நெய்வேலி தொகுதி.. காய் நகர்த்தும் பாமக நிர்வாகிகள்.. அதிமுகவுக்கு அழுத்தம் கொடுக்கும் அன்புமணி!
சென்னை: சட்டசபைத் தேர்தலில் நெய்வேலி தொகுதியை மையமாக வைத்து பாமக மற்றும் அதிமுகவினர் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். பாமகவில் ராமதாஸ் தரப்பும், அன்புமணி தரப்பும் தனியாக வேட்பாளரை களமிறக்கவும் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. அதேபோல் அதிமுகவும் நெய்வேலி தொகுதியை விட்டுக் கொடுக்கும் எண்ணத்தில் இல்லை.
சட்டசபைத் தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில், அரசியல் கட்சியினர் தங்களின் தொகுதிகளில் தீவிரமாக பணியாற்ற தொடங்கியுள்ளனர். இந்த முறை திமுக கூட்டணியில் நெய்வேலி தொகுதியை குறி வைத்து தமிழக வாழ்வுரிமை கட்சி பணியாற்றிக் கொண்டிருக்கிறது. 2021 சட்டசபைத் தேர்தலில் பண்ருட்டி தொகுதியில் போட்டியிட்டு தவாக வேல்முருகன் வெற்றி பெற்றார்.

இவர் 2 மாதங்களுக்கு முன்னதாகவே பண்ருட்டி தொகுதியில் மீண்டும் போட்டியிட மாட்டேன் என்று கூறிவிட்டார். அதுமட்டுமல்லாமல் தனது சகோதரர் மூலமாக நெய்வேலி தொகுதிகளில் தேர்தல் பணிகளையும் மேற்கொண்டு வருகிறார். இருப்பினும் திமுக தலைமை நெய்வேலி தொகுதியை விட்டுக் கொடுக்குமா என்ற சந்தேகம் இருக்கிறது. ஏனென்றால் நெய்வேலியில் திமுக கட்டமைப்பு ரீதியாக வலுவாக உள்ளது.
திமுக சார்பாக கடந்த முறை போட்டியிட்ட சபா.ராஜேந்திரன் மிகப்பெரிய வெற்றியை பெற்றார். இதனால் மீண்டும் நெய்வேலி தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று தீவிரமாக இருக்கிறார். அதேபோல் அதிமுக சார்பாக சொரத்தூர் ராஜேந்திரன் நெய்வேலி தொகுதியில் போட்டியிடலாம் என்று அக்கட்சியினர் மத்தியில் பேச்சுகள் கிளம்பி இருக்கிறது.
ஆனால் அன்புமணி தரப்பு பாமகவோ தங்களுக்கு நெய்வேலி தொகுதி அளிக்கப்பட வேண்டும் என்று அழுத்தம் கொடுக்க தொடங்கியுள்ளனர். ராமதாஸ் தரப்பு நெய்வேலி தொகுதியில் மிகப்பெரிய கண் வைத்திருக்கிறது. ராமதாஸ் ஆதரவாளரான ஜெகன் தான் கடந்த முறை இந்த தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இதனால் இம்முறை களமிறங்க வேண்டும் என்று காய் நகர்த்தி வருகிறார்.
அன்புமணி அணியில் பெரிய வேட்பாளர் இல்லையென்றாலும், எம்பி தேர்தலின் போது போட்டியிட்ட தங்கர் பச்சானை மீண்டும் களமிறக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. இவர் மட்டுமல்லாமல் பாமக முன்னாள் எம்எல்ஏ கோவிந்தசாமியும், பாமக வடக்கு மாவட்டச் செயலாளர் ரவிச்சந்திரன் ஆகியோரும் பரிந்துரை பட்டியலில் உள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications