5 ஆண்டுகளாக.. அதிமுகவை ஆட்டிப் படைத்த ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் அடியோடு ரத்து
சென்னை: அதிமுகவில் கடந்த 5 ஆண்டுகள் பல்வேறு கலகங்களுக்கும் களேபரங்களுக்கும் காரணமாக இருந்த ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் இன்றைய அக்கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் அடியோடு ரத்து செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
Recommended Video
ஜெயலலிதா மறைந்த போது முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றார். அப்போது சசிகலா முதல்வராக ஆசைப்பட்டார். இதனால் முதல்வர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா செய்து தர்மயுத்தம் நடத்தினார். அவருக்கு 11 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்திருந்தனர்.

ஓபிஎஸ் கோஷ்டி இணைப்பு
இதனையடுத்து தாம் முதல்வராக வேண்டும் என்பதற்காக அதிமுக எம்.எல்.ஏக்களை சசிகலா, கூவத்தூரில் தங்கவைத்தார். ஆனால் சசிகலாவுக்கு சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை உறுதியானதால் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கினார். பின்னர் சசிகலா சிறைவாசம் அனுபவித்தார்.
அப்போது அதிமுக தினகரன் கட்டுப்பாட்டில் இருந்தது. ஒரு கட்டத்தில் தினகரனும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். இதனால் எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டது. இதனையடுத்து ஓபிஎஸ் தலைமையிலான அதிருப்தி கோஷ்டியுடன் எடப்பாடி பழனிசாமி அணி பேச்சுவார்த்தை நடத்தியது. இதற்குப் பிறகு ஓபிஎஸ், இபிஎஸ் அணிகள் இணைந்தன. v

இரட்டை தலைமை உருவானது எப்படி?
இந்த இணைப்பைத் தொடர்ந்து இரு அணிகள் இணைப்பின் போது 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் 21-ந் தேதியன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும் இணை ஒருங்கிணைப்பாளராக தாமும் செயல்படுவோம் என்றார். பின்னர் 2017-ம் ஆண்டு செப்டம்பர் 12-ந் தேதி அதிமுக பொதுக்குழு நடைபெற்றது. அப்பொதுக் குழுவில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்புகள் உருவாக்கப்பட்டன; அத்துடன் அதிமுகவின் பொதுச் செயலாளருக்கு அளிக்கப்பட்டிருக்கும் அனைத்துப் பொறுப்புகளும், அதிகாரங்களும், ஒருங்கிணைப்பாளருக்கும், இணை ஒருங்கிணைப்பாளருக்கும் முழுமையாக இணைந்து செயல்பட பொதுக்குழு ஒப்புதல் அளித்தது. இதன்பின்னர் அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருக்கிணைப்பாளர் இருவரும் கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவர் என்று அதிமுக அமைப்பு விதியில் திருத்தம் கொண்டும் வரப்பட்டது. இத்திருத்தத்துக்கு பொதுக்குழு ஒப்புதல் தேவைப்பட்டிருந்தது.

இரட்டை தலைமையால் மோதல்
இந்த நிலையில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளாள் அதிமுக வலுவடையாமல் இரண்டு கோஷ்டிகளாக வலிமையாக பிளவுபட்டுதான் நின்றது. சட்டசபை தேர்தலுக்கு முன்னர் வேட்பாளர் தேர்வு, தேர்தல் பிரசாரம், முதல்வர் வேட்பாளர்; சட்டசபை தேர்தலுக்குப் பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் பதவி என பல விவகாரங்களில் இரு கோஷ்டிகளும் மிக மோசமாக மோதிக் கொண்டன. இதன் உச்சமாகத்தான் இப்போது ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை இன்று ரத்து செய்திருக்கிறது இபிஎஸ் அணி கூட்டிய அதிமுக பொதுக்குழு.

இரட்டை தலைமை ரத்து
அதிமுகவினரைப் பொறுத்தவரையில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்கின்ற இரட்டை தலைமையால் ஒற்றுமை இல்லை; ஆக்கப்பூர்வமாக செயல்பட முடியவில்லை என்கிற ஆதங்கம் இருக்கிறது. இதனையே பெரும்பான்மையான அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் வலியுறுத்த இப்பதவிகள் இன்று ரத்து செய்யப்பட்டுவிட்டன. இதனையடுத்து மீண்டும் பொதுச்செயலாளர் பதவி உருவாக்கப்படுகிறது. அதற்கு முன்னதாக இடைக்காலப் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் அடுத்த 4 மாதங்களில் நடைபெறும். அத்தேர்தலில் போட்டியிட 10 மாவட்ட செயலாளர்கள் முன்மொழிய வேண்டும் என்கிற திருத்தமும் கொண்டுவரப்பட்டிருக்கிறது. அதிமுகவில் கலகங்களுக்கு வழிவகுத்த இரட்டைத் தலைமை முறை இன்றைய அதிமுக பொதுக்குழுவுடன் முடிவுக்கும் வந்துவிட்டது!












Click it and Unblock the Notifications