"ராஜினாமா செய்வேன்": செங்கோட்டையன் ஆதரவு முன்னாள் MP சத்தியபாமா சொன்ன சில நிமிடங்களில் பதவி பறிப்பு
சென்னை: "அதிமுகவில் எனது பொறுப்பை ராஜினாமா செய்யப் போகிறேன். நான் எதற்கும் தயாராக இருக்கிறேன்" என அதிமுக முன்னாள் எம்.பி.யும், செங்கோட்டையன் ஆதரவாளருமான சத்யபாமா திட்டவட்டமாகத் தெரிவித்த சில நிமிடங்களில் அவரது கட்சி பொறுப்புகளை பறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஆதரவாளர்கள் பலரும் கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், செய்தியாளர் சந்திப்பில் செங்கோட்டையனுக்கு அருகில் அமர்ந்திருந்த அதிமுக முன்னாள் எம்.பி சத்தியபாமாவின் ஈரோடு மேற்கு மாவட்ட மகளிர் அணி செயலாளர் பதவி பறிக்கப்படாமல் இருந்தது. சத்யபாமாவும் கட்சி பொறுப்புகளை ராஜினாமா செய்யப்போவதாக இன்று அறிவித்தார்.

செங்கோட்டையன் பதவி பறிப்பு
அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைக்க 10 நாள் கெடு விதித்த மறுநாளே செங்கோட்டையன், கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அதிமுகவில் அவர் வகித்து வந்த அமைப்புச் செயலாளர் மற்றும் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளர் ஆகிய பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுவதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று அறிவித்தார். மேலும் அவரது ஆதரவாளர்களும் கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டனர்.
முன்னாள் எம்.பி சத்தியபாமா
இந்த வரிசையில் அதிமுக முன்னாள் எம்.பி சத்தியபாமா மீதும் நடவடிக்கை எடுக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்தது. ஏனெனில் சமீபத்தில் செங்கோட்டையனை சந்தித்து தனது ஆதரவை சத்தியபாமா தெரிவித்திருந்தார். இவர் திருப்பூர் மக்களவை தொகுதி முன்னாள் எம்.பி. அதன்பிறகு சீட் வழங்கப்படவில்லை. தற்போது அதிமுக மாவட்ட மகளிரணி செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார்.
கொங்கு மண்டலத்தில் செங்கோட்டையன் ஆதரவாளராக திகழ்ந்து வருகிறார் சத்யபாமா. தற்போது எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக செங்கோட்டையன் போர்க்கொடி உயர்த்தியுள்ள நிலையில், சத்தியபாமாவும் செங்கோட்டையனுக்கு ஆதரவாக இருந்து வருகிறார். எனவே கட்சி பொறுப்புகள் மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து சத்யபாமா நீக்கம் செய்யப்படலாம் எனக் கூறப்பட்டது.
சத்தியபாமா பதவி பறிப்பு
இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த சத்தியபாமா, "அதிமுகவில் எனது பொறுப்பை ராஜினாமா செய்யப் போகிறேன். நான் எதற்கும் தயாராக இருக்கிறேன். தி.மு.க.வை வீழ்த்த அதிமுகவில் இருந்து பிரிந்தவர்கள் ஒன்றிணைய வேண்டும். செங்கோட்டையனுக்கு ஆதரவாக மாவட்ட மகளிர் அணி செயலாளர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளேன்" என அதிமுக முன்னாள் எம்.பி.யும், செங்கோட்டையன் ஆதரவாளருமான சத்யபாமா திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
இந்நிலையில், சத்தியபாமாவின் கட்சி பொறுப்புகளை பறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். தலைமை செயற்குழு உறுப்பினர், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட மகளிரணி செயலாளர் பொறுப்புகளை வகித்து வந்தார் சத்தியபாமா. செங்கோட்டையனுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் சத்தியபாமாவின் கட்சி பதவிகள் பறிக்கப்பட்டுள்ளன.
கூண்டோடு ராஜினாமா
எடப்பாடி பழனிசாமியின் நடவடிக்கைக்கு எதிராக ஈரோடு மாவட்ட அதிமுகவினர் திரண்டுள்ளனர். செங்கோட்டையனுக்கு ஆதரவாக நம்பியூர் பகுதியைச் சேர்ந்த அதிமுகவினர் சுமார் 2,000க்கும் மேற்பட்டோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்து, அதன் கடிதங்களை தனித்தனியே எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பி வைத்து வருகின்றனர். இதில் ஒன்றிய, நகர, கிளை, கழக, பேரூர், வார்டு செயலாளர்கள் உள்ளிட்டோர் அடக்கம்.
இந்நிலையில் வரும் 9 ஆம் தேதி செங்கோட்டையன் மீண்டும் செய்தியாளர்களைச் சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்போது அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களும் உடனிருப்பார்கள் என்று தெரிகிறது. இந்த சந்திப்பில் தனது அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து செங்கோட்டையன் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications