தி, கூட்டணி கட்சி பலம் உள்ளிட்டவற்றை கொண்டு தேர்தலில் வெற்றி பெற்றால் எம்ஜிஆர் ஜெயலலிதாவுக்கு பிறகு தேர்தலை சந்தித்து முதல்வரானவர் என்ற பெருமையை எடப்பாடி பழனிச்சாமி பெறுவார். ஓ.பன்னீர்செல்வத்தை பொருத்தவரை ஜெயலலிதா பதவியில் இல்லாத போது இடைக்கால ஏற்பாடாகவே முதல்வர் ஆனவர்.
தானும் அப்படித் தான் பதவி ஏற்றவர் என்றாலும் மக்களை சந்தித்து வெற்றி பெற்று முதல்வராக வேண்டும் என்ற கனவு எடப்பாடி பழனிச்சாமிக்கு இருக்கிறது. அதே நேரத்தில் எதிர் அணியில் இருக்கும் திமுகவோ அசுர பலத்துடன் இருக்கிறது. காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் அங்கு கூட்டணியில் அங்கம் வகிக்கின்றன. இதனால் 2026 சட்டமன்ற தேர்தல் கடும் போட்டி அளிக்கும் வகையில் இருக்கும்.
தற்போது அதிமுக கூட்டணியில் எஸ்டிபிஐ. தேமுதிக மற்றும் சில சிறிய கட்சிகள் இருக்கிறது. தமிழகத்தின் பிரதான கட்சிகளில் ஒன்றான பாமக பாஜக கூட்டணியில் இருக்கிறது. இந்த நிலையில் 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றியை பிடிக்க அதிமுக வாக்கு வங்கி மட்டுமே போதாது, பொதுவான வாக்குகளும், திமுக எதிர்ப்பு வாக்குகளும், கூட்டணி கட்சி வாக்குகளும் எடப்பாடி பழனிச்சாமி தேனி நிச்சயம் தேவை.
அந்த வகையில் வட மாவட்டங்களில் வலுவாக இருக்கும் பாமகவை கூட்டணிக்குள் இழுக்க மறைமுக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் மாநிலங்களவை உறுப்பினர் பதவி தொடர்பாக அதிமுக கூட்டணியில் அதிருப்தியில் இருக்கும் தேமுதிக-வை சமாதானப்படுத்த எடப்பாடி பழனிச்சாமி முயன்று வருகிறார்.
மேலும் தமிழக அரசியலில் புதிய வரவான விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தையும் அதிமுக கூட்டணியில் கொண்டுவர எடப்பாடி பழனிச்சாமி முயற்சித்து வருகிறார்.அந்த வகையில் அதிமுக, பாமக, தேமுதிக, தமிழக வெற்றி கழகம், எஸ்டிபிஐ உள்ளிட்ட சில கட்சிகள் அதிமுக அணியில் இணையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தேவைப்பட்டால் நாம் தமிழர் கட்சியுடன் கூட கூட்டணி அமைக்க எடப்பாடி பழனிச்சாமி தயாராக இருக்கிறார் என்கின்றனர் அதிமுகவினர்.
அதே நேரத்தில் எடப்பாடி பழனிச்சாமி நினைக்கும் கூட்டணி அமைந்து விடக்கூடாது என பாஜகவும் திமுகவும் திட்டமிட்டு வருவதாகவே கூறப்படுகிறது. இதற்கான அரசியல் நகர்வுகளும் திரை மறைவில் அரங்கேறி வருகிறது. இதன் மூலம் எடப்பாடி பழனிசாமி நினைத்தது நடக்குமா அல்லது திமுக நினைத்தது நடக்குமா என்பதுதான் எதிர்பார்ப்பாக உள்ளது.












Click it and Unblock the Notifications