என்னங்க இது.. தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை.. சீறிய எடப்பாடி.. அதிமுக வெளிநடப்பு
திமுக ஆட்சி காலத்தில் தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுவதாக அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.
சென்னை: தமிழக சட்டசபையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை எனவும் திமுக ஆட்சிக்காலத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை எனவும் எடப்பாடி பழனிச்சாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.
தமிழகத்தில் பட்ஜெட் மீதான விவாதக்கூட்டம் மூன்றாவது நாளாக இன்று நடைபெற்றது. கேள்வி நேரத்தில் எம்எல்ஏக்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்தனர்.
இதனையடுத்து முதல்வர் மு.க ஸ்டாலின் உரையாற்றினார். அதிமுக ஆட்சி காலத்தில் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட பல திட்டங்களுக்கு அரசாணை வெளியிடவில்லை என்று கூறினார்.

சிபிசிஐடிக்கு மாற்றம்
தொடர்ந்து பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், விருதுநகரில் இளம் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்படுவதாக அறிவித்தார். 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.

அதிமுக வெளிநடப்பு
விருதுநகர் சம்பவத்தை மாடல் வழக்காக எடுத்துக் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் டிஜிபிக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் தமிழக சட்டசபையில் இருந்து எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.

எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு
வெளிநடப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, விருதுநகர் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இதுபோல எத்தனை பெண்களை அவர்கள் பாலியல் வன்கொடுமை செய்தார்கள் என்று தெரியவில்லை. முறையாக விசாரித்து குற்றம் உறுதி செய்யப்படும் போது கடுமையான தண்டனை பெற்றுத்தரவேண்டும் என்று சொன்னார்.

பெண் மருத்துவர் பலாத்காரம்
வேலூர் காட்பாடி அருகே ஆண், பெண் மருத்துவர்கள் சினிமா பார்த்து விட்டு ஆட்டோவில் வந்த போது ஆண் மருத்துவரை தாக்கி விட்டு பெண் மருத்துவரை கடத்திச் சென்று கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். குற்றம் செய்தவர்கள் மீது காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர்ந்து பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடைபெறுவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
Recommended Video

கடுமையான தண்டனை தேவை
திமுக ஆட்சிக்காலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்கதையாகியிருக்கின்றன. அதிமுக ஆட்சிகாலத்தில் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை பெற்றுத்தந்தோம். குற்றச்சம்பவங்கள் தற்போது அதிகரித்து வருகிறது. இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். ரவுடிகள் அனைவரும் வெளியே சுதந்திரமாக நடமாடி வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.












Click it and Unblock the Notifications