"பாஜக கூட்டணியால் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக தற்கொலை"-பத்திரிகையாளர் ஆர்கே பகீர் விமர்சனம்!
சென்னை: பாஜகவுடனான கூட்டணியால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அண்ணா திமுக (அதிமுக) தற்கொலை செய்து கொண்டுவிட்டது; எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட சிலரின் தனிப்பட்ட நலன்களுக்காகவே இந்த கூட்டணியே தவிர அதிமுகவுக்கு இந்த கூட்டணியால் எந்த பயனும் ஏற்படவே ஏற்படாது என்று மூத்த பத்திரிகையாளர் ராதாகிருஷ்ணன் (ஆர்கே) கூறினார்.
பாஜக- அதிமுக கூட்டணி குறித்து சன் நியூஸ் சேனலுக்கு பத்திரிகையாளர் ஆர்கே கூறியதாவது: அதிமுக தற்கொலை செய்து கொண்டதாகவே நான் கருதுகிறேன். தமிழ்நாடு சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டு இருக்கிறது. நடிகர் விஜய்யின் வாக்கு வங்கி என்ன என்பதும் நமக்கு தெரியவில்லை. நடிகர் விஜய்க்கு 12%-18% வாக்குகள் இருக்கும் என்கின்றனர். நிலைமை இப்படி இருக்கும் போது வெறும் 5% அல்லது 3% வாக்குகளே உள்ள பாஜகவுடன் அதிமுக ஏன் கூட்டணி வைத்தது? அப்படி கூட்டணி வைக்க வேண்டிய அவசியம் என்ன? எடப்பாடி பழனிசாமி தன்னை தானே தற்காத்துக் கொள்ளவே ஒரு சர்க்கஸ் நடத்தி இருக்கிறார்.

2026 சட்டசபை தேர்தலில் இந்த கூட்டணியானது அதிமுகவுக்கு நிச்சயம் உதவப் போவதும் இல்லை. இந்த கூட்டணியால் பாஜகவுக்கு மட்டுமே லாபம். தனி மனிதராக எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு பாயாது; அவர் சிறைக்கு போகாமல் இருக்கலாம். இதனைத் தவிர அதிமுகவுக்கு வேறு எந்த ஒரு பயனுமே இல்லை.
வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்றி சட்டமாக்கி இஸ்லாமியருக்கு எதிரான கட்சிதான் பாஜக என மீண்டும் நிரூபித்துள்ளது பாஜக. இதேபோல இந்து ஆலயங்கள், சொத்துகள் தொடர்பாக சட்டம் நிறைவேற்றுமா பாஜக? இதை கேள்விக்குட்படுத்தாமல் தன்னுடைய சுய லாபடத்துக்காக, எம்ஜிஆர் ஜெயலலிதாவின் பாதையை கைவிட்டுவிட்டார் எடப்பாடி பழனிசாமி. இதற்கு எடப்பாடி பழனிசாமி, காவி உடையே போட்டு நடக்கலாம்தான். பாஜகவுக்கு உகந்தது மதவன்முறைகள்.. இனி தமிழ்நாட்டில் அதையும் நடத்திவிடலாம். இவ்வாறு பத்திரிகையாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications