ஓபிஎஸ் நிலைமையை பாருங்க.. எடப்பாடியும் பாஜகவை விட்டு விலகாவிட்டால்.. பூவுலகின் ஜி சுந்தர்ராஜன் ட்விட்
பாஜகவை நம்பினால் நட்டாற்றில் விடப்படுவோம் என்பது ஓபிஎஸ் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது என்று பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜி சுந்தர்ராஜன் கூறியுள்ளார்.
சென்னை: பாஜகவை நம்பினால் நட்டாற்றில் விடப்படுவோம் என்பது ஓபிஎஸ் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமியும் பாஜகவை விட்டு விலகவில்லை எனில் சீக்கிரமே அதிமுக காணாமல் போய்விடும் என்று பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜி சுந்தர்ராஜன் தனது கருத்தை முன்வைத்துள்ளார்.
அதிமுகவில் கடந்த ஜூலை 11 ஆம் தேதி கூட்டப்பட்ட பொதுக்குழு தொடர்பான வழக்கில் இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
எடப்பாடி பழனிசாமி தரப்பு கூட்டிய பொதுக்குழு செல்லும் எனவும் ஓபிஎஸ் தொடர்ந்த மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்வதாகவும் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு ஓ பன்னீர் செல்வத்திற்கு கடும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

ஒற்றை தலைமை விவகாரம்
அதே சமயம் உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பின் மூலம் எடப்பாடி பழனிசாமி அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என்பது உறுதியாகியுள்ளது. அதிமுகவில் கிட்டத்தட்ட ஓராண்டு காலமாக ஒற்றைத்தலைமை விவகாரத்தால் நடைபெற்று வந்த மோதல் இந்த தீர்ப்பின் மூலம் முடிவுக்கு வந்துவிட்டதாகவே அரசியல் வட்டாரத்தில் சொல்லப்படுகிறது. இதனால் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

டெல்லி ஆதரவு இருப்பதாக
அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்ட நிலையில் அவருக்கு அரசியல் தலைவர்களும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். அதிமுக விவகாரத்தில் ஓ பன்னீர் செல்வத்திற்கு டெல்லி ஆதரவு இருப்பதாக ஆரம்பத்தில் இருந்தே அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது. தற்போது உச்ச நீதிமன்ற தீர்ப்பால் ஓ பன்னீர்செல்வத்திற்கு பெருத்த அடியாக இது அமைந்துள்ளது.

நடுத்தெருவில் நிற்க வேண்டிய நிலைக்கு..
இந்த நிலையில், பாஜகவை, டெல்லியை மலைபோல நம்பி நின்று தற்போது அரசியல் எதிர்காலமே கேள்விக்குறியாகி அரசியல் வாழ்க்கையே சூனியம் என்ற நிலையில் நடுத்தெருவில் நிற்க வேண்டிய நிலைக்கு ஓபிஎஸ் தள்ளிவிட்டப்பட்டிருக்கிறார் என்பது மூத்த பத்திரிக்கையாளர்களின் கருத்தாக உள்ளது. அதிமுக விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பையடுத்து, அதிமுக விவகாரம் குறித்து பல்வேறு தரப்பினரும் தங்கள் பார்வையை முன்வைத்துள்ளனர்.

சீக்கிரமே அதிமுக காணாமல் போய்விடும்
அந்த வகையில், இயற்கை ஆர்வலரும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான ஜி சுந்தர்ராஜன் தனது ட்விட் பதிவில், எடப்பாடியும் பாஜகவை விட்டு விலகவில்லை எனில் சீக்கிரமே அதிமுக காணாமல் போய்விடும் என்று தனது கருத்தை முன்வைத்துள்ளார். இது தொடர்பாக ஜி சுந்தர்ராஜன் தனது ட்விட் பதிவில் கூறியிருப்பதாவது:- 'பாஜகவை நம்பினால் நட்டாற்றில் விடப்படுவோம் என்பது ஓபிஎஸ் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. எடப்பாடியும் பாஜகவை விட்டு விலகவில்லை எனில் சீக்கிரமே அதிமுக காணாமல் போய்விடும்' என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications