துண்டை போடும் ’தேனி’ குரூப்.. அவர் வர்றாரா? நான் என்ன செய்ய? தடதடக்கும் அதிமுக..அதிர்ச்சியில் ’மாஜி’
சென்னை : நல்லாத்தானே போய்கிட்டு இருக்கு என்பது போல் இருந்த அதிமுகவில் கடந்த சில நாட்களாக சில புயல்கள் மென்மையாக வீசத் தொடங்கியுள்ளன. ஓபிஎஸ்ஸை மீண்டும் அதிமுகவுக்குள் கொண்டு வர திரைமறைவு நடவடிக்கைகள் நடைபெற்று வரும் நிலையில், ஏற்கனவே பதவியில் இருக்கும் மாஜிக்கள் அதிருப்தியில் இருப்பதாகவும் அதன் வெளிப்பாடே ஆர்.பி.உதயகுமாரின் பேச்சு என்கின்றனர் அதிமுகவினர்.
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பாக கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி தற்போது பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் அவர் சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் அதிமுக தோல்வியை சந்தித்து வருகிறது.

அதற்கு முன் அதிமுகவில் தனிப்பெரும் ஆளுமை கொண்ட தலைவராக திகழ்ந்தவர் முன்னாள் முதலமைச்சரும் அந்த கட்சியின் பொது செயலாளராக இருந்தவருமான ஜெயலலிதா. அவரது மறைவுக்குப் பிறகு அதிமுக தொடர்ந்து பல்வேறு சிக்கல்களையும் வழக்குகளையும் சந்தித்து வருகிறது.
ஓ.பன்னீர்செல்வம்: ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது சிறைக்குச் செல்ல நேர்ந்த போதெல்லாம் முதலமைச்சராக மூன்று முறை பொறுப்பு வகித்தவர் ஓ.பன்னீர்செல்வம். குறிப்பாக ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய நபராகவும் திகழ்ந்தார். ஓ.பன்னீர்செல்வத்தை ஜெயலலிதாவே பல நேரங்களில் புகழ்ந்து பேசி இருக்கிறார். இருந்தபோதும் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு அதிமுகவில் இருந்து நீக்கப்படும் நிலைமைக்கு தள்ளப்பட்டார் ஓ.பன்னீர்செல்வம்.
அதிமுகவில் சலசலப்பு: ஜெயலலிதா மறைந்த போது முதலமைச்சராக இருந்த அவர் அதற்குப் பிறகு சசிகலா நெருக்கடியால் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததோடு நள்ளிரவில் தர்ம யுத்தத்தையும் தொடங்க வேண்டி இருந்தது. தொடர்ந்து சசிகலாவும் சிறைக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டபோது எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து பல்வேறு கட்ட பேச்சு வார்த்தைகள் சமாதான தூதுகளுக்கு பிறகு எடப்பாடி பழனிச்சாமி உடன் கைகோர்த்த ஓ.பன்னீர்செல்வம் துணை முதலமைச்சர் ஆக பொறுப்பேற்றுக் கொண்டார்.
எடப்பாடி பழனிச்சாமி: ஆட்சிக்கு எடப்பாடி பழனிச்சாமி கட்சிக்கு ஓபிஎஸ் என பேச்சுவார்த்தையின் அடிப்படையில் சுமூகமாக சென்று கொண்டு இருந்த கட்சியில் ஒற்றை தலைமை விவகாரத்தால் ஓபிஎஸ் ஓரம் கட்டப்பட்டார். அதிமுகவின் பெரும்பான்மையான மாவட்ட செயலாளர்களும் கட்சியினரும் எடப்பாடி பழனிச்சாமியின் பக்கம் சென்ற நிலையில் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார் ஓபிஎஸ். கீழ் கோர்ட்டில் இருந்து உச்ச நீதிமன்றம் வரை சென்றும் அவரால் அதிமுகவில் மீண்டும் நுழைய முடியவில்லை.
மீண்டும் ஓபிஎஸ்: இந்நிலையில் தற்போது அதிமுக தொண்டர்கள் மீட்புக் குழு என ஒன்றை ஆரம்பித்து பாஜக கூட்டணியில் இணைந்து மக்களவை தேர்தலிலும் முதன்முறையாக போட்டியிட்டுள்ளார் ஓபிஎஸ். இந்த நிலையில் மக்களவைத் தேர்தல் முடிவுகள் அதிமுகவுக்கு சாதகமாக இருக்காது என தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதனால் கடும் அதிருப்தியில் இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. அதே நேரத்தில் அதிமுகவில் இருக்கும் சில சீனியர்கள் மீண்டும் ஓபிஎஸ்ஐ கட்சிக்குள் கொண்டுவர வேண்டும் என கூறியதாக கூறப்படுகிறது.
நிர்வாகிகள் அதிருப்தி: இல்லையென்றால் தாங்கள் பாஜக பக்கம் சாய வேண்டி இருக்கும் என தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இதன் காரணமாக வேறு வழியின்றி சட்டசபை தேர்தலைக் கருத்தில் கொண்டு ஓபிஎஸ்ஐ மீண்டும் கட்சிக்குள் கொண்டு வந்து விடலாமா என எடப்பாடி பழனிச்சாமி திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கான வேலைகள் திரை மறைவில் நடந்து வருவதாக கூறப்பட்டாலும் அதற்கு எதிராகவும் சில முன்னாள் அமைச்சர்கள் இருக்கிறார்கள். அந்த வகையில் ஓபிஎஸ் கட்சிக்குள் இருந்து வெளியேற்றப்பட்ட பின் மீண்டும் முக்கியத்துவம் பெற்ற ஆர்பி உதயகுமார், நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.
ஆர்பி உதயகுமார்: ஏற்கனவே ஓபிஎஸ் தரப்பில் இவர்கள் இருந்தவர்கள் தான்.. ஓபிஎஸ் சென்ற பிறகு இவர்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் கிடைத்திருக்கிறது. தற்போது அவர் மீண்டும் கட்சிக்குள் வந்தால் தங்களுக்கு முக்கியத்துவம் குறைந்து விடுமோ என்ற அதிர்ச்சியில் அவரை கட்சிக்குள் கொண்டு வரவே கூடாது என கூறியிருப்பதாக தெரிகிறது. இதன் அடிப்படையில் தான் இன்று செய்தியாளர்கள் சந்திப்பின்போது ஓபிஎஸ் தரப்பை கடுமையாக விமர்சித்திருக்கிறார் ஆர்பி உதயகுமார்.
ராமர் லட்சுமணன்: இதுதொடர்பாக மதுரையில் பேசிய ஆர்பி உதயகுமார்,"சில ஊடகங்களில் முன்னாள் மூத்த அமைச்சர் செங்கோட்டையின் தலைமையில் கூட்டம் என்றும், எடப்பாடியாருக்கு லட்சுமணன் போல திகழும் எஸ்பி வேலுமணி கூட்டம்போடுகிறார் என்றும் சம்பந்தமில்லாமல் ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன. இன்றைக்கு அதிமுகவை பற்றி தான் பத்திரிகையில் பேசப்பட்டு வருகின்றன, ஏனென்றால் தமிழகத்தின் எதிர்காலம் அதிமுகவை சுற்றி தான் உள்ளது.
மீண்டும் இல்லை: நான் எடப்பாடியாரின் ஒப்புதலுடன் ஒரு செய்தியை சொல்கிறேன் எந்த காலத்திலும் பன்னீர்செல்வத்தை அதிமுகவில் மீண்டும் சேர்க்க மாட்டோம், அவர் சேர்வது என்று துளி அளவு உண்மை இல்லை, எந்த ரகசிய விவாதம் நடைபெறவில்லை. இதை நான் எடப்பாடியாரின் உத்தரவு படிதான் கூறுகிறேன். இன்றைக்கு எடப்பாடியார் ஒரு கட்சியில் கூட்டணி வைத்து பேசும்பொழுது, டெல்லியில் இருந்து ஏஜமானர்கள் அவர்களுக்கு மத்திய அமைச்சர் தருகிறோம் என்று கடத்திப் போய் விடுகிறார்கள்.
அதிமுகவில் குழப்பம்: ஆனால் இன்றைக்கு எடப்பாடியார் எதுவுமே மனம் தளராமல், தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறார். அதிமுகவின் 50 ஆண்டு கால வரலாற்றில் பலமுறை பிளவு ஏற்பட்டது, அதனைத் தொடர்ந்து மீண்டும் எழுந்துள்ளது ஆனால் இந்த அளவுக்கு வழக்குகளை சந்தித்தது இல்லை இது பன்னீர்செல்வத்தின் சுயநலம்தான் பொதுநலமில்லை" என கூறினார். அதிமுகவில் ஓபிஎஸ்ஸை இணைய வைப்பதாக பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருப்பதாகக் கூறப்படும் நிலையில் அப்படி இல்லை என எடப்பாடியே சொன்னதாக ஆர்பி உதயகுமார் கூறியிருப்பது அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications