வழக்கு விசாரணைக்கு முன்னாடியே.. F4 கார் பந்தயம் முடிஞ்சிடுமே! அவசரமாக உச்சநீதிமன்றத்தை நாடிய அதிமுக
சென்னை: சென்னையில் F4 கார் பந்தயம் நடப்பது குறித்து அறிவிப்பு வெளியானதிலிருந்து பல்வேறு விமர்சனங்களை அதிமுக அடுக்கி வருகிறது. இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பாக நிலுவையில் இருக்கும் வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் அதிமுக முறையீடு செய்திருக்கிறது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தனியார் அமைப்புடன் 3 ஆண்டுகளுக்கு சென்னையில் பார்முலா 4 கார் பந்தயம் நடத்துவதற்காக கடந்த ஆண்டு ஒப்பந்தம் மேற்கொண்டது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் டி நகர் சாலைகளில் நடைபெற இருந்தது. இந்த நிலையில் மிக்ஜாம் புயலின் காரணமாக அந்த போட்டியை நடத்த முடியாமல் போனது. இதனையடுத்து 2024 ஆகஸ்டில் இந்த போட்டி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து எதிர்க்கட்சிகள் கார் பந்தயத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. குறிப்பாக அதிமுக சார்பில் தொடர் கண்டனம் எழுந்திருந்தது. இச்சூழலில் ஃபார்முலா கார் பந்தயம் நடத்த ஸ்பான்சர்ஷிப் வேண்டி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை கூடுதல் தலைமைச்செயலாளர் தமிழகத்தில் உள்ள கார் நிறுவனங்களுக்கு நேர்முக கடிதம் எழுதியிருந்தார். இதனை அதிமுக கடுமையாக விமர்சித்திருந்தது.
"இரண்டாண்டுகளுக்கு சென்னையில் ஃபார்முலா கார் பந்தயத்தை நடத்த மாட்டோம் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் உறுதிப் பத்திரம் எழுதித் தந்துவிட்டு, கடந்த வாரம் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை கூடுதல் தலைமைச்செயலாளர் தமிழகத்தில் உள்ள கார் நிறுவனங்களுக்கு ஃபார்முலா கார் பந்தயத்தை சென்னை மாநகரில் நடத்துவதற்காக 'ஸ்பான்சர்ஷிப்' வேண்டி நேர்முகக் கடிதம் எழுதியுள்ளார்.
மேலும், விளையாட்டுத்துறை அனைத்து தொழிற்சாலைகளுக்கும், கார் பந்தயம் நடத்துவதற்குத் தேவையான நிதியினை பந்தய சாலை அபிவிருத்திக்காகவோ, உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காகவோ, குறிப்பிட்ட நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான விளம்பரம் மூலமாகவோ ஸ்பான்சர் வழங்க கேட்டுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. திமுக அரசின் இந்த நிர்பந்தத்தால் பல்வேறு தொழில் அமைப்புகள் கொதிப்படைந்துள்ளன.
ஏற்கனவே தமிழகத்தில் திமுக ஆட்சிப்பொறுப்பேற்றவுடன் மூன்று முறை உயர்த்தப்பட்ட மின் கட்டண அதிகரிப்பால் சிறு, குறு தொழிற்சாலைகள், பஞ்சாலைகள், நூற்பாலைகள் உள்ளிட்ட பிற தொழில்கள் கடுமையாக பாதிப்படைந்து தொழிற்துறை முடங்கியுள்ள நிலையில், திமுக அரசு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி பார்முலா கார் பந்தயத்தை நடத்திட ஸ்பான்சர்ஷிப் வழங்க வலியுறுத்துவது கண்டிக்கத்தக்கது" என்று கூறியிருந்தார்.
இதற்கு முன்னதாக பார்முலா கார் பந்தயத்தை இருங்காட்டு கோட்டையில் நடத்த வேண்டும் என தலைமை செயலரிடம் அதிமுக வழக்கறிஞர் பிரிவு மனு அளித்திருந்தது. இப்படி இருக்கையில், கார் பந்தயம் குறித்த வழக்கை விரைந்து நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தை அதிமுக நாடியுள்ளது.
அதாவது கார் பந்தயம் குறித்து அதிமுக உச்சநீதிமன்றத்தை ஏற்கெனவே நாடியிருந்தது. இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம், தமிழக அரசின் பதிலை கேட்டு, அடுத்த கட்ட விசாரணைக்காக செப்.2ம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்திருந்தது. ஆனால் அதற்கு முன்னதாகவே பந்தயம் நடந்து முடிந்துவிடும் என்பதால், இந்த வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற பதிவாளருக்கு அதிமுக கடிதம் எழுதியிருக்கிறது.












Click it and Unblock the Notifications