அதிமுக ஐடி விங் நிர்வாகியின் ‘தில்லாலங்கடி’.. பிரசாத்தை கட்சியில் இருந்து நீக்கிய எடப்பாடி!
சென்னை: அதிமுக ஐடி விங் நிர்வாகி பிரசாத்தை கட்சியிலிருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். ஐடி விங்கின் துணை செயலாளரான பிரசாத் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்து விடுவிக்கப்படுவதாகவும் அறிவித்துள்ளார்.
அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பணம் பெற்று மோசடி செய்த வழக்கில் பிரசாத் சிக்கியுள்ள நிலையில், கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

மோசடி
சென்னை மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையை சேர்ந்தவர் பிரசாத் (33), அதிமுக ஐடி விங் தென் சென்னை தெற்கு கிழக்கு மாவட்ட துணை செயலாளரான இவர் கடந்த 22 ஆம் தேதி தனது நண்பர்கள் சிலருடன் நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள பிரபல தனியார் பாரில் மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது ஒருவருடன் தகராறில் பார் அடித்து நொறுக்கப்பட்டது.
பார் மேலாளர் அளித்த புகாரின்படி அதிமுக ஐடி விங் நிர்வாகி பிரசாத், அதிமுக நிர்வாகி அஜய் வாண்டையார், அவரது நண்பரான முக்குலத்தோர் புலிப்படையை சேர்ந்த ரவுடி சுனாமி சேதுபதி, கணேஷ்குமார், தனசேகரன் மற்றும் தூண்டில் உணவக உரிமையாளர் ராஜா என மொத்தம் 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
அதிமுக ஐடி விங் நிர்வாகி மோசடி
இதில் சிக்கிய அதிமுக ஐடி விங் நிர்வாகி பிரசாத் மீது அரசு வேலை வாங்கி தருவதாக பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக புகார்கள் அளிக்கப்பட்டன. பிரசாத்திடம் நடத்திய விசாரணையில், அஜய் வாண்டையார், ரவுடி சுனாமி சேதுபதி, தூண்டில் உணவக உரிமையாளர் ராஜா ஆகியோர் பல சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்ததும் அம்பலமானது.
மேலும், தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறிக்கும் வேலையும் பிரசாத் உள்ளிட்டோர் அடங்கிய கும்பல் செய்து வந்துள்ளது. இவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், மேலும் சிலரும் இந்த வழக்கில் சிக்கியுள்ளனர்.
பிரசாத் நீக்கம்
இந்நிலையில், அதிமுக ஐடி விங் நிர்வாகி பிரசாத், அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அதிமுக தகவல் தொழில்நுட்ப அணியின் தென் சென்னை தெற்கு கிழக்கு மாவட்ட துணை செயலாளரான பிரசாத் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்து விடுவிக்கப்படுவதாகவும் அறிவித்துள்ளார் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
விளாசிய திமுக ஐடி விங்
முன்னதாக திமுக ஐடி விங் வெளியிட்ட சமூக வலைதள பதிவில், "அஇஅதிமுகவின் தகவல் தொழில்நுட்ப அணியா இல்லை, தரகர் அணியா? சட்டத்திற்கு புறம்பாக ரவுடியிசம், கட்டப்பஞ்சாயத்து, பண மோசடி, பாலியல் சீண்டல் என அஇஅதிமுகவின் குற்றச் செயல்களின் எண்ணிக்கைக்கு அளவே இல்லை.
அஇஅதிமுகவின் தகவல் தொழில்நுட்ப அணியா இல்லை, தரகர் அணியா?
— DMK IT WING (@DMKITwing) June 6, 2025
சட்டத்திற்கு புறம்பாக ரவுடியிசம், கட்டப்பஞ்சாயத்து, பண மோசடி, பாலியல் சீண்டல் என அஇஅதிமுகவின் குற்றச் செயல்களின் எண்ணிக்கைக்கு அளவே இல்லை.
அஇஅதிமுகவின் தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில துணைச் செயலாளர் பிரசாத் என்பவர்… pic.twitter.com/sTc2Jv8Ezj
அஇஅதிமுகவின் தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில துணைச் செயலாளர் பிரசாத் என்பவர் நுங்கம்பாக்கத்தில் ஒரு மது கூடத்தில் மோதலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
தரகர் அணியா?
அவர் மீது தொடர்ச்சியாக பலர் பணமோசடி, மற்றும் ஒன்றிய அரசில் வேலை வாங்கித் தருவதாக கூறி தரகர் வேலை செய்து ஏமாற்றியது தொடர்பாக புகார் அளித்து வருகின்றனர். அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப அணி, தரகர் அணியாக கேவலப்பட்டு நிற்கிறது.
ஆனாலும், இதுவரை இவர் மீது அதிமுக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஏன்? அவர் மீது பயமா? அல்லது அவரிடம் உள்ள மிதுன் சார்ந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள்தான் பயத்திற்கு காரணமா?" எனக் காட்டமாக விமர்சித்திருந்தது.












Click it and Unblock the Notifications