கே.பி. முனுசாமி இல்லையா?.. அதிமுகவின் பொருளாளராகிறாரா எஸ்.பி.வேலுமணி? இபிஎஸ்ஸின் புது வியூகம்
சென்னை: அதிமுகவின் பொருளாளராக எஸ் பி வேலுமணியை கொண்டு வர முயற்சிகள் நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது.
அதிமுகவின் பொருளாளராக உள்ளவர் ஓ பன்னீர் செல்வம். இவர் சட்டசபை எதிர்க்கட்சித் துணைத் தலைவராகவும் இருந்து வருகிறார். இவர் அண்மையில் சட்டசபையில் திமுகவை பாராட்டி பேசியிருந்தார். பொதுவாக முன்னாள் முதல்வர்கள், உறுப்பினர்களை பாராட்டி பேசுவது இயல்பு என்றாலும் ஓபிஎஸ் மிகவும் பாராட்டி திமுகவை குளிர்வித்துவிட்டதாகவே அதிமுக நிர்வாகிகள் கூறுகிறார்கள்.
அதாவது கருணாநிதி எழுதிய பராசக்தி வசனத்தை எனது தந்தையார் படிக்க சொன்னார், நான் அதை என் தலைமாட்டில் வைத்து மனப்பாடம் செய்து ஒப்புவித்தேன் என ஓபிஎஸ் கூறியிருந்தார். இதைத்தான் யார் மனதை குளிர்விப்பதற்காக ஓபிஎஸ் இவ்வாறு பேசினார் என முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் கேள்வி எழுப்பியிருந்தார்.

அதிமுகவின் பிரதான எதிரி
அது போல் அதிமுகவின் பிரதான எதிரியான திமுகவை எதற்காக போற்றி புகழ வேண்டும் என்ற கேள்வியையும் அவர் முன் வைத்திருந்தார். மேலும் அண்மையில் முதல்வர் ஸ்டாலினை தேனி எம்பியும் ஓபிஎஸ் மகனுமான ரவீந்திரநாத் நேரில் சந்தித்தார். பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழக ஆட்சி நன்றாக நடப்பதாக தெரிவித்தார்.

கடுங்கோபம்
இது அதிமுகவினருக்கு கடுங்கோபத்தை ஏற்படுத்தியிருந்தது. இதோடு ஓபிஎஸ் தினகரனுடன் மறைமுகமாக சந்தித்து பேசி வருவது, சசிகலா ஆதரவு நிலைப்பாடு உள்ளிட்டவைகளால் ஓபிஎஸ்ஸுக்கு எதிராக இன்று கட்சி நிர்வாகிகள் திரும்பியுள்ளார்கள். எனவே அதிமுகவில் இரட்டை தலைமை இருக்கக் கூடாது.

ஒற்றைத் தலைமை
ஒற்றைத் தலைமைதான் வேண்டும். அதுவும் எடப்பாடி பழனிச்சாமிதான் என்கிறார்கள். ஓபிஎஸ்ஸை அதிமுக பொதுச் செயலாளராக்கினால் கட்சியை திமுகவிடம் அடகு வைத்துவிடுவார் என்கிறார்கள். இதனால் அவர் பொதுச் செயலாளர் பதவியை எடப்பாடி பழனிச்சாமிக்கு விட்டுத் தர கட்சியினர் வலியுறுத்தி வருகிறார்கள்.

எடப்பாடி பழனிச்சாமி
எடப்பாடி பழனிச்சாமிக்கே ஏராளமான தொண்டர்கள் ஆதரவு இருக்கிறது என்பதை தெரிந்த போதிலும் ஓபிஎஸ் ஒற்றைத் தலைமையை விட்டுக் கொடுக்க தயாராக இல்லை, இந்த நிலையில் அதிமுக பொதுக் குழுவிலிருந்து பாதியில் வெளியேறியது. நேராக டெல்லி சென்றது. தேனியில் பாஜக நிர்வாகிகள் காவித் துண்டு அணிவித்தது- இவற்றையெல்லாம் பார்த்த அதிமுக நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம்
இதனால் நேற்றைய தினம் அவசர அவசரமாக தலைமைக் கழக நிர்வாக குழு உறுப்பினர்கள் கூட்டம் அதிமுக தலைமை அலுவலகத்தில் தொடங்கியது. இந்த கூட்டத்தில் அதிமுகவின் பொருளாளராக உள்ள ஓபிஎஸ்ஸை நீக்க மூத்த நிர்வாகிகள் வலியுறுத்தியதாக தெரிகிறது. அவ்வாறு நீக்கினால் அடுத்த பொருளாளர் பதவிக்கு இப்போதே போட்டா போட்டி ஏற்படுகிறது.

கே பி முனுசாமி
மேலும் அதிமுகவின் பொருளாளர் பதவியை கே பி முனுசாமிக்கு தருவதா, இல்லை திண்டுக்கல் சீனிவாசனுக்கு தருவதா இல்லை ஜெயக்குமாரா என பேச்சுகள் எழுந்தன. இந்த பதவிக்கு எஸ் பி வேலுமணியும் போட்டி போடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த சட்டசபைத் தேர்தலில் கரூர் செந்தில் பாலாஜியை திமுக களமிறக்கிய நிலையிலும் கொங்கு மண்டலத்தில் திமுக கால் பதிக்காமல் பார்த்து கொண்டதில் எஸ் பி வேலுமணிக்கு அதிக பங்கு இருக்கிறது என்பதை அறிவோம்.

கொங்கு மண்டலம்
எனவே கொங்கு மண்டலத்தை கொத்தாக அள்ள எஸ் பி வேலுமணி உதவியதுதான் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஓபிஎஸ்ஸுக்கு கிடைக்கவிடாமல் செய்தது என்பதால் எடப்பாடி பழனிச்சாமி, அந்த பொருளாளர் பதவியை வேலுமணிக்கு கொடுக்க விரும்புகிறார். தற்போது ஓபிஎஸ்ஸுக்கு எதிராக பல மூத்த நிர்வாகிகள் போராடும் நிலையில் யாரை மகிழ வைப்பது, யாரை சமாதானப்படுத்துவது என தெரியாமல் எடப்பாடி பழனிச்சாமி குழப்பத்தில் இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
Recommended Video

ஒற்றைத் தலைமை ரகசிய கூட்டம்
ஒற்றைத் தலைமை என பேச்சு வரும் போது ஓபிஎஸ்ஸும் வேண்டாம் இபிஎஸ்ஸும் வேண்டாம் என்ற நிலையில 3ஆவது நபரை தலைவராக கொண்டு வர கொங்கு மண்டல நிர்வாகிகள் எஸ் பி வேலுமணி, சி விஜயபாஸ்கர் உள்ளிட்டோர ரகசிய ஆலோசனை நடத்தியதையும் எடப்பாடி பழனிச்சாமி அவ்வப்போது நினைவுப்படுத்தி பார்ப்பதாக சொல்லப்படுகின்றன. மேலும் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கொங்கு மண்டலத்தை அப்படியே "வாரி சுருட்ட" திமுக வியூகம் வகுத்து வருகிறது. அதை முறியடிக்க இபிஎஸ் தரப்பு முயற்சி செய்யவுள்ளது. எனவே இந்த முயற்சி வெற்றி அடைய எஸ் பி வேலுமணியை பகைத்து கொள்ள கூடாது என்பதில் எடப்பாடி பழனிச்சாமி கறாராக இருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.












Click it and Unblock the Notifications