அதிமுக+ தவெக = வெற்றி? எடப்பாடி பழனிசாமியை போல் பிள்ளையார் சுழி போட்ட ராஜ சத்யன்- ஆதவ் அர்ஜுனா
சென்னை: அதிமுக நிர்வாகி கோவை ராஜ்சத்யனும் தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனாவும் இணைந்து தமிழக ஒலிம்பிக் சங்க தேர்தலில் வெற்றி பெற்றது பேசு பொருளாகியுள்ளது. அதிமுக- தவெக கூட்டணி அமைத்தால் திமுகவுக்கு தோல்வி நிச்சயம் என கருத்துக் கணிப்புகள் வந்த நிலையில் இவர்களது வெற்றி விவாதத்தை கிளப்பியுள்ளன.
தி பிரிண்ட் எனும் ஆங்கில செய்தி நிறுவனம்தான் இந்த சர்வேயை எடுத்துள்ளது. ஒரு தொகுதிக்கு 1245 பேர் வீதம் 2.91 லட்சம் பேரிடம் இந்த கணிப்பு நடத்தப்பட்டது. அப்போது அவர்களிடம் என்டிஏ கூட்டணியில் தவெக இணைவது குறித்தும், அவ்வாறு இணையாமல் தனித்து போட்டியிடுவது குறித்தும் கேட்கப்பட்டது.

தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக, அதிமுக ஆகிய முக்கிய கட்சிகள் இணைந்துள்ளன. இந்த சூழலில் தவெகவும் இணைந்தால் என்னவாகும் என சர்வே நடத்தப்பட்டது. ஒரு வேளை என்டிஏ கூட்டணியில் தவெக இணைந்தால், திமுகவுக்கு 50 சதவீத வாக்குகளும் என்டிஏ கூட்டணிக்கு 35 சதவீத வாக்குகளும் சீமானுக்கு 12 சதவீத வாக்குகளும் கிடைக்கும் என கணிக்கப்பட்டது.
அதாவது அதிமுக + பாஜக + தவெக ஏற்பட்டால் திமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாகவே கருதப்படுகிறது. ஒரு வேளை தவெக, என்டிஏ கூட்டணிக்கு செல்லாமல் தனித்து போட்டியிடுவதாக அறிவித்தால் அதிமுக+ பாஜக கூட்டணிக்கு 22 சதவீத வாக்குகளும் விஜய் கட்சிக்கு 23 சதவீத வாக்குகளும் நாம் தமிழர் கட்சிக்கு 5 சதவீத வாக்குகளும் கிடைக்கும் என கணிப்புகளில் வெளியாகியிருந்தது.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் நடந்த போது விஜயை பல்வேறு கட்சிகள் விமர்சித்து வந்த நிலையில் முதல் ஆளாக விஜய்க்கு ஆதரவாக பேசியவர் எடப்பாடி பழனிசாமி. விஜய் தனது அறிக்கையில் கூட தனக்கு ஆதரவாக பேசிய அரசியல் கட்சிகளுக்கு நன்றி தெரிவித்திருந்தார்.
இந்த கரூர் சம்பவத்தின் போதே இந்த பிரச்சனையிலிருந்து தவெகவை விடுவிக்க விஜய்யுடன் பாஜக கூட்டணி டீல் பேசி வந்ததாக சொல்லப்பட்டது. அது போல் தமிழகத்தில் தேஜகூட்டணியின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமியுடன் விஜய்யுடன் பேசி வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. ஆனால் இதை எடப்பாடி மறுத்திருந்தார்.
கடந்த வாரம் நாமக்கல் மாவட்டம் குமாரப்பாளையம் பிரச்சார கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, புதிய கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போட்டாச்சு ஸ்டாலின் அவர்களே என தெரிவித்திருந்தார். அப்போது அந்த கூட்டத்தில் தவெக கட்சி கொடி பறந்தது.
ஆனால் தங்கள் கட்சியினர் யாரும் அதிமுக கூட்டத்திற்கு போகவில்லை என தவெக நிர்வாகிகள் மறுத்தனர். இந்த நிலையில் அந்த நபர் அணிந்திருந்த சட்டையில் அதிமுக கொடி இருந்ததாக சொல்லப்பட்டது.
இதை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மறுத்திருந்தார். "அதிமுககாரன் எங்கள் கட்சிக் கொடியையே தூக்க மாட்டான், இதில் எங்கிருந்து தவெக கொடியை தூக்க போகிறான்" என கேள்வி எழுப்பியிருந்தார். இப்படி அதிமுக- தவெக கூட்டணி பேச்சுவார்த்தைகள் இருந்தன.
இந்த நிலையில் அதிமுகவை சேர்ந்த ராஜ் சத்யன், தவெகவை சேர்ந்த ஆதவ் அர்ஜுனா ஆகியோர் இணைந்து தமிழக ஒலிம்பிக் சங்க தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர். 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த தேர்தலில் பொதுச் செயலாளராக ஆதவ் அர்ஜுனாவும் துணைத் தலைவராக ராஜ சத்யனும் வெற்றி பெற்றுள்ளனர்.
அதிமுக- தவெக இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடப்பதாக சொல்லப்படும் நிலையில் இருவரும் ஒரே அணியில் இணைந்தது புதிய ட்விஸ்ட்டாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications