அதிமுக அலுவலகம் சூறை..சட்டசபையில் அனலை பற்ற வைத்த விவாதம்..நிராயுதபாணி என்ற ஓபிஎஸ்
சென்னை: ராயப்பேட்டையில் அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற மோதல் சம்பவம் தொடர்பாக சட்டசபையில் இன்று கார சார விவாதம் நடைபெற்றது. முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி இடையே காரசார வாக்குவாதம் நடைபெற்றது. அதிமுக அலுவலகம் முன்பு நாங்கள் நிராயுதபாணியாக நின்று கொண்டிருந்தோம் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சட்டசபையில் இன்றைய தினம் காவல்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது பொள்ளாச்சி ஜெயராமன், பல்வேறு விசயங்களை குறிப்பிட்டு பேசினார். தமிழ்நாட்டில் காவல்துறையினர் அடிக்கடி மாற்றப்படுவதாக தெரிவித்தார். அதிமுக அலுவலகம் ஒரு கும்பலால் தாக்கப்பட்ட போது அதனை தடுக்க காவல்துறையினர் தவறி விட்டதாகவும் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்தார். அதிமுக காலத்தில் இருந்த சட்டம் ஒழுங்கு தற்போது இல்லை எனவும் பொள்ளாச்சி ஜெயராமன் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

அதற்கு பதில் அளித்த முதல்வர் ஸ்டாலின், அதிமுக அலுவலகத்தில் நடைபெற்றது உட்கட்சி விவகாரம் என்று குறிப்பிட்டார். அதற்கு எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி எழுந்து பதில் அளித்தார். திமுக இரண்டாக உடைந்த போது அந்த கட்சி அலுவலகத்திற்கு அதிமுக அரசுதான் பாதுகாப்பு அளித்தது என்று கூறினார். எடப்பாடி பழனிச்சாமி கூறியதற்கு பதில் அளித்த முதல்வர் ஸ்டாலின் நாங்கள் அடித்துக்கொள்ளவில்லை, ரகளையில் ஈடுபடவில்லை என்று தெரிவித்தார். இதனால் சட்டசபையில் காரசாரமான விவாதம் நடைபெற்றது.
அப்போது குறுக்கிட்டு பேசிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அதிமுக அலுவலகத்தில் நடந்த சம்பவம் வேதனை அளிக்கக்கூடியது விரும்பத்தகாத சம்பவம் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். நாங்கள் நிராயுதபாணியைாக தலைமை அலுவலகம் செல்ல அமைதியாக வந்துகொண்டிருந்தோம் எனவும் ஓ.பன்னீர் செல்வம் கூறினார். வன்முறையில் ஈடுபட்டது யார் என்று காவல்துறையினர் விசாரணை நடத்தி தமிழ்நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டும் என்றும் ஓ.பன்னீர் செல்வம் கோரிக்கையை முன் வைத்தார்.

கடந்த ஜூலை 11ஆம் தேதி ராயப்பேட்டையில் அதிமுக அலுவலகம் முன்பு நடந்த கலவரத்தை யாராலும் மறக்க முடியாது. அதிமுக தொண்டர்கள் கோவிலாக கருதும் எம்ஜிஆர் மாளிகையின் பூட்டை உடைத்து அலுவலகத்திற்கு புகுந்தவர்கள் அங்கிருந்த பொருட்களை சூறையாடினர். அதிமுக அலுவலகத்திற்கு பாதுகாப்பு கொடுக்க காவல்துறையினர் தவறி விட்டதாக இன்றைக்கும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு ஆதரவாளர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications