நான் வர்றேன் தனியாக.. கோபிக்கு கெத்தாக வந்த எடப்பாடி.. எஸ்கேப்பான செங்கோட்டையன்! பரபர பின்னணி!
சென்னை: நீலகிரிக்கு இன்று சுற்றுப்பயணம் செல்லும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு, வழியில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் சொந்த தொகுதியான கோபிசெட்டிபாளையத்தில் உற்சாக வரவேற்பளித்தனர் அதிமுகவினர். கட்சியை ஒருங்கிணைக்கும் வரை பழனிசாமியின் சுற்றுப்பயணத்தில் பங்கேற்கப் போவதில்லை எனக் கூறியிருப்பதால், இந்த வரவேற்பில் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. எடப்பாடி வருகை காரணமாக அவர் நேற்றே சென்னை சென்று விட்டதாக அவரது ஆதரவாளர்கள் கூறியுள்ளனர்.
அதிமுகவில் இருந்து நான்காவதாக ஒரு முக்கிய தலைவராக வெளியேறி இருக்கிறார் அல்லது வெளியேற்றப்பட இருக்கிறார் செங்கோட்டையன். எம்ஜிஆர் காலத்து அரசியல்வாதி, ஜெயலலிதாவுக்கு விசுவாசமானவர், கொங்கு மண்டலத்தில் செல்வாக்கு மிக்கவர் என செங்கோட்டையனின் ஆதரவு வட்டம் அதிகம்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக எம்எல்ஏக்கள் கூவத்தூரில் குடி வைக்கப்பட்ட நிலையில், அடுத்த முதலமைச்சர் ஆகும் வாய்ப்பு செங்கோட்டையனுக்குத்தான் இருந்தது. சசிகலாவும், டிடிவி தினகரனும் அதனைத்தான் விரும்பினர்.

அதிமுக அரசியல்
ஆனால் நிதி நெருக்கடி காரணமாக அந்த வாய்ப்பு எடப்பாடி பழனிசாமிக்குக் கிடைத்தது. தனக்குக் கிடைத்த வாய்ப்பைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்ட எடப்பாடி பழனிசாமி தன்னை முதல்வராக்கிய சசிகலாவைக்கூட கட்சியிலிருந்து நீக்கினார். தொடர்ந்து டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஆகியோரும் எடப்பாடியின் அதிரடி நடவடிக்கைக்கு ஆளாகினர். அந்த வரிசையில் சேர்ந்திருக்கிறார் செங்கோட்டையன். கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாகவே எடப்பாடி பழனிசாமி மீது செங்கோட்டையன் கடும் அதிருப்தியில் இருந்த நிலையில் பிரிந்து சென்றவர்கள் ஒன்று சேர வேண்டும் எனப் பேசியதால் கட்சிப் பதவி பறிக்கப்பட்டது.
எடப்பாடி பழனிசாமி
தொடர்ந்து டெல்லி பயணம் சென்ற செங்கோட்டையன் அமித்ஷாவைச் சந்தித்துப் பேசியதாகச் சொல்லப்பட்டது. இதனால் கடும் அதிருப்தி அடைந்த எடப்பாடி பழனிசாமி தனது பிரச்சாரப் பயணத்தை ரத்து செய்துவிட்டு டெல்லி கிளம்பி அமித்ஷாவைச் சந்தித்துப் பேசினார். அப்போது அதிமுகவின் அதிருப்தி தலைவர்களைச் சந்திக்க வேண்டாம் என அமித்ஷாவிடம் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டதாகச் சொல்லப்படுகிறது. தொடர்ந்து டிடிவி தினகரன், ஓபிஎஸ், சசிகலா, செங்கோட்டையன் ஆகியோரை கட்சிக்குள்ளும் கூட்டணிக்குள்ளும் கொண்டுவர முடியாது என எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக அமித்ஷாவிடம் சொன்னதாகவும் தகவல் வெளியானது.
செங்கோட்டையன்
அதற்கு அமித்ஷாவும் சம்மதம் தெரிவித்தாராம். இந்த நிலையில் நீலகிரியில் தனது அடுத்த கட்டப் பிரச்சார சுற்றுப்பயணத்தை எடப்பாடி பழனிசாமி மேற்கொள்கிறார். இதற்காக ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் வழியாக நீலகிரி செல்ல எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டு இருந்தார். செங்கோட்டையனை கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கியதாக எடப்பாடி அறிவித்த நிலையில், மாவட்ட நிர்வாகிகள் தொடங்கி கிளைக் கழக நிர்வாகிகள் வரை தங்கள் பதவியை ராஜினாமா செய்வதாக தலைமைக்கு கடிதம் அனுப்பினர்.
எடப்பாடி வரவேற்பு
இதை அடுத்து எம்எல்ஏ செல்வராஜ் மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டார். செங்கோட்டையன் ஆதரவாளர்களாக இருந்த பலரும் ஒரே நாளில் செல்வராஜ் ஆதரவாளர்களாக மாறிப் போனார்கள். இந்த நிலையில் கொங்கு மண்டலத்தில் எடப்பாடிக்கு செல்வாக்கு இருக்கிறது என்பதை நிரூபிப்பதற்காக கோபிசெட்டிபாளையம் வழியாக நீலகிரி செல்ல திட்டமிட்டு எடப்பாடி பழனிசாமி தனக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க வேண்டுமென நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டார். இதை அடுத்து மாவட்டச் செயலாளர் செல்வராஜ் தலைமையிலான அதிமுகவினர் இன்று எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அதிமுக தலைவர்
கட்சி ஒன்றுபடும் வரை எடப்பாடியிடம் பேசப்போவதில்லை என செங்கோட்டையன் கூறிய நிலையில் வரவேற்பு நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்ளவில்லை. இந்த நிலையில் இது தொடர்பாக விசாரித்த போது செங்கோட்டையன் ஈரோட்டிலேயே இல்லை என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. எடப்பாடி வரும் தகவல் ஏற்கனவே செங்கோட்டையனுக்கு தெரிந்ததுதான் என்றாலும் நிச்சயம் எடப்பாடி பழனிசாமி கோபியில் இது போன்ற ஏதாவது நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்வார் என்பது செங்கோட்டையனுக்கு நன்றாகத் தெரியும்.
அதிமுக பிளவு
ஒரே ஊரில் இருந்து கொண்டு வரவில்லை என்றால் மோதல் அதிகரிக்கும் என்பதால் நேற்று சென்னைக்குப் புறப்பட்டுச் சென்றதாகக் கூறுகின்றனர் அவரது ஆதரவாளர்கள். சென்னையில் இருக்கும் அவரது உறவினர் வீட்டில் ஒரு விசேஷத்திற்காகச் சென்றிருக்கிறார் எனக் கூறினாலும், அதுபோன்று எதுவும் இல்லை; எடப்பாடி பயணத்தைத் தவிர்ப்பதற்காகவே செங்கோட்டையன் சென்னைக்குச் சென்று இருக்கிறார் என்கின்றனர் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள்.












Click it and Unblock the Notifications