உதயநிதியின் சனாதனம் குறித்த கருத்துக்கு அதிமுகவின் ரியாக்ஷன் என்ன? எடப்பாடியின் பதில் இதுதான்
சென்னை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் சனாதனம் குறித்த பேச்சு தேசிய அளவில் பேசு பொருளாகியிருக்கும் நிலையில் இன்று கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சனாதனம் குறித்த கேள்விக்கு ஒரே வரியில் பதில் அளித்தார். அவரது பதிலை இங்கே பார்க்கலாம்.
கோவையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தாழ்தப்பட்ட மக்களுக்கு அநீதி இழைக்கக் கூடிய கட்சிதான் திமு.க. இன்றைக்கு சனாதனம் குறித்து பேசுகிறார்கள். இதுதான் வேடிக்கையாக உள்ளது. அதிமுகவை பொறுத்தவரைக்கும் எம்.ஜி.ஆர் காலத்திலும் சரி, ஜெயலலிதா காலத்திலும் சரி அதன்பிறகு சரி.. மதத்திற்கும் சாதிக்கும் அப்பாற்பட்ட கட்சி அதிமுக.

அதிமுக சாதி மதத்திற்கு அப்பாற்பட்ட கட்சி என்று சொல்லிவிட்டேன். அதற்கு மேல் விளக்கி விளக்கி கேட்கிறீர்கள். சனாதான ஒழிப்பு என்று சொல்லி உதயநிதி ஸ்டாலின் இதை பேசுபொருளாக்கியிருக்கிறார். தமிழ்நாடு இன்று குட்டிச்சுவராகியிருக்கிறது. எல்லா துறைகளிலும் படுபாதாளத்திற்கு போய்விட்டது. எல்லா துறைகளிலும் ஊழல் மலிந்து விட்டது. சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது.
திருப்பூர் மாவட்டத்தில் 4 பேரை துடிக்க துடிக்க வெட்டிக்கொலை செய்து இருக்கிறார்கள். நேற்று மட்டும் தமிழ்நாட்டில் 9 கொலைகள் நடைபெற்று இருக்கின்றன. இப்படி தினம்தோறும் கொலைகள் நடக்காத நாட்கள் கிடையாது. செந்தில் பாலாஜி சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார். அப்படிப்பட்ட ஊழல்கள், விலை வாசி உயர்வு ஆகியவற்றை மறைப்பதற்கு இன்றைக்கு இந்த நாடகத்தை திமுக அரங்கேற்றியுள்ளது.
இதை எல்லாம் வைத்து மக்களை திசை திருப்புகிறார்கள். எப்பொழுதெல்லாம் திமுகவிற்கு பிரச்சினை வருகிறதோ அப்போதெல்லாம் எதோ ஒரு பிரச்சினையை கையில் எடுத்து மக்களை திசை திருப்புவதுதான் வாடிக்கையாக தொடர்கதையாக திமுகவிடம் உள்ளது. அதிமுகவை யாரும் குறை சொல்ல முடியாது. அந்த அளவுக்கு ஒழுங்காக நாங்கள் நடந்து கொண்டு இருக்கிறோம்" என்றார்.
அதிமுக என்பது அண்ணா திமுக அல்ல அமித்ஷா திமுக என்று உதயநிதி விமர்சித்துள்ளாரே என்று செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, ஒவ்வொன்றாக பேசி பேசி தன்னை முன்னிலைப்படுத்த எடப்பாடி பழனிசாமி பார்க்கிறார். அவர் என்ன சாதனை செய்து விட்டார் என்று அமைச்சராக்கியிருக்கிறார்கள். ஊடகங்கள்தான் அவரை முன்னிலைப்படுத்திக் கொண்டு இருக்கின்றன. கருணாநிதியின் பேரன், ஸ்டாலினின் மகன் இதுதான் உதயநிதி ஸ்டாலினுக்கு இருக்கும் தகுதி. இதை வைத்துக் கொண்டு தமிழ்நாட்டை ஆட்டிப்படைக்கலாம் என்று நினைக்கிறார்கள்.
அது ஒருபோதும் நடக்காது. வாரிசு அரசியலுக்கும் இடம் இல்லை. திமுகவில் கருணாநிதி குடும்பத்தை தவிர்த்து மற்றவர்கள் உயர்ந்த பொறுப்புக்கு வர முடியும். கட்சி தலைவராக முடியும் என்று திமுகவில் சொல்ல முடியுமா? திமுக அமைச்சர்களே உதயநிதி ஸ்டாலினுக்கு பிறகு இன்பநிதி வந்தாலும் ஏற்றுக்கொள்வோம் என்கிறார்கள். அப்படிப்பட்ட அடிமைத்தனமான அந்த கட்சி உள்ளது. சுதந்திரம் கிடையாது. ஒரு குடும்ப ஆட்சியாக உள்ளது. கட்சி கிடையாது .கார்ப்பரேட் கம்பெனி. நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications