மகளிருக்கு மாதம் ரூ.2 ஆயிரம் கொடுப்போம்.. அதிமுகவின் 5 தேர்தல் வாக்குறுதியை வெளியிட்ட எடப்பாடி!
சென்னை: அதிமுக ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு மாதம் ரூ.2 ஆயிரம் கொடுக்கப்படும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். ஆண்களுக்கும் கட்டணமில்லா பேருந்து பயண திட்டம் தொடங்கப்படும் என்று கூறியுள்ள எடப்பாடி பழனிசாமி, 5 லட்சம் மகளிருக்கு ரூ.25 ஆயிரம் மானியம் வழங்கப்பட்டு அம்மா இருசக்கர வாகன திட்டம் தொடங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
எம்ஜிஆரின் 109வது பிறந்தநாளினை முன்னிட்டு அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார். இதையடுத்து அதிமுகவின் முதற்கட்ட தேர்தல் அறிவிப்புகளை எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்கள் இருக்கும் சூழலில், எடப்பாடி பழனிசாமியின் அவசர அறிவிப்பு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், சட்டசபைத் தேர்தல் விரைவில் நடைபெறுவதை முன்னிட்டு மக்கள் நலனை குறிக்கோளாக வைத்து செயல்படும் அதிமுகவின் முதற்கட்ட வாக்குறுதிகள் இவை. அதன்படி அதிமுக ஆட்சிக்கு வந்தால் குலவிளக்கு திட்டம் செயல்படுத்தப்படும். இதன் மூலமாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதம் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும்.
இந்த தொகை குடும்பத் தலைவியின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். அதேபோல் ஆண்களுக்கும் கட்டணமில்லா பேருந்து திட்டம் செயல்படுத்தப்படும். மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து திட்டமும் தொடர்ந்து செயல்படுத்தப்படும். தொடர்ந்து அம்மா இல்லம் திட்டம். கிராமங்களில் சொந்த வீடு இல்லாதவர்களுக்கு அரசே நிலம் வாங்கி கான்க்ரீட் வீடுகளை கட்டிக் கொடுக்கும். நகரங்களில் வீடு இல்லாதவர்களுக்கு அரசே அடுக்குமாடி கட்டி வீடு அளிக்கப்படும்.
அதேபோல் ஒரே குடும்பத்தில் இருக்கும் பட்டியலின மக்கள், அவர்களுடைய மகன்கள் திருமணமாகி தனிக்குடித்தனம் செல்லும் போது அரசே இடம் வாங்கி கான்க்ரீட் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும். அதேபோல் 100 நாட்கள் வேலைவாய்ப்பு திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும். அதேபோல் அம்மா இருசக்கர வாகன திட்டத்திற்காக 5 லட்சம் மகளிருக்கு ரூ.25 ஆயிரம் மானியம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் திட்டங்களை விரிவாக்கம் செய்வதையே எடப்பாடி பழனிசாமி தேர்தல் வாக்குறுதியாக அறிவித்துள்ளார். அதேபோல் அம்மா ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தை மீண்டும் கொண்டு வருவதாக கூறியுள்ள எடப்பாடி பழனிசாமி, புதிய திட்டங்களை வெளியிடாதது பேசுபொருளாகி இருக்கிறது.












Click it and Unblock the Notifications