லோக்சபா தேர்தலுக்கும், இடைத் தேர்தலுக்கும் சம்மந்தமே இல்லை பாருங்க.. திமுகவுக்கு அதிமுக செம போட்டி
Recommended Video
சென்னை: தமிழகத்தில் திராவிட சித்தாந்தத்திற்கும், அல்லது திராவிடக் கட்சிகளுக்கும், மாற்று கிடையாது என்பதை இந்த லோக்சபா தேர்தல் முடிவுகள் எடுத்துக் காட்டியுள்ளன.
தமிழக லோக்சபா தேர்தல் முடிவுகள், மற்றும் 22 சட்டசபைத் தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் யாராலும் யூகிக்க முடியாத அளவுக்கு உள்ளன. இவை இரண்டுக்கும் ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லாதது போல டிரென்ட் ஓடிக்கொண்டிருப்பதை, தற்போதைய முன்னிலை நிலவரத்தை வைத்து அறிய முடிகிறது.
தமிழகத்தில் 22 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மற்றும் லோக்சபா தொகுதிகளுக்கான தேர்தல் முடிவுகள், இன்று ஒரே நாளில் வெளியான போதிலும், லோக்சபா தேர்தல் முடிவுகளுக்கும் 22 சட்டசபை இடைத்தேர்தல் முடிவுகளுக்கும் நிறைய வித்தியாசம் தென்படுகிறது.

லோக்சபா தேர்தலில் திமுக அமோகம்
உதாரணத்திற்கு லோக்சபா தேர்தல் முடிவுகளில், தேனி லோக்சபா தொகுதி தவிர மற்ற எங்கும் அதிமுக வேட்பாளர் முன்னிலை பெற்றதாக இல்லை. சிதம்பரம் தனி தொகுதியில் மட்டும் நிலைமை மேலும் கீழுமாக மாறி கொண்டிருக்கிறது. பிற தொகுதிகளில் திமுக கூட்டணி அமோக முன்னிலை பெற்றுள்ளது. ஆனால் 22 சட்டசபை தேர்தல்களில் பொறுத்தளவில் தற்போதைய நிலவரப்படி 12 தொகுதிகளில் திமுக முன்னிலை பெற்றிருந்தால், 10 தொகுதிகளில் அதிமுக முன்னிலை பெற்று வலுவான போட்டி கொடுத்து வருகிறது.

பாஜக கூட்டணி
இதுதான் அரசியல் பார்வையாளர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பாஜக மற்றும் மோடிக்கு எதிரான அலை தமிழகத்தில் வீசும் நிலையில், அந்த கட்சியோடு அதிமுக கூட்டணி அமைத்துக் கொண்டதால் தான், லோக்சபா தேர்தலில் அதிமுகவுக்கு வாக்களிக்க மக்கள் தயாராக இல்லை என்ற ஒரு கருத்தும் உருவாகியுள்ளது.

இடைத் தேர்தல் டிரெண்ட்
சட்டசபை இடைத் தேர்தல்களில் பொறுத்தளவில் வழக்கம் போல இரட்டை இலை அல்லது உதயசூரியன் என்ற நிலைப்பாட்டைதான் மக்கள் எடுத்துள்ளனர். பாஜகவுடன் கூட்டணி அமைத்ததுதான் லோக்சபா தேர்தலில் அதிமுகவுக்கு ஆபத்தாக சென்று விட்டது என்பதே பெரும்பான்மையான அரசியல் பண்டிதர்கள் கணிப்பாக உள்ளது.

அதிக கவனிப்பு
இது தவிர, லோக்சபா தேர்தலை விட சட்டசபை இடைத் தேர்தல்களில் அதிமுக தலைவர்கள் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்ததும், பலன் கொடுத்துள்ளது என்கிறார்கள். ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதற்காக சட்டசபை இடைத்தேர்தலில் அதிமுக தலைவர்கள் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் அனைவரும் களத்தில் இருந்து வேலை பார்த்துள்ளனர். வாக்காளர்களுடன், நெருங்கிய தொடர்பு வைத்துக் கொண்டனர். இதுவும் லோக்சபா மற்றும் இடைத்தேர்தல்கள் நடுவேயான வித்தியாசமான ட்ரெண்டுக்கு ஒரு காரணம் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications