உரிமைத்தொகை vs கருணைத்தொகை.. பெயர் வைப்பதிலேயே சொதப்பும் அதிமுக.. கொஞ்சம் யோசிங்க பாஸ்!
சென்னை: அதிமுகவின் தேர்தல் அறிக்கை இன்று வெளியானது. ஆனால் இந்த அறிவிப்புகளை எடப்பாடி பழனிசாமி வைத்திருக்கும் பெயர் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
திமுகவின் திட்டங்கள் பொதுவாக உரிமைத்தொகை, விடியல் பயணம், விலையில்லா திட்டங்கள் என்றே அழைக்கப்படுகிறது. அதாவது எதையும் இலவசம் என்று சொல்லாமல்.. விடியல் அல்லது உரிமை என்றே அழைக்கின்றனர். இலவசத்தை கூட அது உங்கள் பணம்.. அதனால் உங்கள் உரிமை என்றே அழைக்கின்றனர். அதேபோல் மாணவியருக்கு வழங்கப்படும் திட்டத்தை கூட புதுமைப்பெண் திட்டம் என்றே அழைக்கின்றனர். எங்கும் இலவசம் என்பதை "குத்திக்காட்டுவது" போல பெயரிடவில்லை.

ஆனால் அதிமுக இதே திட்டங்களுக்கு கொஞ்சம் வேறு மாதிரியான பெயர்களை வைத்துள்ளது. உதாரணமாக 'குலவிளக்கு திட்டம்' எனப் பெயரிடப்பட்ட இந்தத் திட்டத்தின் கீழ், அனைத்து ரேஷன் அட்டைதாரர் குடும்பங்களுக்கும் மாதந்தோறும் ரூ.2,000 வழங்கப்படும் என்று அறிவித்துள்ளனர். அதாவது மகளிர் உரிமை தொகை என்பதை 'குலவிளக்கு திட்டம்' என்று அதிமுக அழைக்கிறது.
அதேபோல் கருணைத்தொகை என்ற ரூ.10000 வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளனர். கருணையாக அரசு உங்களுக்கு பணம் கொடுக்கிறது என்பது போல திட்டம் அறிவித்துள்ளனர். உரிமை என்பதை போல இல்லாமல் கருணை என்று அதிமுக பெயர் சூட்டி உள்ளது.. சுயமரியாதைக்கு எதிரான பெயராக பார்க்கப்படுகிறது.
அதிமுக வாக்குறுதி
அதிமுகவின் மூன்றாம் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை இன்று பொதுச்செயலாளர் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.
அதில், கூட்டுறவு வங்கியில் வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்படும் . வேலை வாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு மாதம் தோறும் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தனது முதல் கட்ட வாக்குறுதிகளை கடந்த சில வாரங்களுக்கு முன்பே வெளியிட்டது. அதில்,
1. 'குலவிளக்கு திட்டம்' எனப் பெயரிடப்பட்ட இந்தத் திட்டத்தின் கீழ், அனைத்து ரேஷன் அட்டைதாரர் குடும்பங்களுக்கும் மாதந்தோறும் ரூ.2,000 வழங்கப்படும் இந்த உதவித்தொகை குடும்பத் தலைவிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும்.
2. நகரப் பேருந்துகளில் ஆண், பெண் இருபாலருக்கும் இலவசப் பயணம்
3. கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தின் பணி நாட்களை 125லிருந்து 150 ஆக உயர்த்தப்படும்.
4. வீடற்றவர்களுக்கு நகர்ப்புறங்களில் குடியிருப்புகள் வழங்குதல், திருமணத்திற்குப் பிறகு மகன்கள் தனிக்குடித்தனம் அமைக்கும் தாழ்த்தப்பட்ட சமுதாயக் குடும்பங்களுக்குத் தனி வீடுகள் கட்டுதலுக்கு நிதி உதவி செய்யப்படும்.
5. 5 லட்சம் பெண்களுக்கு இருசக்கர வாகனங்கள் வாங்க ரூ.25,000 மானியம் வழங்கப்படும் என்று அறிவித்தது.
மூன்றாம் கட்ட அறிவிப்புகள்
இந்த நிலையில் இன்று மூன்றாம் கட்ட அறிவிப்புகள் வெளியானது, அதிமுக வெளியிட்ட அறிக்கையில்,
1. ஸ்டாலின் தலைமையிலான நிர்வாகத் திறனற்ற விடியா திமுக ஆட்சியில், கடந்த 5 ஆண்டுகளில் அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி விஷம்போல் ஏறி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், சொத்து வரி, வீட்டு வரி, மின்சார கட்டணம், குடிநீர் வரி போன்ற பல வரிகளும் உயர்த்தப்பட்டுவிட்டது. இதனால், மக்களின் அன்றாட குடும்பச் சுமை பன்மடங்கு அதிகரித்துவிட்டது. எனவே, மக்களின் சுமையை குறைக்கும் வகையில், ஒவ்வொரு குடும்பத்திற்கும் கருணைத் தொகையாக 10,000/- ரூபாய் வழங்கப்படும்.
2. வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து, வேலைக்காக காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு மாதந்தோறும் 2,000/- ரூபாயும்; +2 வரை படித்து வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளவர்களுக்கு மாதந்தோறும் 1,000/- ரூபாயும், உதவித் தொகையாக வழங்கப்படும்.
3. மீன்பிடி தடைக் காலங்களில் மீனவர்களுக்கு, தற்போது வழங்கப்பட்டு வரும் நிவாரணத் தொகை 8,000/- ரூபாயில் இருந்து 12,000/- ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
4. ஒவ்வொரு ஆண்டும் தைப்பொங்கல் அன்று வழங்கப்பட்டு வரும் பொங்கல் தொகுப்புடன் சேர்த்து 1,000/- ரூபாய் வழங்கப்படும்.
5. கைத்தறி நெசவாளர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரம் 300 யூனிட்டில் இருந்து 450 யூனிட்டாகவும்; விசைத்தறி நெசவாளர்களுக்கு 1,000 யூனிட்டில் இருந்து 1,400 யூனிட்டாகவும் உயர்த்தி வழங்கப்படும்.
6. நகரப் பகுதிகளில் நடைபாதை ஓரமாக கடை வைத்திருக்கும் சிறு வியாபாரிகள், கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்படும், என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications