புது ரூட்டில் அதிமுக.. 234 தொகுதிகளுக்கும் சுற்றுப்பயணத்தை தொடங்கும் எடப்பாடி பழனிசாமி
சென்னை: தவெக தலைவர் விஜயை தொடர்ந்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் 234 தொகுதிகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்த சுற்றுப்பயணத்தின் போது திமுக மீதான விமர்சனத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல திட்டமிட்டுள்ள எடப்பாடி பழனிசாமி, அதிமுகவில் நிலவி வரும் மோதலையும் முடிவுக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே இருக்கும் நிலையில், அதிமுக - பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிமுக - பாஜக கூட்டணி தொடர்பாக யாரும் கருத்து சொல்லக் கூடாது என்று எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இருந்தாலும் அடிமட்ட தொண்டர்கள் அளவில் இன்னும் அதிமுக - பாஜக கூட்டணி ஒட்டவில்லை என்றே பார்க்கப்படுகிறது.

பூத் கமிட்டி பணிகள்
இதனிடையே அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த சில நாட்களாகவே மாவட்டச் செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகளை எடப்பாடி பழனிசாமி சந்தித்து வருகிறார். பூத் கமிட்டி பணிகளை ஜூலை முதல் வாரத்திற்குள் முடிக்க எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ள நிலையில், அவர்களின் குற்றப் பின்னணியையும் சரி பார்த்து நியமனம் செய்ய வேண்டும் என்று கூறி இருக்கிறார்.
கூட்டணி பேச்சுவார்த்தை
அதேபோல் திமுகவுக்கு எதிராக ஒரு மெகா கூட்டணியை அமைக்க வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக இருக்கிறார். பாமக மற்றும் தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை அதிமுக இதுவரை தொடங்கவில்லை. ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையிலான மோதலால், கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்க தாமதம் ஏற்பட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது.
எடப்பாடி பழனிசாமி பிளான்
இதனிடையே தமிழ்நாடு முழுக்க 234 தொகுதிகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பயணித்து மக்களை சந்திப்பதோடு, திமுகவுக்கு எதிரான பிரச்சாரத்தை தொடங்கவும் திட்டமிட்டிருக்கிறார். ஏற்கனவே முதல்வர் ஸ்டாலின் ரோடு ஷோ நடத்தி மக்களின் ஆதரவை கோரி வருகிறார்.
விஜய் ஸ்டைலில் இபிஎஸ்
இன்னும் ஒரு மாதத்தில் தவெக தலைவர் விஜய் சுற்றுப்பயணம் நடத்தவுள்ளார். அதேபோல் ஜூலை 25ஆம் தேதி பாமக செயல் தலைவர் அன்புமணியும் உரிமை மீட்பு பயணத்தை தொடங்க உள்ளார். அந்த பாணியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் சுற்றுப்பயணத்தை தொடங்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதனை தனது பலமான கொங்கு மண்டலத்தில் இருந்து தொடங்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது.
எப்போது தொடங்கும்?
அதேபோல் மாவட்ட அளவில் அதிமுக நிர்வாகிகளுக்கு இடையில் இருக்கும் பிரச்சனையையும் சரி செய்ய எடப்பாடி பழனிசாமி முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திலேயே இதுதொடர்பாக ஏற்பாடுகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், விரைவில் சுற்றுப்பயணம் தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என்று அக்கட்சியினர் காத்திருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications