ஓபிஎஸ் தரப்புக்கு இனி ஏதாவது வாய்ப்பு உள்ளதா? அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை சொன்ன 'அதிரடி' பதில்
சென்னை: முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வத்தை அதிமுகவில் இருந்து நீக்கியது செல்லும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், தீர்ப்பு குறித்து அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்துள்ளார். அதனை இப்போது பார்ப்போம்.
ஓபிஎஸ் உள்ளிட்டோரை நீக்கிய சிறப்பு தீர்மானத்திற்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மேல்முறையீட்டு மனுக்களையும் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள், பொது செயலாளர் தேர்தல் ஆகியவை செல்லும் என்று உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

மேலும் பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததை சுட்டிக்காட்டி ஓபிஎஸ் உள்ளிட்டோரின் மனுக்களை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை தள்ளுபடி செய்தால், கட்சியின் நடவடிக்கை பாதிக்கப்படும், என ஓபிஎஸ் தரப்பு மனுக்கள் தள்ளுபடி செய்வதாகவும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு போடப்பட்ட அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் தீர்மானங்கள் செல்லாது என ஓபிஎஸ் வகையறாக்கள் தொடர்ந்த மனுக்கள் அனைத்தும் உயர்நீதிமன்றத்தின் டிவிசன் பெஞ்சால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு பல்வேறு கட்டங்களை தாண்டி வந்தது. அதாவது முதலில் பொதுக்குழுவை கூட்டக்கூடாது என்று மனு போட்டார்கள்.அதில் தோல்வி அடைந்தார்கள். அதன்பிறகு பொதுக்குழுவே செல்லாது என உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் வரை சென்றார்கள். அங்கு அதிமுகவின் தீர்மானங்கள் செல்லும் என்று தீர்ப்பளித்தது.

இந்நிலையில் பொதுக்குழுவின் தீர்மானங்களே செல்லாது என்று ஒரு புதிய கண்டுபிடிப்பை கண்டுபிடித்து ஒரு புதிய வழக்கு ஒன்றை ஓபிஎஸ் தரப்பினர் தாக்கல் செய்திருந்தார்கள். அந்த வழக்கிலே தனிநீதிபதி மனுவை தள்ளுபடி செய்திருந்தார். அந்த தள்ளுபடி செய்யப்பட்ட மனுவை எதிர்த்து டிவிசன் பென்சில் ஓபிஎஸ் வகையறாக்கள் ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கில் விசாரணை நடைபெற்று தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இன்றைக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் டிவிசன் பென்ச் தீர்ப்பு அளித்துள்ளது.
ஓபிஎஸ் தரப்பினர் தாக்கல் செய்த அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தது. அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் எடப்பாடியார் தலைமையில் இயங்குகிறது என்பதை சென்னை உயர்நீதிமன்றத்தின் டிவிசன் பென்ச் உறுதி செய்துள்ளது. அதுமட்டுமல்ல, நான் ஏற்கனவே சொல்லிவந்தேனே.. பொதுக்குழு தான் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் உயர் அமைப்பு, அதனுடைய சட்டதிட்ட விதிகளில் பிரிவு ஐந்தின் படி, பொதுக்குழுவின் தீர்ப்பே இறுதியானது என்பதை உயர்நீதிமன்றம் ஒப்புக்கொண்டுள்ளது. அதை உறுதி செய்து உத்தரவு பிறப்பித்திருக்கிறது" இவ்வாறு கூறினார். அப்போது செய்தியாளர் ஒருவர் ஓபிஎஸ் தரப்புக்கு ஏதாவது வாய்ப்பு உள்ளதா? அது கற்பனை, கற்பனைக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது" என்றார்,












Click it and Unblock the Notifications