அடடே.. பிரதமரை பார்க்க கூட்டத்தோடு கூட்டமாக நின்ற அதிமுக மாஜி எம்.பி.. என்னது பாஜகவுக்கா? ஒரே ஷாக்!
சென்னை : சென்னைக்கு நேற்று வந்த பிரதமர் மோடியை வரவேற்க பாஜக தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுடன் கூட்டத்துடன் கூட்டமாக நின்று அதிமுக முன்னாள் எம்.பி நவநீதகிருஷ்ணன் காத்திருந்தார். தனக்கு பிரதமர் மோடியின் மீது மிகுந்த அபிமானம் உள்ளதாகவும் அதனால் பிரதமரைப் பார்க்க வந்ததாகவும் நவநீத கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்துப் பேசிய நவநீதகிருஷ்ணன், "நான் எம்.பியாக பணியாற்றிய போது பிரதமர் மோடியுடன் நல்ல பரிச்சயம் ஏற்பட்டது. பிரதமர் மோடியின் மீது எனக்கு மிகுந்த அபிமானம் உள்ளது. அவர் மீது எனக்கு ஒரு நல்ல மரியாதை, அன்பு உள்ளது. அதனால் நான் இங்கு வந்து பிரதமரைப் பார்க்க நிற்கிறேன்" எனத் தெரிவித்தார்.

கூட்டத்தோடு கூட்டமாக நிற்கிறீர்களே என செய்தியாளர் கேட்டதற்கு, "சாதாரண குடிமக்களாக வாழ்வதன் கஷ்டங்களையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும் இல்லையா?" என்றார். பிரதமரை பிடிக்கிறது என்றால் பாஜகவையும் பிடிக்கும்தானே என செய்தியாளர் கேள்வி எழுப்ப, டக்கென தடுமாறிய அதிமுக முன்னாள் எம்.பி நவநீத கிருஷ்ணன், "அதுக்கு மேல வேணாம் சார்" என மழுப்பலாக பதில் அளித்தார்.
கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் நடைபெற்ற திமுக முன்னாள் எம்.பி. டி.கே.எஸ்.இளங்கோவன் இல்லத் திருமணத்தில் கலந்து கொண்டு பேசிய அதிமுகவின் அப்போதைய ராஜ்யசபா எம்.பி. நவநீதி கிருஷ்ணன், மாநிலங்களவைக்குப் புதிதாக சென்ற போது பல விஷயங்களை கற்றுக் கொள்ள வேண்டிய நிலையில் இருந்தேன். திமுக எம்.பி கனிமொழி எனக்கு பல விஷயங்களைக் கற்றுக் கொடுத்தார் எனப் பேசினார்.
ஒரு முறை மத்திய அமைச்சருடன் சண்டை போட வேண்டியிருந்தது. அப்போது சகோதரி கனிமொழி என்னை சமாதானப்படுத்தி அவரே மத்திய அமைச்சருடன் பேசினார். மேலும், எனக்கும் ஒரு அறிவுரை கொடுத்து, நம்மூர் மாதிரி பேசக்கூடாது என்றும், எரிச்சலூட்டாமல் அழுத்தம் தர வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். தேவையில்லாமல் சிக்கலில் மாட்டிவிடக் கூடாது என எனக்குப் புரிய வைத்தார் என கனிமொழியை பாராட்டிப் பேசினார்.
அதிமுக எம்பி, திமுக எம்.பி கனிமொழியை பாராட்டிப் பேசிய ஒரேநாளில் அவரது கட்சி பதவியை அதிமுக தலைமை பறித்தது. அதிமுகவின் வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் பொறுப்பிலிருந்து எம்.பி. நவநீத கிருஷ்ணன் நீக்கப்பட்டுள்ளதாக அப்போது அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிவித்தனர்.

எனினும், அவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் வரை அதிமுக எம்.பியாக தொடர்ந்தார். அதன் பிறகு அவருக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இதையடுத்து, சைலண்டாக இருந்து வருகிறார் நவநீத கிருஷ்ணன். மாநிலங்களவையில் காஷ்மீர் பிரச்சனை குறித்த விவாதத்தின்போது, 'காஷ்மீர் பியூட்டிஃபுல் காஷ்மீர்' என்ற பாடலை பாடி ட்ரெண்டான நவநீத கிருஷ்ணன், தற்போது ஒதுங்கி இருந்து வருகிறார். இந்நிலையில், அவர் பிரதமர் மோடியைப் பார்க்க சாலையோரம் காத்திருந்தது சல்சலப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications