AIADMK: சண்டை முடிஞ்சு போச்சு! நானும் எடப்பாடி பழனிசாமியும் சேர்ந்தது ஏன்?- டிடிவி தினகரன் விளக்கம்
மதுராந்தகம்: எந்த ஒரு அழுத்தமும் இல்லாமல் மக்கள் நலனுக்கான சண்டைகளை மறந்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் கூட்டணி வைத்தோம் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விளக்கம் அளித்தார்.
மதுராந்தகத்தில் என்டிஏ கூட்டணி கட்சிகள் கலந்து கொண்ட பொதுக் கூட்டம் நடந்து வருகிறது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டுள்ளார். அது போல் கூட்டணி கட்சி தலைவர்கள் எடப்பாடி பழனிசாமி, அன்புமணி, டிடிவி தினகரன், பாரிவேந்தர், ஏசி சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் எடப்பாடி பழனிசாமியும் டிடிவி தினகரனும் கைகுலுக்கிக் கொண்டனர். டிடிவி தினகரனை துரோகி என்றும் அவரை முதல்வர் வேட்பாளராக ஏற்க முடியாது என்றும் முன்பு என்டிஏ கூட்டணியில் இருந்து வெளியேறிய டிடிவி தினகரன், தற்போது மீண்டும் இணைந்துள்ளார்.
தினகரன் மீதான வழக்குகளுக்கு அஞ்சியே ஒரு அழுத்தத்தின் பேரிலேயே அவர் என்டிஏ கூட்டணியில் இணைந்ததாக திமுகவினர் விமர்சனம் செய்து வருகிறார்கள்.
அஇஅதிமுக
இந்த நிலையில் தான் எடப்பாடி பழனிசாமியுடனான சண்டையை மறந்து அவருடன் கூட்டணியில் இணைந்தது ஏன் என்பது குறித்து தினகரன் , பொதுக் கூட்டத்தில் விளக்கினார்.
ஆரம்பத்தில் பேசிய போது மற்றவர்களை போல் எடப்பாடி பழனிசாமியை அடுத்த முதல்வர் , வருங்கால முதல்வர் என்றெல்லாம் சொல்லவில்லை. ஆயினும் எதற்காக எடப்பாடியுடன் கைகோர்த்தார் என்பதை விளக்கினார். இதிலிருந்தே எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக அவர் ஏற்றுக் கொண்டார் என்பது தெரிகிறது.
அமமுகவுக்கு அழுத்தம் இல்லை
இந்த பொதுக் கூட்டத்தில் தினகரன் பேசுகையில், எந்தவித அழுத்தமும் இன்றி அமமுக என்டிஏ கூட்டணியில் இணைந்துள்ளோம். இந்த கூட்டணியின் வெற்றிக்காக அமமுகவின் ஒவ்வொரு தொண்டனும் தமிழகம் முழுவதும் அயராது பாடுபடுவான் என்ற உறுதியை எடப்பாடி பழனிசாமிக்கும் சொல்லிக் கொள்கிறேன்.
3 முறை பிரதமர்
தொடர்ந்து 3 முறை இந்திய பிரதமராக இருந்து நாட்டை உயர்த்தியவர் பிரதமர் மோடி. தமிழகத்தில் மக்கள் விரோத ஆட்சி நடைபெற்று வருகிறது. மக்கள் விரோத ஆட்சியை அகற்றவே கூட்டணி அமைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி விரும்பினார்.
எடப்பாடி பழனிசாமியை முழு மனதோடு ஏற்கிறோம். ஜெயலலிதாவின் வழித்தோன்றல்கள் நாங்கள். ஆதரவாக இருந்தாலும், எதிராக இருந்தாலும் உறுதியுடன் இருப்போம். எங்களுக்குள்ளான சண்டை முடிவுக்கு வந்துவிட்டது. எந்தவொரு அழுத்தமும் இல்லாமல் நாங்கள் ஒன்றிணைந்திருக்கிறோம். மக்கள் விரோத திமுக குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டுவோம்.
பங்காளிகள்
ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் நாங்கள், பங்காளிகளாக இருந்தவர்கள் நாங்கள். கொலை நாடாக, கொள்ளை நாடாக தமிழ்நாடு மாறிவிட்டது. போதை மலிந்த நாடாகிவிட்டது தமிழ்நாடு. தமிழகத்தில் போதைப்பொருள் பெருகிவிட்டது என தெரிவித்தார்.
எடப்பாடி பழனிசாமி அவர்களே என மதுராந்தகம் கூட்டத்தில் டிடிவி தினகரன் அழைத்ததும் கூட்டத்தினர் ஆர்ப்பரித்தனர். அது போல் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை பார்த்ததும் தினகரன் சிரித்தார். தினகரன் பேசி முடித்ததும் அன்புமணி ராமதாஸ் பேசினார். அப்போது இன்னும் 2 மாதங்களில் முதல்வராக போகும் எடப்பாடி பழனிசாமி என பேசினார்.












Click it and Unblock the Notifications