கைவிட்ட கொங்கு.. தெற்கில் அதிமுகவுக்கு செம அடி! வடக்கில் கை கொடுத்த வன்னியர் வாக்குகள்! எப்படி?
சென்னை: தலைமையிலான தமிழக வெற்றி கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருப்பது பெரிய செய்தியாக இருந்தாலும், மறுபுறம் அதிமுக தோற்றாலும் ஏறக்குறைய 50 எம்.எல்.ஏ.க்களை பெற்று ஓரளவு தனது செல்வாக்கை காப்பற்றிக் கொண்டுள்ளது. இந்தத் தேர்தலில் கொங்கு மண்டலம் அதிமுகவுக்கு எதிர்பார்த்த அளவிற்கு கை கொடுக்கவில்லை. பல முக்கிய தொகுதிகளில் அந்தக் கட்சி பின்னடைவை சந்தித்தது. ஆனால் அதிமுக வட மாவட்டங்களில் முற்றிலும் சரிவைச் சந்திக்கவில்லை. அதற்கு முக்கிய காரணமாக பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் அதன் வாக்கு வங்கி பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய திருப்பமாக 2026 சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன. தமிழக வெற்றி கழகம், தனது முதல் தேர்தலிலேயே மிகப் பெரிய சாதனை புரிந்துள்ளது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

மொத்தம் 234 தொகுதிகள் கொண்ட தமிழ்நாடு சட்டப்பேரவையில், பெரும்பான்மை பெற 118 இடங்கள் தேவைப்படும். இந்த நிலையில், தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.
2026 தேர்தல் முடிவுகள்
இது முதல் தேர்தலிலேயே ஒரு கட்சிக்கு கிடைக்கும் அபூர்வ வாய்ப்பு பார்க்கப்படுகிறது. மேலும், ஒரு கோடியே 62 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்றிருப்பதும் கவனிக்கத்தது. தமிழகத்தில் ஆளும் கட்சியான திமுக 2ஆம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ள நிலையில், அதிமுக 3வது இடத்தில் உள்ளது. அதே நேரத்தில் திமுக போல அதிமுகவும் ஓரளவு கணிசமான எம்.எல்.ஏ.க்களை பெற்றுள்ளது. அதே நேரத்தில் அதிமுக வலுவாக இருந்த கொங்கு மண்டலம், தென் மாவட்ட முக்குலத்தோர் வாக்குகள் தற்போது கைகொடுக்கவில்லை.
அதிமுக தோல்வி
ஆனால் அதிமுக வட மாவட்டங்களில் முற்றிலும் சரிவைச் சந்திக்கவில்லை. அதற்கு முக்கிய காரணமாக பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் அதன் வாக்கு வங்கி என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். அதிமுக வெற்றி பெற்றுள்ள பல தொகுதிகளில், பாமக வலுவாக உள்ள பகுதிகள் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளன. சுமார் 30க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாமகவின் கோர் வாக்கு வங்கியான வன்னியர் வாக்குகள் கை கொடுத்திருப்பதாக தேர்தல் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
வன்னியர் வாக்கு வங்கி
குறிப்பாக வடதமிழகத்தில், வன்னியர் சமூக வாக்குகள் ஒருங்கிணைந்து அதிமுகக்கு சென்றதே இந்த வெற்றிக்கு அடிப்படை என அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதற்கு முக்கிய காரணம் பாமக்வின் அன்புமணி ராமதாஸ். கடந்த சில ஆண்டுகளாக தந்தை உடன் ஏற்பட்ட மோதலால் தனித்த அரசியல் பாதையில் சென்றாலும், இந்தத் தேர்தலில் அவரது அணுகுமுறை மாறியது. வாக்குகள் சிதறாமல் ஒருங்கிணைக்கப்பட்டதால், அதிமுக பல இடங்களில் வெற்றி பெற முடிந்தது.
பாமக வாக்கு வங்கி
திருத்தணி, செய்யாறு, மதுராந்தகம், ஆற்காடு, ஜோலார்பேட்டை, பாலக்கோடு, அரூர், செங்கம், ஆரணி, மயிலம் போன்ற பல வடதமிழக தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற பாமக வாக்கு வங்கி முக்கிய காரணமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. ஒரு பக்கம் தவெக அலை வீசியபோதும், இந்த பகுதிகளில் அந்த அலை கட்டுப்படுத்தப்பட்டது என்பது கவனிக்கத்தக்கது.
அன்புமணி ராமதாஸ்
மற்றொரு முக்கிய அம்சம் என்னவென்றால், வன்னியர் வாக்குகள் பிளவுபடும் என்ற எதிர்பார்ப்பு இந்த முறை நடக்கவில்லை. பலர் எதிர்பார்த்தபடி வாக்குகள் சிதறாமல் ஒரே திசையில் சென்றதால், அதிமுகக்கு நேரடி பலன் கிடைத்துள்ளது. அதே நேரத்தில், பாமக தரப்பில் ஒரு சிறிய அதிருப்தியும் உள்ளது. அதிமுக வாக்குகள் முழுமையாக பாமக வேட்பாளர்களுக்கு செல்லவில்லை என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.
தமிழக அரசியல்
இருந்தாலும், இந்தத் தேர்தல் முடிவுகள் மூலம் பாமகவின் நிலை தமிழக அரசியலில் இன்னும் வலுவாக உள்ளது என்பது மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தத்தில், கொங்கு மண்டலத்தில் ஏற்பட்ட பின்னடைவை வடதமிழகத்தில் ஈடு செய்த அதிமுக, முழுமையான தோல்வியைத் தவிர்த்துள்ளது. அதற்குப் பின்னால் பாமகவின் வன்னியர் வாக்கு வங்கி முக்கிய காரணம் என்கின்றனர் தமிழக அரசியலை உன்னிப்பாக கவனிக்கும் அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications