ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. அதிமுக புறக்கணிப்பு.. எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். ஆட்சி அதிகாரத்தை திமுக தவறாக பயன்படுத்தும் என்பதால் இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக கூறியுள்ள இபிஎஸ், தேர்தல் சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடைபெறாது என்றும் கூறியுள்ளார்.
2021ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈவெரா தேர்வு செய்யப்பட்டார். ஆனால் அவர் திடீரென மாரடைப்பு காரணமாக உயிரிழந்த பின், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு 2023ஆம் ஆண்டு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. அந்த இடைத்தேர்தலில் திருமகன் ஈவெரா-வின் தந்தையான ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றிபெற்றார்.

ஆனால் அவரும் டிசம்பர் மாதத்தில் உடல்நிலை பாதிப்பு காரணமாக காலமானார். இதனால் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு மீண்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முதல் ஈரோடு கிழக்கு தொகுதிக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது. டிச.5ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்கவுள்ள நிலையில், திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இம்முறை திமுகவே நேரடியாக போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக சார்பாக முன்னாள் எம்எல்ஏ சந்திரகுமார் போட்டியிடுவார் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். இவர் ஏற்கனவே 2011ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் தேமுதிக சார்பாக போட்டியிட்டு வென்றவர்.
திமுக உடனடியாக வேட்பாளரை அறிவித்து தேர்தல் பணிகளை தொடங்கியுள்ள நிலையில், அதிமுக இம்முறை இடைத்தேர்தலில் போட்டியிடுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடாமல் புறக்கணிப்பதாக அறிவித்தது. இதனால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடுமா அல்லது புறக்கணிக்குமா என்ற கேள்வியும் எழுந்தது.
இந்த நிலையில் அதிமுக சார்பாக ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆட்சி அதிகாரத்தை திமுக தவறாக பயன்படுத்தும் என்பதால் இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக கூறியுள்ள இபிஎஸ், தேர்தல் சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடைபெறாது. ஒழுங்கு முற்றிலுமாக சீர்கெட்டுள்ள, நிர்வாகத் திறனற்ற திமுக-வின் ஆட்சியில் நடக்கவுள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிக்கிறது.
கடந்த முறை நடைபெற்ற ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில், அள்ளி இறைக்கப்பட்ட பணம், மது, கொலுசு, குக்கர், தங்கக்காசு உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் என, இயை எல்லாவற்றையும் தாண்டி திமுக-வின் மிரட்டல், அப்பாவி மக்களைப் பெருமளவில் அச்சுறுத்தியது.
வாக்காளர்களை பட்டியில் அடைத்த அவலமும் நடந்தேறியது. பணபலம், படைபலத்துடன் பல்வேறு அராஜகங்கள் மற்றும் வன்முறைகளை கட்டவிழ்த்துவிட்டு, மக்களை சுதந்திரமாக வாக்களிக்க விடமாட்டார்கள் என்பதால் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலை, அதிமுக புறக்கணிக்கிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications