விஜய்யை இழுப்போம்.. ஜெயலலிதாவின் ஃபார்முலாவை கையில் எடுத்த எடப்பாடி.. அப்போ விஜயகாந்த் கதிதான்!
சென்னை: சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், அனைத்துக் கட்சிகளும் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஒவ்வொரு தொகுதிக்கும் சென்று மக்களை சந்தித்து திமுகவுக்கு எதிராக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அதேபோல் பாஜகவுடன் கூட்டணி அமைத்தது ஏன் என்ற விளக்கத்தையும் அளித்து வருகிறார்.
இதனிடையே கரூர் விவகாரத்தில் தவெகவுக்கு பின்னடைவு ஏற்பட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமி விஜய்க்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்து வந்தார். இந்த சூழலில், நாமக்கல் மாவட்டம் குமாரப்பாளையம் தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அதிமுக தொண்டர் ஒருவரின் கைகளில் தவெக கொடி இருந்தது.

தவெக கொடியை பார்த்த எடப்பாடி பழனிசாமி, கொடி பறக்குது.. பிள்ளையார் சுழி போட்டாங்க.. எழுச்சி.. ஆரவாரம் என்று உற்சாகமாக பேசினார். இதையடுத்து பொள்ளாச்சி ஜெயராமன், தவெக தொண்டர்களுக்காக நாங்கள் குரல் கொடுப்போம் என்று பேசி இருக்கிறார். இதனால் தவெக உடன் கூட்டணி அமைக்க அதிமுக விரும்புவதாக தெரிகிறது. இதற்கு தவெக தரப்பும் இதுவரை எந்த மறுப்பும் அளிக்காமல் இருந்து வருகிறது.
பாஜக உடன் கூட்டணி அமைத்திருந்தாலும், திமுகவை வீழ்த்த அது மட்டும் போதாது என்று எடப்பாடி பழனிசாமி நினைக்கிறார். ஏனென்றால் 2019 தொடங்கி ஒவ்வொரு தேர்தலிலும் திமுகவை வீழ்த்த எடப்பாடி பழனிசாமி புதிய புதிய ஃபார்முலாவை கையில் எடுக்கிறார். ஆனாலும் திமுக கூட்டணியை எடப்பாடி பழனிசாமியால் இதுவரை தோற்கடிக்க முடியவில்லை.
ஒரு கட்டத்தில் இடைத்தேர்தல் தோல்வியை தவிர்க்க எடப்பாடி பழனிசாமி இடைத்தேர்தலையே அதிமுக புறக்கணிப்பதாக அறிவித்தார். இதன்பின் திமுக கூட்டணியை பிரிக்க வேண்டும் என்ற முயற்சியில் விசிக, சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகளுக்கு வெளிப்படையாக அழைப்பு விடுத்தார். ஆனாலும் ஆக்கப்பூர்வமாக எதுவும் நடக்கவில்லை. இந்த நிலையில் தவெகவுக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு இருந்து வருகிறது.
குறிப்பாக இளைஞர்கள், முதல் தலைமுறை வாக்காளர்கள் மத்தியில் விஜய்க்கு மிகப்பெரிய ஆதரவு உள்ளது. ஆனால் எடப்பாடி பழனிசாமிக்கு அதுதான் மிகப்பெரிய சிக்கல். எடப்பாடி பழனிசாமியால் புதிய வாக்காளர்களை ஈர்க்க முடியவில்லை. இதனை நன்றாக எடப்பாடி பழனிசாமி உணர்ந்துள்ளார். இதன் காரணமாகவே தவெகவை தங்கள் பக்கம் இழுக்க எடப்பாடி பழனிசாமி முடிவு செய்திருக்கிறார்.
விஜய் கூட்டணிக்கு வந்தால், அதிமுகவின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியான ஒன்றுதான். அதேபோல் அதிமுக தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு மேல் ஒருமுறை கூட எதிர்க்கட்சியாக இருந்ததில்லை. அதிமுக நிர்வாகிகள் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை அதிகாரத்தில் இருந்து பழகியவர்கள். இதனால் விஜய்யை கூட்டணிக்குள் இழுத்து வெல்வதே எடப்பாடி பழனிசாமியின் பிரதான நோக்கமாக உள்ளதாக பார்க்கப்படுகிறது.
இதன்பின் தவெகவை கொஞ்சம் கொஞ்சமாக உடைத்துவிடலாம் என்று எடப்பாடி பழனிசாமி கணக்கு போடலாம். ஏனென்றால் 2011ல் திமுக ஆட்சிக்கு எதிராக மிகப்பெரிய அதிருப்தி மக்கள் மத்தியில் இருந்த போதும், ஜெயலலிதா தேமுதிக உடன் கூட்டணி அமைத்தார். அப்போது அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் வென்றதோடு, தேமுதிக எதிர்க்கட்சியானது.
தேமுதிக உடன் கூட்டணி அமைத்து வென்ற போதும், அதிமுக கொஞ்சம் கொஞ்சமாக தேமுதிகவை உடைத்தது. எம்எல்ஏ பதவி பறிபோய்விடும் என்பதால், தேமுதிக அதிருப்தி எம்எல்ஏ-க்கள் என்று ஒரு புதிய அணி உருவாகியது. அதனை 5 ஆண்டுகளில் ஜெயலலிதா செய்து காட்டினார். இறுதியாக அவர்களில் பலரும் அதிமுகவில் ஐக்கியமாகினர்.
அதே ஃபார்முலாவில் தவெகவை அணுக எடப்பாடி பழனிசாமி முடிவு செய்திருப்பதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர். ஒருவேளை தவெக தலைவர் விஜய் அதிமுக உடன் கூட்டணி அமைக்க முடிவு செய்தால், புதிதாக பதவிக்கு வந்த தவெகவினர் பலரும் அவருக்கு எதிராகவே திரும்ப வாய்ப்பு உள்ளது. இதனால் விஜயகாந்துக்கு நேர்ந்த கதியே விஜய்க்கும் ஏற்படலாம்.
அதேபோல் தவெகவுடன் கூட்டணி அமைக்க வேண்டுமென்றால், எடப்பாடி பழனிசாமி பாஜகவை உதறி தள்ள வேண்டும். ஆனால் பாஜகவை கூட்டணியில் இருந்து வெளியேற்றினால், டெல்லி மேலிடம் எடப்பாடி பழனிசாமிக்கு மிகப்பெரிய நெருக்கடியை உருவாக்கலாம். செங்கோட்டையனை போல் எஸ்பி வேலுமணியும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக திரும்பவும் வாய்ப்புகள் உள்ளது.
இதனால் அதிமுக - பாஜக கூட்டணிக்குள் விஜய் இணைய வாய்ப்புகள் குறைவு என்றே பார்க்கப்படுகிறது. திமுகவை வீழ்த்த வேண்டுமென்ற நோக்கில் கொள்கை எதிரியான பாஜகவுடன் கூட்டணி அமைத்தால் அது விஜய்க்கும் பின்னடைவு ஏற்படும். ஆனாலும் அடுத்த 3 மாதத்தில் விஜய்யின் முடிவு என்னவாக இருக்கும் என்ற கேள்வியே மக்கள் மனதில் உள்ளது.












Click it and Unblock the Notifications