பொங்கலுக்கு முன் தீர்ப்பு வந்துடும்..இபிஎஸ் தான் பொதுச்செயலாளர்.. அடித்து கூறும் பொள்ளாச்சி ஜெயராமன்
சென்னை: உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு தங்கள் தரப்புக்கே சாதகமாக வரும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன், எடப்பாடி பழனிசாமி பொங்கலுக்கு முன்பாக பொதுச்செயலாளராக நீதிமன்றத்தால் நியமிக்கப்படுவார் என்றும் வரும் சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர் வேட்பாளர் என்றும் அவரை ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி அமைக்கப்படும் எனவும் கூறினார்.
அதிமுகவில் ஒற்றைத்தலைமை பிரச்சினையால் எடப்பாடி பழனிசாமிக்கும் ஓ பன்னீர் செல்வத்திற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து, கடந்த ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி தரப்பில் பொதுக்குழு கூட்டப்பட்டது.
இந்த பொதுகுழுவில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். அதிமுகவில் இருந்து ஓ பன்னீர் செல்வத்தை நீக்குவதாகவும் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதிமுக வழக்கு
ஆனால், ஒருங்கிணைப்பாளரான தனது ஒப்புதல் இன்றி நடைபெற்ற இந்த பொதுக்குழு செல்லாது என்று அறிவித்த ஓபிஎஸ் நீதிமன்றத்தில் சட்ட போராட்டம் நடத்தி வருகிறார். இந்த வழக்கில் அதிமுக பொதுக்குழு செல்லும் என்று அறிவித்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தற்போது மேல்முறையீட்டு வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த 3 தினங்களாக பரபரப்பான வாதங்கள் ஓ பன்னீர் செல்வம் தரப்பிலும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து தரப்பிலும் வாதங்கள் முன்வைக்கப்பட்டது.

பொள்ளாச்சி ஜெயராமன் பேட்டி
இந்த வழக்கின் விசாரணை வரும் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு எப்படி இருக்கும் என்று அதிமுகவினர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. பொள்ளாச்சி அருகே உள்ள ஆலம்பாளையம் பகுதியில் எம்.எல்.ஏ நிதி ரூ.9 லட்சம் செலவில் கான்கீரிட் சாலை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த கான்கீரிட் சாலை அமைக்க பூமி பூஜை இன்று நடைபெற்றது. இதற்கு எம்.எல்.ஏ பொள்ளாச்சி ஜெயராமன் தலைமை தாங்கி சாலை அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த பொள்ளாச்சி ஜெயராமன் பொங்கலுக்கு முன்பாக இந்த வழக்கில் தீர்ப்பு வந்துவிடும் என்று நம்பிக்கையாக கூறினார். இது தொடர்பாக பொள்ளாச்சி ஜெயராமன் கூறியதாவது:-

அதிமுகவின் பொதுச்செயலாளராக..
அதிமுக நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை ஒட்டுமொத்தமாக எடப்பாடி பழனிசாமி தலைமைதான் வேண்டும் என்று ஏற்றுக்கொண்டு இருக்கின்றனர். எடப்பாடி பழனிசாமி இன்றைக்கு ஒருமித்த தலைமையாக மக்கள் மன்றத்தில் ஜொலிக்கிறார். தற்போது நடந்து வரும் வழக்கு நியாயமான முறையில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. பொங்கலுக்கு முன்பாக தீர்ப்பு கிடைத்து அதிமுகவின் பொதுச்செயலாளராக நீதிமன்றத்தால் எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்படுவார்.

அதிமுக தலைமையில் தான் கூட்டணி
கட்சியின் பொதுச்செயலாளர் ஆக நீதிமன்றம் அவரை நியமிக்கும் என்ற எண்ணத்தோடு இருக்கிறோம். அது நிச்சயம் நடக்கும். தமிழகத்தில் அதிமுக அதன்பிறகு சிறப்பாக செயல்படும். வரும் சட்டமன்ற தேர்தலில் முதல் அமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் கூட்டணி அமைக்கப்படும். அதாவது அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

பொதுச்செயலாளர் எடப்பாடி தான்
முன்னதாக, நாமக்கல்லில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணியும் இதேபோன்ற ஒரு கருத்தை தெரிவித்து இருந்தார். தங்கமணி அளித்த பேட்டியில், அதிமுகவின் சட்ட விதிகளுக்கு உட்பட்டுதான் கட்சியின் விதிகள் மாற்றப்பட்டு உள்ளது. தனக்கு ஆதரவாக உள்ளவர்களை தக்க வைத்துக் கொள்வதற்காக ஓ பன்னீர் செல்வம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வாதம் முன்வைக்கப்பட்டது. தொடர்ந்து நடைபெறவுள்ள எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதத்தின் போது சிறப்பாக வாதங்களை முன்வைத்து வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக வருவார் என்ற நம்பிக்கை உள்ளது" எனக் கூறினார்.












Click it and Unblock the Notifications