எடப்பாடிக்கு அடுத்த ஆப்பு ரெடி.. கையில் டாகுமெண்டோடு வேலுமணி & கோ! அதிமுகவில் அடுத்த பஞ்சாயத்து ரெடி
சென்னை: அதிமுகவின் பொதுக்குழுவைக் கூட்டி எடப்பாடி பழனிச்சாமியின் பதவியை காலி செய்ய தயாராகி வருகிறது வேலுமணி அணி. ஐந்தில் ஒரு பங்கு ஆதரவு இருப்பதால் பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என எடப்பாடியை சந்தித்து கோரிக்கை விடுக்க இருப்பதாகவும், அவர் மறுத்தால் நீதிமன்றத்தை நாட முடிவு செய்திருக்கின்றனர்.
இந்த நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. இதனால் அதிமுகவில் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு தமிழக அரசியலில் எழுந்துள்ளது.
தமிழக அரசியலில் நீண்ட காலம் ஆளும் கட்சியாகவும், எதிர்க்கட்சியாகவும் இருந்த அதிமுக, சமீபத்திய சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு கடுமையான பின்னடைவை சந்தித்துள்ளது. தேர்தலில் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்ட அதிமுகவில், தற்போது தலைமைக்கு எதிரான அதிருப்தி வெளிப்படையாக வெடித்துள்ளது.

எடப்பாடி பழனிசாமி
குறிப்பாக, தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் நடந்த சம்பவம் அதிமுகவின் உட்கட்சிப் பிளவை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது. எடப்பாடி பழனிசாமியின் உத்தரவை மீறி, எஸ்.பி.வேலுமணி ஆதரவு எம்.எல்.ஏக்கள் 25 பேர் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
அதிமுக உட்கட்சி மோதல்
இதற்குப் பிறகு இரு தரப்பும் தனித்தனியாக சட்டப்பேரவைத் தலைவரை சந்தித்து கடிதம் கொடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியது. வேலுமணி தரப்பு, தங்களையே உண்மையான சட்டப்பேரவை குழுவாக அங்கீகரிக்க வேண்டும் என்று கோரியது. எடப்பாடி தரப்பு, கொறடா உத்தரவை மீறிய உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியது. இந்த மோதல் தீவிரமடைந்த நிலையில், எஸ்.பி.வேலுமணி ஆதரவாளர்களாக இருந்த 26 மாவட்டச் செயலாளர்களை எடப்பாடி பழனிசாமி அதிரடியாக நீக்கினார்.
எடப்பாடி பழனிச்சாமி
அதோடு அந்த இடங்களுக்கு புதிய மாவட்டச் செயலாளர்களையும் நியமித்தார். இந்த நடவடிக்கை, கட்சிக்குள் பிளவு இன்னும் தீவிரமடைய காரணமாகியுள்ளது. இந்நிலையில், அடுத்த கட்டமாக அதிமுக பொதுக்குழுவை கூட்டும் முயற்சியில் எஸ்.பி.வேலுமணி தரப்பு இறங்கியுள்ளது. பொதுக்குழுவை கூட்டி தலைமை மாற்றம் தொடர்பான தீர்மானத்தை கொண்டு வர அவர்கள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எஸ் பி வேலுமணி
அதிமுக கட்சி விதிகளின்படி, பொதுக்குழு உறுப்பினர்களில் ஐந்தில் ஒரு பங்கு உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தால் பொதுக்குழுவை கூட்ட முடியும். தற்போது அந்த எண்ணிக்கையை தாங்கள் கடந்துவிட்டதாகவே எஸ்.பி.வேலுமணி தரப்பு கூறுகிறது. பொதுக்குழு உறுப்பினர்களில் கணிசமானோர் ஏற்கனவே கையொப்பமிட்டு வேலுமணி ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
பொதுக்குழு
தேவையான ஆவணங்கள் அனைத்தும் தயாராக உள்ளதாகவும், விரைவில் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து பொதுக்குழுவை உடனடியாக கூட்ட வேண்டும் என்று கோரிக்கை மனு அளிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், பொதுக்குழுவை கூட்ட மறுத்தால் நீதிமன்றத்தை அணுகும் வாய்ப்பும் இருப்பதாக வேலுமணி தரப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் அதிமுகவின் உள்கட்சி மோதல் நீதிமன்றம் வரை செல்லக்கூடிய சூழல் உருவாகியுள்ளது.
மாவட்டச் செயலாளர்கள்
மற்றொரு பக்கம், எடப்பாடி பழனிசாமியும் தனது ஆதரவு மாவட்டச் செயலாளர்கள் மற்றும் எம்.எல்.ஏக்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல் எஸ்.பி.வேலுமணி தரப்பும் தனியாக ஆலோசனை கூட்டத்தை நடத்தவுள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டங்களின் முடிவுகள் அதிமுகவின் தலையெழுத்தை தீர்மானிக்கும் என பார்க்கப்படுகிறது.
தமிழக அரசியல்
பொதுக்குழு கூட்டம் நடத்தப்படுமா, வேலுமணியின் முயற்சி வெற்றி பெறுமா, அல்லது கட்சி மீண்டும் இரண்டாக பிளவுபடுமா என்ற கேள்விகள் தற்போது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. ஒருகாலத்தில் தமிழக அரசியலையே தீர்மானித்த கட்சியாக இருந்த அதிமுக, இன்று தலைமைப் போட்டி மற்றும் உட்கட்சி மோதலால் சிக்கித் தவிக்கும் நிலையில், உண்மையான அடிமட்ட தொண்டர்கள் நிலை தான் பரிதாபகரமாக உள்ளது.












Click it and Unblock the Notifications