அந்த ஒரே எண்ணத்தோடு தான் செயல்படுகிறேன்.. சசிகலாவின் அடுத்த ஆடியோ! திகைப்பில் எடப்பாடியார்!
சென்னை: அம்மா விட்டுச் சென்ற பணியை நாம் செய்யணும்,, அந்த ஒரே எண்ணத்தோடுதான் நான் செயல்பட்டு கொண்டிருக்கிறேன் என்று அதிமுக தொண்டர் ஒருவரிடம் சசிகலா பேசியதாக 7வது ஆடியோ வைரலாகி வருகிறது.
சொத்துகுவிப்பு வழக்கில் நீதிமன்றம் விதித்த 4 வருடம் சிறை தண்டனை முடிந்த பின்னர் கடந்த ஜனவரி மாதம் சசிகலா விடுதலையானார். சசிகலா சிறையில் இருந்த வந்த பின்னர், அமைதியாக இருந்தார்.
சசிகலா மீண்டும் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற பரபரப்பு தேர்தலுககு முன்பு எழுந்தது. அப்போது சசிகலா யாரும் எதிர்பாராத விதமாக அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதனால் அதிமுகவில் அப்போது நிலவி வந்த குழப்பம் முடிவுக்கு வந்தது.

எதிர்க்கட்சி தலைவர்
ஆனால் தேர்தல் முடிந்து அதிமுக தோல்வி அடைந்தது. திமுக ஆட்சிக்கு வந்தது. எதிர்க்கட்சி தலைவர் யார் என்பதில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் ஆகியோரிடையே கடும் போட்டி ஏற்பட்டது. இதில் பெரும்பாலான எம்எல்ஏக்கள் எடப்பாடிக்கு ஆதரவு தெரிவித்ததால் எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.

சசிகலா ஆடியோக்கள்
ஆனால் அதன் பிறகு எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் ஆகியோரிடையே விரிசல் அதிகமாகிவிட்டதாக செய்திகள் பரவின. இது ஒருபுறம் எனில் சசிகலா உடன் ஓ பன்னீர்செல்வம் நெருக்கமாகிவிட்டதாகவும் தகவல்கள் பரவின. இப்படியான ஊகமான தகவல்கள் பரவிக்கொண்டிருந்த வேளையில் திடீரென சசிகலா அதிமுகவிருடன் பேசியதாக ஆடியோக்கள் வெளியாகின.

ஓபிஎஸ் அமைதி
ஒன்றல்ல இரண்டல்ல.. இதுவரை ஆறு ஆடியோக்கள் சசிகலா பேசியதாக வெளியாகி உள்ளது. அவர் பேசிய ஆடியோக்கள் எல்லா வற்றிலும், அதிமுக தொண்டர்களிடம் கட்சி சரியாகிவிடும், எல்லாவற்றையும் நான் பார்த்துக்கொள்கிறேன், கவலைப்பட வேண்டாம் என்பதாகவே இருந்தது. சசிகலா அதிமுக தொண்டர்களிடம் பேசிய ஆடியோக்கள் குறித்து அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான ஓ பன்னீர்செல்வம் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

அதிமுக தொண்டர்கள்
ஆனால் எடப்பாடி பழனிசாமி இந்த கருத்தை திட்டவட்டமாக மறுத்தார். சசிகலா அதிமுக தொண்டர்களிடம் பேசவில்லை என்றும், அமமுக தொண்டர்களிடம் தான் பேசினார் என்றும் கூறினார். இன்று நடந்த அதிமுக நிர்வாகிகள் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, "அரசியலில் இருந்து விலகியதாக ஊடகங்கள் மூலம் சசிகலா அறிவிப்பு வெளியிட்டார்.சசிகலா அமமுக கட்சி தொண்டர்களுடன் பேசிய ஆடியோதான் வெளியானது. அதிமுக தொண்டர்களுடன் சசிகலா பேசவில்லை. அதிமுகவில் குழப்பம் ஏற்படுத்த சசிகலா முயற்சிக்கிறார். அது ஒரு போதும் நடக்காது" என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

அம்மா விட்டுசென்ற பணி
இந்த சூழலில் மதுரையைச் சேர்ந்த அதிமுக தொண்டர் ஒருவரிடம் சசிகலா பேசியதாக 7வது ஆடியோ வெளியாகி உள்ளது. அந்த ஆடியோவில் அம்மா விட்டுச் சென்ற பணியை நாம் செய்யணும்,, அந்த ஒரே எண்ணத்தோடுதான் நான் செயல்பட்டு கொண்டிருக்கிறேன், தொண்டர்கள் அனைவரும் என் பக்கம் இருப்பது தெரிகிறது அதிமுக நல்லா இருக்கனும், மக்களுக்கு நல்லது செய்யனும் அது நிச்சயம் நடக்கும் தொண்டர்கள் கவலை படாதிங்க.. என்று பேசியதாக பரவி வருகிறது.

வழக்கு நிலுவை
இந்த ஆடியோ மற்றும் எடப்பாடி பேட்டி குறித்து சசிகலாவின் ஆதரவு தரப்பினர் கூறும் போது. சசிகலா ஒருபோதும் நான் அண்ணா திமுகவில் இல்லை என்று சொல்லவில்லை. அது சம்பந்தமாக வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அவர் தேர்தலுக்கு மட்டும் பிரச்சாரம் செய்வதில் இருந்து மட்டும் தான் ஒதுங்கி இருக்கிறேன் என்று சொல்லியிருந்தார். எனவே சசிகலா மீண்டும் அரசியலுக்கு வருவார். அதிமுகவில் அவருக்குஇருக்கும் ஆதரவை பார்ப்பீர்கள் என்றார்கள்.












Click it and Unblock the Notifications