செங்கோட்டையை நோக்கி செங்கோட்டையன்! பாஜகவுக்கு ரூட் போட்ட பன்னீர்செல்வம்! ஜெயபிரதீப் சொன்னதை பாருங்க!
சென்னை: அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கு அடுத்த நெருக்கடியாக செங்கோட்டையன் உருவாகி இருக்கிறார். பாஜக ஆதரவு யூட்யூப் சேனல் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் அவர் கலந்து கொண்டு பேசியது விரைவில் அவர் பாஜகவில் இணைவதற்கான முன்னோட்டம் தான் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். இந்த நிலையில் அதிமுகவின் உண்மை தொண்டரான செங்கோட்டையனின் மனசாட்சி உணர்வுகள் வெளிப்பட தொடங்கியுள்ளது என கூறி இருக்கிறார் ஓ.பன்னீர் செல்வத்தின் மகனான ஜெயபிரதீப்.
அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி மீது கடும் அதிருப்தியில் இருக்கும் முன்னாள் அமைச்சரும் எம்ஜிஆர் காலத்தில் இருந்தே அரசியல் செய்து வருபவருமான செங்கோட்டையன் விரைவில் கட்சியில் இருந்து விலகலாம் அல்லது புது அணியாக உருவாக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நடந்த பாராட்டு விழாவில் இருந்து செங்கோட்டையனின் பேச்சும் செயல்பாடுகளும் அவருக்கு எதிராக இருக்கிறது. இந்த நிலையில் தமிழக சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்துடன் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் முதல் நாள் 2025-2026 ஆம் நிதி ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.
அதற்கு பிறகு இரண்டாவது நாளாக வேளாண் பட்ஜெட்டை தமிழ்நாடு வேளாண்மை துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில் இரு பட்ஜெட் தாக்கலுக்கு முன்னதாக சட்டமன்றத்தில் அதிமுக எம்எல்ஏ கூட்டம் நடைபெற்றது. அதில் முதல் நாளிலும் இரண்டாவது நாளிலும் எதிர்க்கட்சித் தலைவர் அறையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்ற நிலையில் எடப்பாடி பழனிச்சாமியை சந்திப்பதை செங்கோட்டையன் தவிர்த்தார். தொடர்ந்து இரண்டாவது நாளாக அதிமுக எம்எல்ஏக்கள் அறைக்குச் செல்லாத செங்கோட்டையன் சபாநாயகரை அறைக்குச் சென்று அங்கிருந்து வருகை பதிவேட்டில் கையெழுத்து போட்டு விட்டு சட்டசபை நிகழ்வுகளில் பங்கேற்றனர்.
இரண்டு நாட்களாக எடப்பாடி பழனிச்சாமியை செங்கோட்டையன் புறக்கணித்தது பரபரப்பான அரசியல் நிகழ்வாக மாறிய நிலையில் இது தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி இடம் கேட்டபோது என்னை ஏன் சந்திக்கவில்லை என்பதை செங்கோட்டையனிடம் கேளுங்கள் என பதில் அளித்தார். அதே நேரத்தில் பழனிச்சாமி குறித்த கேள்விக்கும் செங்கோட்டையன் பதில் அளிக்கவில்லை. இந்த நிலையில் சென்னையில் பிரபல யூட்யூப் சேனல் ஒன்று நடத்திய நிகழ்ச்சியில் செங்கோட்டையன் கலந்து கொண்டு பேசினார்.
" என்னை அடுத்ததாக என்ன செய்யப் போகிறார்கள் என கேட்கிறார்கள். நான் ஒன்றும் செய்யப் போவதில்லை. எந்த பாதை சரியாக இருக்கிறதோ அந்த பாதையில் நான் சென்று கொண்டிருக்கிறேன். என் லட்சியம் தீர்மானது. என் பாதை தெளிவானது" எனக் கூறி இருந்தார். இந்நிலையில் செங்கோட்டையை நோக்கி செங்கோட்டையனின் பயணம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இரண்டாவது நாளாக சட்டசபை நிகழ்வில் பங்கேற்ற செங்கோட்டையன் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து பேசினார். அன்று இரவு தான் பாஜக ஆதரவு யூட்யூப் சேனல் நடத்திய நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டு பேசியது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் மூலம் டெல்லிக்கு செங்கோட்டையன் தூது விட்டிருப்பதாக கூறப்படுகிறது .இந்நிலையில் தான் செங்கோட்டையனை பாராட்டி எக்ஸ் பதிவு போட்டு இருக்கிறார் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனான ஜெயப்பிரதீப். " கொங்கு நாட்டு தங்கம், எனது அரசியல் குருமார்களில் ஒருவர், கழகத்தின் உண்மை தொண்டன் அண்ணன் செங்கோட்டையன் அவர்களின் மனசாட்சியின் உணர்வுகள் வெளிப்பட தொடங்கியுள்ளது" என பதிவிட்டுள்ளார்.
இதன் மூலம் அதிமுகவின் அடுத்த பிளவு செங்கோட்டையன் மூலம் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் செங்கோட்டையன், ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் ஒன்றிணைந்து எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக நிலைப்பாடு எடுக்கலாம் எனவும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications
