முகத்தில் அறைந்தது போல முடிவை சொன்ன அதிமுக! 2026 சட்டசபை தேர்தலிலும் பாஜகவுடன் “நோ” கூட்டணி!
சென்னை: 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைக்காது; அதிமுக தலைமையில் தனி கூட்டணி உருவாக்கப்படும் என அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் கேபி முனுசாமி தெரிவித்தார்.
சென்னையில் நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டதில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகுவது என அதிமுக முடிவெடுத்து தீர்மானம் நிறைவேற்றியது. இதன் பின்னர் பாஜக, அதிமுக தலைவர்கள் கனத்த மவுனம் காத்தனர்.

இதனால் அதிமுக மீண்டும் பாஜக கூட்டணிக்கு போய்விடுமோ என்ற கேள்வி எழுந்தது. திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும், அதிமுக- பாஜக கூட்டணி முறிவு என்பது ஒரு அரசியல் நாடகம் என விமர்சித்து வந்தனர்.
பாஜக கூட்டணி இல்லை: இந்நிலையில் அதிமுக துணைப் பொதுச்செயலாளர் கேபி முனுசாமி செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, எந்த காரணத்தை முன்னிட்டும் பாஜகவுடன் மீண்டும் கூட்டணி அமைக்க மாட்டோம். 2 கோடி தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து எடுக்கப்பட்ட இந்த முடிவில் இருந்து பின்வாங்க மாட்டோம் என்றார்.
பிரதமர் வேட்பாளர் யார்?: இந்த செய்தியாளர் சந்திப்பில் அதிமுகவின் பிரதமர் வேட்பாளர் யார் என்கிற கேள்வி முன்வைக்கப்பட்டது. இதற்கு பதிலளித்த கேபி முனுசாமி, தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளுக்காக அதிமுக எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பார்கள். யார் பிரதமர் வேட்பாளர் என்பதை முன்னிறுத்தி ஆந்திரா அரசியல் கட்சிகள் தேர்தலில் இறங்கவில்லை. ஒடிஷாவின் நவீன் பட்நாயக், யாரையும் பிரதமர் வேட்பாளர் என அறிவிக்கவில்லை. அதேபோல அதிமுகவும் தமிழ்நாட்டு நலன்களை பெற்றுத் தருவோம் என்ற வாக்குறுதியுடன் தேர்தலை சந்திக்கும். 2014-ம் ஆண்டு காவிரி நதிநீர் பிரச்சனையில் நாடாளுமன்றத்தையே 22 நாட்களாக செயல்படவிடாமல் முடக்கியது அண்ணா திமுக எம்.பிக்கள்தான் என்றார்.
2026 தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை: மேலும், 2026 சட்டசபை தேர்தலிலும் உறுதியாக பாஜகவுடன் அதிமுக கூட்டணி இருக்காது என்பதை திட்டவட்டமாக தெரிவிக்கிறோம். 2024 லோக்சபா தேர்தல், 2026 சட்டசபை தேர்தலில் நிச்சயமாக பாஜகவுடன் கூட்டணி இருக்காது. 2 தேர்தல்களிலும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் புதிய கூட்டணி உருவாக்கப்பட்டு தேர்தலை சந்திப்போம்; தமிழக மக்கள் எங்களை ஏற்றுக் கொள்வார்கள். எங்களை வெற்றி பெறச் செய்வார்கள்.
2026-ல் எடப்பாடிதான் முதல்வர்: தமிழகத்தில் 50 ஆண்டுகாலம் கட்சி நடத்தி 30 ஆண்டுகாலம் ஆட்சியில் முதல்வர் பொறுப்பு வகித்து தமிழ்நாட்டை இந்திய துணைக் கண்டத்தில் அனைத்து துறைகளிலும் முதன்மை பெறச் செய்தது அதிமுக. அப்படியான அதிமுக தொடர்ந்து மக்களுக்கு பணியாற்றுவதற்கு 2026 தேர்தலில் வெற்றி கிடைக்கும். அப்போது எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராக பொறுப்பேற்பார் என்றும் நம்பிக்கை தெரிவித்தார் கேபி முனுசாமி.
பாஜகவை விமர்சிப்போம்: அத்துடன் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எப்படி பாஜகவுடன் இறுதிவரை கூட்டணி வைக்கமாட்டோம் என சொன்னாரோ அதேபோல அவரது தொண்டர்களாகிய நாங்கள் எடுத்த இந்த முடிவிலும் மாற்றம் இருக்காது. மத்தியில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அதிமுக தமிழக நலன் சார்ந்து செயல்படும். 8 கோடி தமிழ் மக்களின் ஜீவாதார உரிமைக்காக அதிமுக எம்.பிக்கள் குரல் கொடுப்பார்கள். மாநிலத்துக்கு தேவையான நிதி ஆதாரத்துக்காக குரல் கொடுப்பார்கள். தேர்தல் களத்திலும் விவாத களங்களிலும் 9 ஆண்டுகால பாஜக ஆட்சியின் தவறுகளை நிச்சயமாக சுட்டிக் காட்டுவோம் என்றார் கேபி முனுசாமி.












Click it and Unblock the Notifications