பாஜக பிரஷருக்கு நடுவே.. வேலையை ஆரம்பித்த எடப்பாடி! அதிமுக சார்பில் விருப்ப மனு விநியோகம் தொடங்கியது
சென்னை: அதிமுக கூட்டணியில் 55 க்கும் மேற்பட்ட இடங்களை கேட்டுப்பெறுவதில் பாஜக தீவிரமாக உள்ள நிலையில், இன்னொரு பக்கம் தேர்தலுக்கான விருப்ப மனு விநியோகத்தை அதிமுக இன்று முதல் தொடங்கி உள்ளது. சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விருப்ப மனு வினியோகத்தை தொடங்கி உள்ளது.
இன்று முதல் 23 ஆம் தேதி செவ்வாய்க் கிழமை வரை, தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் விருப்ப மனு விநியோகிக்கப்படும். தமிழகம், புதுவை, கேரள சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிட விரும்புபவர்கள் விருப்ப மனு பெற்றுக்கொள்ளலாம்.

30+ தொகுதிகளை கேட்கும் பாஜக?
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளதால், அரசியல் கட்சி பணிகள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன. தமிழகத்தில் தற்போதைய நிலவரப்படி 4 முனை போட்டி நிலவுகிறது. அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாஜக 55 க்கும் தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்து அதற்கான பட்டியலை எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கியதாக கூறப்படுகிறது.
ஆனால் அதிர்ச்சி அடைந்த எடப்பாடி தரப்பு, பாஜகவிற்கு 30+ தொகுதிகள் வேண்டும் என்றால் வழங்கலாம் என கூறியதாக சொல்லப்படுகிறது. அதிமுக கூட்டணியில் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட பாஜக, 20 தொகுதிகளில் போட்டியிட்டு 4 தொகுதிகளில் மட்டுமே வென்றது. எனவே, இம்முறை 30க்கும் அதிக தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக உள்ளதாகவும் அதுவும் வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை கேட்டு பெறுவதில் உறுதியாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
டெல்லி சென்ற நயினார் நாகேந்திரன்
இத்தகைய சூழலில் டெல்லி சென்ற நயினார் நாகேந்திரன் அமித்ஷா மற்றும் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது தமிழக அரசியல் சூழல், அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீட்டு உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டு இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. பாஜக ஒருபக்கம் கூடுதல் சீட் கேட்டு அழுத்தம் கொடுக்கும் நிலையில் மற்றொரு பக்கம் அதிமுக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் விருப்ப மனு பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.
இன்று முதல் விருப்ப மனு
இன்று மதியம் 12 மணியளவில் அதிமுக தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விருப்ப மனு விநியோகத்தை தொடங்கி வைத்துள்ளார். காலையிலேயே விருப்ப மனு பெற ஏராளமானோர் காத்து இருந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்ததும் விருப்ப மனு வாங்கி சென்று இருக்கிறார்கள். இன்று முதல் வரும் 23 ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்ப மனுக்களை பெற்று கொள்ளலாம்.
முன்னதாக இது தொடபாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- "தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல், புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டமன்றப் பொதுத் தேர்தல்கள் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்புகின்ற கழக உடன்பிறப்புகள், தலைமைக் கழகத்தில் வருகின்ற 15.12.2025 - திங்கட் கிழமை முதல் 23.12.2025 - செவ்வாய்க் கிழமை வரை,
தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரையிலும்; முதல் நாளான 15.12.2025 அன்று நண்பகல் 12 மணி முதல், அதற்கான படிவங்களைப் பெற்று, அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் தெளிவாகப் பூர்த்தி செய்து, மேற்கண்ட காலத்திற்குள் தலைமைக் கழகத்தில் வழங்கலாம் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்." என்று தெரிவித்து இருந்தார்.
இதன்படி, இன்று முதல் அதிமுகவில் விருப்ப மனு தொடங்கியுள்ளது. முதல் நாள் என்பதால் இன்று மட்டும் பிற்பகல் 12 மணி முதல் விருப்ப மனு விநியோகிக்கப்பட்டு வருகிறது. மாலை 5 மணி வரை அதிமுக தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு பெற்றுக்கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications