பாஜக கூட்டணியில்தான் அதிமுக உள்ளது..லோக்சபா தேர்தலில் கூட்டணி நீடிக்கிறது..உறுதியாக சொன்ன இபிஎஸ்
சென்னை: பாஜக கூட்டணியில் தான் அதிமுக உள்ளது இதைதான் ஆரம்பத்தில் இருந்தே சொல்கிறோம் என்று அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். லோக்சபா தேர்தலுக்கும் அதிமுக - பாஜக கூட்டணி தொடரும் என்றும் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.
கடந்த சில மாதங்களாகவே அதிமுக பாஜக கூட்டணியில் சலசலப்பு நீடித்துக்கொண்டிருக்கிறது.
அதற்குக் காரணம் பாஜக நிர்வாகிகள் பலரும் அதிமுகவில் இணைந்ததுதான். பாஜக ஐடி விங் தலைவர் நிர்மல்குமார் அண்மையில் அதிமுகவில் இணைந்தார். அவருடன் ஏராளமான பாஜகவினர் அதிமுகவில் இணைந்தனர்.
அடுத்தடுத்து பல்வேறு நிர்வாகிகள் இணைந்துள்ளதால் பாஜக தலைமைக்கும் அதிமுக தலைமைக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுந்தது. இதனையடுத்து அண்ணாமலை ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு என்று கூறினார். பாஜகவினர் எடப்பாடி பழனிச்சாமியின் போட்டோக்களை எரித்தனர். அதே நேரத்தில் அண்ணாமலையின் போட்டோக்களை பாஜகவினர் எரித்தனர். மாறி மாறி அதிமுக, பாஜக தலைவர்கள் பேட்டி அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

அதிமுக பாஜக கூட்டணி
அதே நேரத்தில் அதிமுக நிர்வாகிகளும் பாஜக நிர்வாகிகளும் கூட்டணி நீடிப்பதாகவே கூறி வருகின்றனர். 2024ஆம் ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தலை அதிமுகவும் பாஜகவும் இணைந்து எதிர்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மாநிலத்தலைவர் அண்ணாமலை மிகப்பெரிய புயலை கிளப்பியுள்ளார்.

கூட்டணி வேண்டாம்
தமிழகத்தில் நாம் தனியாக இருந்தால் மட்டுமே கட்சியை வளர்க்க முடியும். அதிமுக உடன் கூட்டணி என்ற நிலைப்பாட்டை எடுத்தால், தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு சாதாரண தொண்டனாக இருப்பேன். பாஜகவை வளர்த்தெடுக்கத்தான் பாடுபட்டுக்கொண்டிருக்கிறேன். எனக்கு உரிய சுதந்திரம் அளிக்க வேண்டும் என்று கடந்த வாரம் நிர்வாகிகள் கூட்டத்தில் அண்ணாமலை பேசியதாக தகவல் வெளியானது.

ராஜினாமா செய்வேன்
நான் தேசிய மேனேஜர் அல்ல, கட்சியின் மாநில தலைவர் என்று கூறினேன். தமிழ்நாட்டில் பாஜகவை வளர்ப்பதற்குரிய வெற்றி பெற வைப்பதற்குரிய உத்திகள் என்னிடம் இருக்கின்றன. என் ஸ்டைலில் செயல்பட முடியாத போது நான் ராஜினாமா செய்து விட்டு ஒரு தொண்டனாகவே இருப்பேன் என்று கூறினார்.

அமித்ஷா உறுதி
டெல்லியில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துகொண்டார். அப்போது செய்தியாளர்கள் பாஜக கூட்டணி குறித்து கேள்வி எழுப்பினர். தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணியில்தான் இருக்கிறோம் என்று அமித்ஷா தெரிவித்தார். தமிழகத்தில் பாஜக கட்சி கட்டமைப்பு வலுவாக இல்லை. அதை மேம்படுத்த உழைத்து வருகிறோம். நாங்கள் வலு குறைவாக இருக்கும் இடங்களில் கூட்டணி கட்சிகள் கை கொடுக்கும். அந்த வகையில் அதிமுக கூட்டணியில் நீடிக்கிறோம் என்று அமித்ஷா தெரிவித்தார்.

எடப்பாடி பழனிச்சாமி
சட்டசபைக்கு வெளியே இன்று செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக ஆட்சி காலத்தில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை நிதியமைச்சர் வேண்டுமென்றே மறைப்பதாக கூறினார். சட்டசபையில் வெளியிடப்பட்ட 110 அறிவிப்புகள், நிறைவேற்றப்பட்ட திட்டங்கள், வெளியிடப்பட்ட அரசாணைகள் குறித்தும் எடப்பாடி பழனிச்சாமி கூறினார். தமிழ்நாட்டில் கஞ்சா தாராளமாக கிடைப்பதாகவும் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டினார். அம்மா உணவகத்தில் தரமற்ற உணவு தரப்படுவதாக தெரிவித்தால் ஆதாரம் கேட்கின்றனர் என்றும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

அதிமுக - பாஜக கூட்டணி
அதிமுக பாஜக கூட்டணி குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த எடப்பாடி பழனிச்சாமி, நாங்கள் ஆரம்பத்தில் இருந்தே கூட்டணி நீடிப்பதாக கூறி வருகிறோம். பாஜக கூட்டணியில்தான் அதிமுக இருக்கிறது. நடைபெற்று முடிந்த ஈரோடு சட்டசபைத்தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணியாகத்தான் போட்டியிட்டது. லோக்சபா தேர்தலின் போதும் அதிமுக பாஜக கூட்டணி தொடரும் என்றும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

சட்டம் ஒழுங்கு சீர்குலைவு
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து விட்டது. போதையின் பிடியில் இளைய சமுதாயத்தினர் சிக்கித்தவிக்கின்றனர். கொடூர கொலைகள் நடைபெறுவது வாடிக்கையாகி வருகிறது. இதை தடுத்து நிறுத்த வேண்டும். இதற்கு முழு காரணம் போதைப்பொருள்தான். தமிழ்நாடு போதையின் பாதையில் செல்கிறது இதை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications