தேர்தலில் முதுகில் குத்தப்பட்டேன்.. அதிமுக மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை.. தவெகவில் இணைந்த லோகேஷ்!
சென்னை: 2024 லோக்சபா தேர்தலில் அதிமுக சார்பாக நீலகிரியில் போட்டியிட்ட போது முதுகில் குத்தப்பட்டேன் என்று முன்னாள் சபாநாயகர் தனபால் மகன் லோகேஷ் தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். சட்டசபைத் தேர்தலில் அதிமுக 3வது இடத்திற்கு செல்லும் என்று கூறியுள்ள லோகேஷ், அதிமுக தொண்டர்கள் சோர்வடைந்து வேதனையில் இருப்பதாகவும் கூறியுள்ளார்.
முன்னாள் சபாநாயகரும், அதிமுக எம்எல்ஏவுமான தனபாலின் மகன் லோகேஷ் தமிழ்ச்செல்வன் தவெக தலைவர் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்துள்ளார். லோகேஷ் தமிழ்ச்செல்வன் அதிம்,உக ஐடி விங்கில் பல்வேறு பொறுப்புகளில் இருந்துள்ளார். இவருக்கு மறைந்த முதல்வர் எம்ஜிஆர் தான் பெயர் வைத்தார். அதேபோல் லோகேஷ் தமிழ்ச்செல்வனுக்கு திருமணம் நடத்தி வைத்தது ஜெயலலிதா தான்.

இவர் 2024 லோக்சபா தேர்தலின் போது நீலகிரி தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டது. 2 லட்சத்து 20 ஆயிரத்து 230 வாக்குகளை பெற்று 3வது இடத்தை பிடித்தார். இப்படியான சூழலில் திடீரென அதிமுகவில் இருந்து விலகி லோகேஷ் தமிழ்ச்செல்வன் தவெகவில் இணைந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து லோகேஷ் தமிழ்ச்செல்வன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், அதிமுகவில் எந்த சீனியருக்கும், கட்சிக்காக உழைத்தவர்களுக்கு மரியாதை குறைவாக உள்ளது. இதன் காரணமாகவே செங்கோட்டையன் போன்ற சீனியர்களே நீக்கப்பட்டனர். என் தந்தை மிகவும் பொறுமையாக இருப்பவர். அவர் பொறுத்துக் கொண்டு அதிமுகவிலேயே நாட்களை கடத்திவிட்டார்.
ஆனால் நான் கொள்கைக்காக செயல்பட வேண்டும் என்று நினைத்தேன். அடித்தட்டு மக்கள் திமுக, அதிமுக கட்சிகள் நம்பிக்கையை இழந்துவிட்டனர். இதனால் விஜய்க்கு ஆதரவாக தவெகவில் இணைந்துவிட்டேன். விஜய்யை முதல்வராக்க வேண்டும் என்பதே நோக்கம். பாஜகவுடன் கூட்டணி அமைத்ததே அதிமுக மீது மக்கள் நம்பிக்கையை இழக்க காரணம்.
எம்ஜிஆர், ஜெயலலிதா இருவருமே அதிமுகவை இப்படி நடத்தவில்லை. அடிதட்டு மக்களை வாக்கு வங்கியாக மட்டுமே பார்க்கிறார்கள். விஜய் மீது மக்களுக்கு நம்பிக்கை உள்ளது. அதிமுக சார்பாக அவினாசி தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று விருப்ப மனு கொடுத்தது உண்மைதான். நேர்காணலிலும் பங்கேற்றேன். குடும்ப சூழல் காரணமாக இந்த முடிவை எடுக்க கொஞ்சம் தாமதமாகிவிட்டது.
அதிமுகவிலும் சீட் கொடுக்க தயாராக இருந்ததாகவே நான் நினைக்கிறேன். ஆனால் சீட் கொடுத்த பின் அதனை மறுக்க முடியாது. அதன் காரணமாகவே முன் கூட்டியே தவெகவில் இணைந்துவிட்டேன். அதிமுகவின் எதிர்காலம் கஷ்டமாக இருக்கும். அதிமுக தொண்டர்கள் சோர்வடைந்துவிட்டனர். குறிப்பிட்ட சமூகத்திற்காக மட்டுமே அரசியல் செய்து வருகிறார்கள்.
இதனை மனதளவில் அதிமுக தொண்டன் உணர்ந்து புலம்பி கொண்டே இருக்கிறான்.. இந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுக 3வது இடத்திற்கு செல்ல வாய்ப்பு இருக்கிறது. எனது தந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்ட போது கட்சியில் இருந்து ஒருவரும் வந்து பார்க்கவில்லை.2024 தேர்தலில் வேட்பாளராக நிறுத்தப்பட்டு முதுகில் குத்தப்பட்டேன் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications